நிரந்தரமான நீலிக் கண்ணீர் !


நீலிக் கண்ணீர் !

சொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லிள் வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?

 

பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துண்புறுத்தப்பட்டனர். சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

 

இவை முற்றிலும் அத்வைத,துவைத தத்துவங்களுக்கு எதிரானவை, ஏனென்றால் படைப்பு என்பது தான்தோன்றி (சுயம், சுயம்பு, வெளிப்பாடு) இறைவனின் சித்தத்தால் ஏற்படுவது என்பதே இவர்களின் நம்பிக்கை. சமணர்களும் அத்வைதிகளும் வாதத்தில் ஈடுபட்ட போது, அத்வைதிகள் எல்லாம் இறைவன் அல்லது பரம்பிரம்மத்தின் சித்தம், தான் தோன்றி என்றார்கள். நீலிகேசி அதை பலமாக மறுத்தாள், ஆதாரம் கேட்டாள், அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தார்கள், அப்பொழுது நீலிகேசி வெகுண்டு 'நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதைத் தான்தோன்றி, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?' என்று ஆவேசமாகவே கேட்டாள். இதற்கு மேல் இவளிடம் வாதத்தில் வெல்லவே முடியாது என்பதால் அத்வைத சைவ ஆதாரவு அரசரின் ஆதரவுடன் அவளை சிறைப்பிடித்து மரணதண்டனைக் கொடுக்கப்போவதாக இழுத்துச் சென்றார்கள். அப்போது அவள் கண்ணீர் விட்டு சபித்திருக்கிறாள். அவளது கண்ணீரைப் பார்த்து...'எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள் பார்...ஹஹ்ஹஹ் ஹா' என்று கேலி செய்து பலமாக சிரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சமணவாதங்களின் போதெல்லாம் நீலியின் கண்ணீரை குறிப்பிட்டு தூற்றுவதே வழக்காக மாறி, பழிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பதமாக மாறியது.

 

உண்மையில் நீலி பயந்து போயோ, பொய் சொல்லிவிட்டதாக நினைத்தோ கலங்கவில்லை, உண்மையை உணராத மூடர்களிடம் சிறைபட்டுவிட்டேனே என்றே கண்ணீர்விட்டு வருந்தினாள். சமண மதப் பெண் வீரத் துறவியை பழிக்கும் விதாமாக இழித்துக் கூறிய சொல் நாளடைவில் போலியாக அழுபவர்கள் குறித்த பழிப்புச் சொல் ஆகியது. 'நீலி' என்ற அடைமொழியாக மாறி ஒரு சொல் காலம் கடந்து நிற்பதால் இவை வரலாறு வழி வந்தவை என்று சொல்லிவிட முடியும்.

 

******

 

பொதுவாக இனிப்பு, உப்பு சுவை சேர்ந்திருந்தாலும் இளநீரும், கண்ணீரும் தூய்மையானது என்றே சொல்லுவார்கள், ஏனெனில் வெளி மாசு அவற்றில் கலந்திருக்காது, கண்களில் மாசு சேரும் போது அதை அகற்ற சுரக்கும் கண்ணீர் தூய்மையற்றதாக இருக்க முடியாது. இவை எதிர்பாராமல் தேவையான நேரத்தில் சுரக்கும் கண்ணீர். உணர்வின் போது சுரக்கும் கண்ணீர் அதன் புனித ,தன்மை தூய்மை குறித்த புரிதலுடன் எண்ணத்தில் கட்டுப்பாட்டுடனேயே அதனை வெளிப்படுத்த வேண்டும். என்றுமே அழாத ஒருவர் அழும் போது அவரது சோகத்தின் அளவுகோல் கண்ணீர் தான் என்பதால் அதன் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்திக் கூற கண்ணீர் புனிதமானது என்று சொல்லப்படுகிறது. மன ஈரத்தின் உருதான் கண்ணீர். கண்ணீரை பிடிவாதத்தின் அளவு கோலாக்கி தொட்டதற்கு கண்ணீர் சுரப்பவர்களின் கண்ணீர் தூற்றப்படுகிறது. மன எண்ணத்திற்கு மாற்றாக வெளிப்படையாக கண்ணீர் வரும் போது அவை போலிக் கண்ணீர் என்று சொல்லப்படுகிறது. போலிக் கண்ணீர் சுரக்கும் போது முகமே காட்டிக் கொடுத்துவிடும். எனென்றால் அவை மனத்தூண்டிதலால் இயல்பாக ஏற்படுபவையே அல்ல. இறைக்காக ஏங்கி எவரும் சிக்கவில்லை அல்லது சிக்கிவிட்டது என்பதற்காக முதலலகள் வடிக்கும் கண்ணீரே முதலைக்கண்ணீர் எனப்படுக்கிறது. அதாவது தன்னலம் சார்ந்து வெளிப்படும் கண்ணீர் முதலைக்கண்ணீர் எனப்படுகிறது. நெடும் தொடரைப் பார்த்துவிட்டு தாய்குலங்களும் சில ஆண்களும் கூட கண்ணீர் வடிப்பது 'குறுகிய கால மெகா சீரியல்' அல்லது 'தேவையற்ற' கண்ணீர் என்று சொல்லலாமா ? ஏனென்றால் இந்த கண்ணீரினால் தொடர் முடிந்த அடுத்த நிமிடமே மன பாதிப்புகள் எல்லாம் மறைந்து போய்விடும். ஆனந்த கண்ணீர் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. பளார் என்று கன்னத்தில் அரை விட்டு அடுத்த நிமிடமே... 'என் செல்லாம் இல்லே...' கணவர் பல்லிளித்து மன்னிப்புக் கேட்கும் அடுத்த நிமிடமே வலியால் வரும் கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆகிவிடும். இதுப்போல் ஆனந்த கண்ணீருக்கு நிறைய காட்டுகள் வைக்கலாம். சபை நடுவில் போற்றப்படுபவர்கள் எவருக்குமே முதல் முறை உணர்ச்சிப் பெருக்கால் வருவது ஆனந்தக் கண்ணீர்..

 

கண்ணீரின் புனிதத் தன்மை கருத்தி தண்ணீரைப் போலவே வீணாக்கமல் பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறார்கள்

 

***

 

யாரையும் பழிப்பதற்க்காக 'நீலிக் கண்ணீர்' என்ற பதத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணை, ஒரு சமயத்தை சாடுவதற்காக வலிந்து உருவாக்கியச் சொல் அது. அந்த அநீதிக்கு நாமும் துணை போகவேண்டாம். ஏனென்றால் நீலி போலிக் கண்ணீர் வடிக்கவில்லை, நீதியின்மைக்கு எதிராக வருத்தப்பட்டுதான் கண்ணீர் விட்டாள்.

பதிவர்: கோவி.கண்ணன்


No comments:

Post a Comment