நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 13A

 [சீரழியும் சமுதாயம்] 

9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture]

நாம் வாழும் சமுதாயம் ஒழுக்கமானதாக இல்லாத போது, நாம் மட்டும் ஏன் ஒரு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி ஒருவரிடம் எழும் பொழுது, அவர் ஒன்றிலும் கவலை இல்லாதவராக, "நான் எதையும் பற்றி கவலைப்பட போவதில்லை, எனக்கு, என் வாழ்க்கையின் மீது, கட்டுப்பாடு இல்லை " என்று அவர் எந்த வெட்க உணர்வும் இன்றி அல்லது அதை இழந்து விட்டவராக சொல்லுவதை கேட்க்கிறோம். இது தான் எந்த மதிப்புகளையும் மற்றும் தரங்களையும் கொண்டிராத அழியும் ஒரு சமுதாயத்தில் பொதுவாக காண்கிறோம். இவர்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதை மறுத்தலைக் காண்கிறோம். இப்படியான நிலையை 'இல்லாமை தத்துவம்' அல்லது 'நீலிசம்' என்று அழைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். Nihilism [நிஹிலிசம் அல்லது நீலிசம்], என்பது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil இருந்து பிறந்த ஒரு சொல்லாகும்.

உன் வாழ் நாளில் ,நீ செய்த முயற்சிகளின் பின்னாலோ அல்லது நீ அனுபவித்த துன்பங்களின் பயனாலோ, 'வாழ்க்கை அர்த்தம் அற்றது' என்று சலிப்பு கொண்டு, 'நாம் ஏன் ஏதாவது செய்யவேண்டும், நாம் ஏன்  கவலைப்பட வேண்டும்?' என உன் மனம், கட்டாயம் ஒரு கணம் கேட்டிருக்கும். எனவே நாம் அனைவரும் நீலிசம் [நிஹிலிசம்]  என்ற தத்துவத்தின் தாக்கத்தை, அது என்ன வென்று தெரியாமலே, உணர்ந்தது இருப்போம்.அனுபவித்திருப்போம். ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னேற்றம் அல்லது முயற்சி வீணாகும் பொழுது, "என்ன பிரயோசனம்" [“what’s the point?”] என்று உங்களையே நீங்கள் கேட்டிருக்கலாம். ஏன் என்றால் நாம் ஒரு நாள் கட்டாயம் சாகத்தான் போகிறோம், எனவே அது எதுவும் எமக்கு தேவையில்லை [none of it will matter] என, உங்கள் வாழ்வில் ஏற்பட்ட, தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள், துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவையால், நீலிசத்துடன் [நிஹிலிசம்] தெரிந்தும் தெரியாமலும் நீங்கள் மோதியிருப்பீர்கள். உதாரணமாக இந்த கட்டுரையை உங்களுக்கு நான் எழுதும் பொழுது, சில வேளையில், சில சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரையை எழுதுவதால் என்ன பிரயோசனம் என்று நான் என்னை கேள்வி கேட்டிருப்பேன். நீலிசத்திற்கு ஊடாக போய், அதன் மறு பக்கத்தினூடாக வெளியே வந்து, என்னை இன்று நான் இப்ப இருக்கும் ஒரு நபராக வடிவமைத்துள்ளேன். அது மட்டும் அல்ல,  நீலிசத்துடனான என் அனுபவம், என்னை முன்னையதிலும்  பார்க்க மிகச் சிறந்த  நபராக மாற்றியுள்ளது என்பதும் உண்மையே.

