"கார்த்திகை மழை பொழிந்து
ஆர்ப்பரித்து மலை இறங்கி
ஊர்வலமாய் வயல் தாண்டி
மார்கழியில் குளம் ஆனாள்"
"கார்த்திகை தீபம் ஒளிர
மார்பினில் அவனை ஏற்றி
சேர்ந்து ஒன்றாய் வாழ
மார்கழியில் தவம் இருந்தாள்"
"தையில் குளநீர் தெளிய
தையல் திருமணம் வேண்டி
தையில் முன்பனி நீராடி
தையல் தன்தவம் முடித்தாள்"
"தையோடு மார்கழி சித்திரை
தையல் சேர்ந்து கொண்டாட
தையில் வழி பிறக்குமென
தையல் பொங்கல் பொங்கினாள்"
"தை பிறந்தால் வழிபிறக்கும்
தைரியமாய் நீ சொல்லுகிறாய்
தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய்
தையலே சித்திரைப்பெண்ணே வா"
"அருவியில் தவம் முடித்து
இருவராய் சேர்த்தது தையே
ஊருக்கு பொங்கல் படைத்து
பெருவிழா தந்தது தையே"
"முருகிற்கு அழகு சேர்த்து
ஒருபூசம் தந்தது தையே
பெருமை பற்பல படைத்து
அருமை மாதமாகியது தையே"
"பெருகிய அறிவு கொண்ட
புருவம் நெளிக்கும் அழகியே
ஆருடம் கூறுபவர் யாரோ ?
வருடம் தையா? சித்திரையா ? "
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment