"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே
செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது
சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது
பித்தம் ஏறி நானும் தொடர்கிறேன் "
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே
ஒளிரும் அவள் பல் அழகில்
ஒடிந்து நானும் காதல் கொள்ள
ஒப்புதல் கேட்டு கெஞ்சி நிற்கிறேன்"
"வித்தை பல உடலால் காட்டி
கத்தை கத்தையாக காதல் எறிந்து
முத்தம் பல இதழால் தந்து
ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்"
"ஒழிந்து ஓடி ஆடிப் பாடி
ஒற்றை காலில் சலங்கை கட்டி
ஒய்யாரமாய் வரம்பில் இருந்து எழுந்து
ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்"
"மெத்தை மேல் அவளை கிடத்தி
சத்தம் இன்றி முத்தம் இட
கொத்து கொத்தாய் மலர் கொடுக்க
ஒத்தையடிப் பாதையில் ஒற்றைக்காலில் நிற்கிறேன்"
"ஒப்பனை செய்து பிரமனும் மயங்க
ஒல்லிய இடைக்கு பட்டை சுற்றி
ஒற்றைக் கொம்பன் அருள் வேண்டி
ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகிறாள்"
"ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கி நின்ற என்னை
நத்தை வேகத்தில் மெல்ல வந்து
சித்தம் கலங்க கண்ஜாடை காட்டி
சத்தம் வராமல் முட்டிமோதி போகிறாள்"
"ஒத்தையடிப் பாதையில் ஓரமாய் நிற்கையில்
ஒளிரும் தளிர்மேனியுடன் அருகில் வந்து
ஒதுங்கி தானும் நிற்க இடம்கேட்டு
ஒன்றாய் இருவரும் அணைத்து நின்றோம் "
💌[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]💌
No comments:
Post a Comment