பொதுவாக உலகளாவிய இணைய தளத்தில், மற்றும் செய்திகளில், நீலிசம் [நிஹிலிசம்] பற்றிய கருத்துக்கள் பிழையாக அல்லது மோச மாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். இன்று நாம் வாழும் வாழ்க்கை ஒரு ஒரு மோசமான நிலைமையாக காணப்படுகிறது. ஏன் என்றால், மதம் மற்றும் பாரம்பரியம் [religion and tradition] எம் மனதை ஆணையிடுகிறது, அங்கு, 'தானே சிந்திக்கும்' ஒரு சுதந்திர மனிதனை காண முடியவில்லை. ஏனென்றால் எம் சமுதாயம் “மதிப்புகள்”, “ஒழுக்கம்”, “நல்லொழுக்கம்” மற்றும் “நன்மை” [“values”, “morals”, “virtue” and lastly “goodness”] என்ற போர்வைக்குள் எம்மை மூடி, அதற்க்கு கீழ்ப்படி என எமக்கு கோரிக்கை விடுகிறது. இதனால் எம்மில் பலர் கண்மூடித்தனமாக, எந்தவித விளக்கமும் இன்றி, சமுதாயம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் காட்டிய அந்த வழியை பின்பற்று கிறார்கள். அது மட்டும் அல்ல, உணர்வுபூர்வமாக அது ஏன் என்று தெரியாமல் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கிறார்கள். இந்த சங்கிலியை உடைத்து எறியும் முயற்சியையே நீலிசம் தருகிறது எனலாம்.  

 இந்த  நீலிசம் என்ற தத்துவம், ரஷ்ய இலக்கியத்தின் நாயகரான 'இவான் துர்கனேவ்' [Ivan Turgenev] என்ற எழுத்தாளரால் தன் 'தந்தையரும் தனயரும்' [Fathers and Sons] என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானது எனலாம். அந்த நாவலில் முக்கிய பாத்திரமான, பஸாரவ் [Bazarov] ஒரு நீலிசவாதியாகும், இவர் அந்த நாவலில் வரும் தந்தையின் மகனான  அர்க்காதியின் நண்பராவார். ஒரு கட்டத்தில், ஒரு போட்டியில், அர்க்காதியின் பெரியப்பாவை சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான். இன்னும் ஒரு கட்டத்தில்,  நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸாரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான். அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.

நாங்கள் இன்று அதிகமாக அப்படியான ஒரு நீலிச காலத்தில் வாழ்கிறோம். இங்கு பலரிடம் வாழ்க்கை எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல்லாமல் இருப்பதை  காண்கிறோம். உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் உண்மையில் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று கருதும் காலமாக மாறுகிறது. உண்மையில் நீலிசம் அல்லது நிஹிலிசம் ஒரு கலாச்சார நிலை, அல்லது உளவியல் நிலை [cultural condition or the psychological state] ஆகும். அங்கே, ஏதேனும் உள்ளார்ந்த அல்லது தனித்துவமான மதிப்பு அல்லது பெறுமானம் கொண்டிருப்பதாக அவர்கள் உணரவில்லை. சிலவற்றிற்கு எந்தவொரு பண மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதுடன் இதற்கு சம்பந்தம் இல்லை. ஒரு தோட்டம், ஒரு அன்பான செல்ல பிராணி, ஒரு அழகான கழுத்தணி, ஒரு ஆழமான நாவல் அல்லது படம், அல்லது ஒரு நபர், இவைகள் தனக்கு என ஒரு மதிப்பு கொண்டிருப்பதாக கருதவில்லை, அந்த மதிப்புகள் அல்லது பெறுமானம், அந்த மதிப்பை கொடுத்தவர்களுடன் தொடர்புடையது என்றாகிறது என்கிறார்கள். இதன் தீவிர போக்கை தீவிரவாத நீலிசம் [“radical nihilism”] என்று அழைக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் மதிப்பிற்குரியதாக கருதப் படுபவை எல்லாம், உண்மையில் ஒரு வழக்காறு அல்லது மரபு, அதை  விட அதில் வேறு ஒன்றும் இல்லை என்கிறார்கள். ஒரு மௌனமான அல்லது மறைமுகமான, பரீட்சிக்கப்படாத சில அனுமானங்கள் மூலம் ஒருவரின் செயலையும் அவரின் சமூக நடத்தையையும் வழிநடத்தும் ஒரு மறைமுகமான கட்டளை [a tacit, unexamined set of assumptions that directs one’s actions and social behaviour] இது ஆகும் என்கிறார்கள்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
                                                                                      பகுதி: 13 தொடரும்
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்  
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி 13B வாசிக்க அழுத்துங்கள்  

0 comments:

Post a Comment