நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி: 12A


[சீரழியும் சமுதாயம்] 


8] போதைப்பொருள் துஷ்பிரயோகம் [Drug Abuse]
சாராயம் மற்றும் போதை மருந்துகளை ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், அது உங்களை போதை மயக்கத்தில் (intoxication) ஆழ்த்தி உங்களுடைய விழிப்புணர்வைத் தொலைப்பது மட்டுமின்றி உடல் நலத்தைக் கெடுத்து, உங்களை அழித்துவிடுகிறது. ஒருவேளை இந்த மருந்துகள் உங்களுக்கு மயக்கத்தைத் தந்து, அதே நேரத்தில் உங்களை மிகுந்த விழிப்புடனும் கெட்டிக்காரத்தனமாகவும் ஆக்கி உங்கள் உடல் நலத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும் என்றால், நாம் அனைவருமே அதில் முழுதாக மூழ்கி இருப்போம். உதாரணமாக சந்திரன் நம்மீது அல்லது காதலர் மீது ஏற்படுத்தும் தாக்கம் ஒரு அமைதியான இன்பகரமானது, அது உங்களை மயக்கி கற்பனையில் மிதக்க வைக்கும், புலவர்களுக்கு கவிகளை அள்ளிக்கொடுக்கும் , காதலர்களுக்கு இன்ப மழை கொட்டும், தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு அமைதியைக் கொடுக்கும். அது வரவேற்கத்தக்க போதை. ஆனால் இது  அப்படி அல்ல, போதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச் செயல்களில் கூட  தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும் போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும். பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். அங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

ஏன், எப்படி மக்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார்கள் என்பதை பலர் பொதுவாக புரிந்து கொள்ளுவதில்லை. அது மட்டும் அல்ல,போதை பொருட்ககளை, பாவிப்பவர்களை மட்டுமே அது பாதிக்கிறது எனவும் கருதுகிறார்கள். அதனால் தான், இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட [addicts], இதை ஒரு சாக்காக எடுப்பதால், தொடர்ந்து முறை கேடாக நடக்க அவர்களுக்கு வழி வகுக்கிறது எனலாம். இவர்கள் தாம் தம்மையே பாதிப்பதாகவும், வேறு எவரையும் இல்லை, எனவே, தங்களது அன்புக் குரியவர்கள் ஏன் இதனை, தமது நடத்தையை பெரிதாக, சிக்கலாக கருதுகிறார்கள் என அடிக்கடி குழம்புகிறார்கள். உண்மையில், இந்த பழக்கத்திற்கு அடிமையானவர், தம்மை மட்டும் அல்ல, மற்றவர்களையும் பாதிக்கிறார்கள். எனவே இது ஒரு சமூகப் பிரச்சனையாகவும் உள்ளது. அது மட்டும் அல்ல, தார்மீக கோட்பாடுகள் அல்லது மன உறுதி இல்லாதவர்கள் இவர்கள் என தவறுதலாக எடைபோடுகிறார்கள். எனவே இவர்கள் நினைத்தால் நிறுத்த முடியும், வேண்டுமென்றே அப்படி செய்யாமல் இருக்கிறார்கள் என இவர்களை திட்டுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை, போதைப் பொருளுக்கு அடிமையாவது ஒரு சிக்கலான வியாதி, அதை கைவிடுவது, பொதுவாக நல்ல நோக்கங்கள் அல்லது ஒரு வலுவான விருப்பத்தை விட மேலானதும் கடினமானதும் ஆகும். போதைப்பொருள் அவர்களின் மூளையை மாற்றி விடுவதால், அவர்கள் நினைத்தாலும் கைவிடுவது கடினமாகிறது என்பதே உண்மை நிலையாகும்.

உலகில் உயர்ந்த அபிவிருத்திகளைக் கொண்டுள்ள நாடுகள் தொடக்கம் எல்லா நாடுகளிலும் மற்றும் எல்லா சமூகங்களிலும் இந்த போதைப் பொருள் பிரச்சினை இன்று காணப்படுகிறது. அதனால் தான் ஒரு விழிப்பை சமூகத்தில் மற்றும் தனி மனிதர்களில் ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக [International Drug Abuse Day] உலகம் முழுதும் கடைப்பிடிக்கப் படுகிறது. போதை என்றால் அது மது மற்றும் புகையிலைத் தொடர்பானவையாக பொதுவாக கருதினாலும், உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருளாக கஞ்சா [Cannabis], அபின் [Opium], கோகைன் [Cocaine], பிரவுன் சுகர் [Brown sugar (an adulterated form of heroin) மற்றும் ஒயிட்னர் [Whitener], சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் காணப்படுகின்றன. இவை பவிப்பவர்களின் மனம், உடல் இரண்டையும் கெடுத்து பாவிக்கும் அந்த நபருக்கும், அவரின் குடும்பத்திற்கும், ஆகவே சமுதாயத்திற்கும் பெரும் கெடுதலை விளைவிக்கிறது. நாளடைவில் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத ஒரு நிலைக்கு வந்து, போதைப் பொருளுக்கு அடிமையாகி விடுகின்றனர்.

உலகில் மட்டும் இன்றி, இலங்கையிலும் போதைப் பொருள் பாவனை வீதம் அதிகரித்து வருவதாக தேசிய போதைத் தடுப்பு சபை அண்மையில் எச்சரித்துள்ளது. பொதுவாக இலங்கையில் ஹெரோயின் [heroin], கஞ்சா [Cannabis], அபின் [Opium], மர்ஜுவானா[Marijuana  / ஒரு வகை கஞ்சா] ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே அதிகம் பாவனையில் உள்ளவை. மேலும் இலங்கையில் அவை இளைஞர்களிடையே சடுதியாக அதிகரித்திருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது. பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் ஒரு சில மணி நேரங்களுக்கே பொதுவாக நீடிக்கும். அதன் பிறகு அவர்களுக்கு குறிப்பாக மன அழுத்தம், எளிதில் கோபமடைதல், நினைவாற்றலில் குறைபாடு போன்றவற்றுடன் பசியின்மை, உடல் நிறை குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு, கண் பார்வை குறைதல், நரம்பு உணர்ச்சி குறைதல், உதடு கறுத்தல், ஆண்மை குறைவு போன்ற பல வியாதிகளும் ஏற்படுகின்றன.

 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மாணவர்களை திசை திருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் போதைப் பொருள் பாவனைகளை ஊக்குவித்து வருவதாகவும் மேலும் தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தை முடித்து பிரிந்து செல்வதனால், பிள்ளைகள் தனிமையாகி, அவர்களில் பலர் போதை பொருளுக்கு அடிமையாவதுடன் அந்த வியாபாரத்திலும் ஈடுபடுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. இவைகளுக்கு சான்று பகிர்வது போல, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் 2018 ஆண்டு நடுப்பகுதியில், வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப் பொருளிற்கு அடிமையானவர் களாக இருக்கின்றார்கள் எனவும், இந்த நாட்டிலே போதைப்பொருள் அதிகம் இருக்கின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 12 தொடரும்
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்↴
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
 பகுதி 12 B வாசிக்க அழுத்துங்கள் ↴    
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[12B] [சீரழியும் சம..

0 comments:

Post a Comment