பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை



இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும்.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. நூறு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின.
கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 வருடங்களுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.
 கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இப்பிரதேசத்தில் மிக முக்கியத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலாகப் பரிச்சயமான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை ஆக்கிரமிப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும். வடமேற்கிலிருந்து எந்த பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும் ,சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்த கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் நிரூபிக்கப் படவில்லை. இது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
 மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.
 அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.
 முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம்,19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாக்கிஸ்தானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாக்கிஸ்தான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
   இந்தியா 28 மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
 மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
 இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மக்கள்தொகை 102 கோடிக்கும் மேலாக மதிப்பிடப் பட்டு, உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. இந்தி மொழி, இந்திய அரசின் ஆட்சி மொழியாகும். ஆங்கிலம், உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.அதோடு, ஒவ்வொரு மாநிலமும் தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. 80 கோடிக்கும் மேலான இந்தியர்கள் (80.5%), இந்துக்கள் ஆவர். மற்ற மதத்தினவர்கள், இசுலாமியர்கள் (13.4%), கிறித்தவர்கள் (2.3%), சீக்கியர்கள் (1.9%), பௌத்தவர்கள்(0.8%), சமணர்கள் (0.4%) ஆவர்.[20] மக்கள்தொகையில் 8.1% ஆதிவாசிகள் ஆவர்.
இந்தியாவில் தேசிய விளையாட்டு, ஹாக்கி இந்தியாவால் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இருப்பினும், கிரிக்கெட் தாம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.
இந்தியா பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்களின் துவக்க இடமாகவும் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அவை கபடி, சடுகுடு, பெஹெல்வாணி, மற்றும் கில்லி தண்டா ஆகும். இந்திய வீர விளையாட்டுக் கலைகளான கலரிப்பயட்டு, மல்யுத்தம், சிலம்பாட்டம், வர்மக் கலை ஆகியவற்றின் முற்கால வடிவங்கள் இந்தியாவில் தொடங்கின.
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய பலங்களில் சிலவாகும். இருந்தாலும்,பாக்கிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.

No comments:

Post a Comment