பாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை


அவுஸ்திரேலியா  
ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய அவுஸ்திரேலியாக் கண்டத்தில் ஒரு பெரிய நாடாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாதாகவும் உள்ளது.. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.

அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர், 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.

பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 21.3 மில்லியன்கள் (2.13 கோடி, 2008 மதிப்பீட்டின் படி)மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.

ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர்.

 ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார். 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது.

 ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா”என்றவாறு பலுக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓஸ் (Oz) என்றும், ஆஸ்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள்.

 ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

 ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை.

 பார்க் எண்டெவர் என்ற கப்பலில் 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் வந்திறங்கிய கப்டன் ஜேம்ஸ் குக் அதனை பிரித்தானியாவுக்காக உரிமை கோரினான்.

ஐரோப்பியரின் வருகை

 ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது.

 தாஸ்மானியாவில் ஆர்தர் துறை: ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட்ட குற்றவாளிகளின் பெரும் பாசறை நியூ சவுத் வேல்ஸ் என்ற பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1836 இல் தெற்கு ஆஸ்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்ஸ்லாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை (native title) 1992 வரை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் terra nullius ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு

 1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, ஜனவரி 1 இல், ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆஸ்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதி ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது. கலிப்பொலி போரில் ஆஸ்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின.

ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர்.

 அரசியல்

 பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் மகாராணி ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசி தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன:

 சட்டமன்றம்: பொதுநலவாய நாடாளுமன்றம். இதில் அரசி, செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியின் சார்பில் பொது-ஆளுநர் பங்கு பற்றுகிறார்.

 நிறைவேற்று அவை: நடுவண் நிறைவேற்று கவுன்சில், இதில் பிரதமர், மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

 சட்டம்: ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் நடுவண் நீதிமன்றங்கள். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்வது 1986 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது.

இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

 அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.

மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (Premier) எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (Chief Minister) எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார்.

ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன:

 நோர்போக் தீவு

 கிறிஸ்மஸ் தீவு

 கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்

 ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்

 பவளக் கடல் தீவுகள்

 ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள்

 ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்

 அவுஸ்திரேலியக் காலநிலை வலயங்கள்

ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது.

உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர்பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை (monolith) எனக் கருதப்படுகிறது. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது.

ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு.

 அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமுலில் உள்ளது.

 தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர்.

 முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9 மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர். குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர், ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர். 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

 மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரம் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தலைநகரங்களில் ஒன்று.

2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

 2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும்.

2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும்.

 குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிறிஸ்பேன் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மக்கள்தொகை கூடிய நகரம்.

ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849) தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர்.

மொழி

ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும். பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர்.

 ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது.

 பரோசா பள்ளத்தாக்கு: தெற்கு ஆஸ்திரேலியாவின் வைன் உற்பத்தி செய்யப்படும் இடம். 15 விழுக்காட்டினருக்கும் குறைவான ஆஸ்திரேலியர்களே நாட்டுப்புறங்களில் வசிக்கிறார்கள்.

சமயம்

ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5 மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும்.

 கல்வி

 ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது[38]. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

சுகாதாரம்

 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே, அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று.

 ஆஸ்திரேலியத் தமிழர்

ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.

 பண்பாடு

 மெல்பேர்ணில் உள்ள றோயல் கண்காட்சியகம் ஆஸ்திரேலியாவில் முதலாவது உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் 2004 இல் அறிவிக்கப்பட்டது.

1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன.

ஊடகங்கள்

ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (cable), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் (Reporters Without Borders) 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 விக்டோரியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்திரேலிய விதிகள் காற்பந்தாட்டம் ஆஸ்திரேலியாவில் புகழ் பெற்ற ஒரு விளையாட்டு

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்[. துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை.

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்[52]. கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும்.ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன[53].

 பொருளாதாரம்

 மேற்கு ஆஸ்திரேலியாவின் கால்கூர்லி நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் தங்கச் சுரங்கம்

ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும்.

அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் தி எக்கணமிஸ்ட் இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் தி எக்கணமிஸ்ட் இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