நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 10A

 [சீரழியும் சமுதாயம்] 

6] பிரபலங்களை வழிபடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]

நமக்கு உதவி செய்தவர்களை நாம் பொதுவாக மதிக்கிறோம், வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். உதாரணமாக, பிச்சைக்காரர்கள், தமக்கு சோறு இட்டவரை கும்பிட்டு வாழ்த்திச் செல்வது, இதற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டாகும். தொடக்க கால மக்கள், தமக்கு இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றை அளித்த இயற்கைப் பொருள்கள் ஆகிய மரம்-செடி-கொடி-புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கினர், வாழ்த்தினர். அவை இருக்கும் இடத்தில் ஏதோ ஒர் ஆற்றல் மறைந்திருப்பதாக உய்த்துணர்ந்ததாலும், நம்பியதாலும், அப் பழக்கம் நாளடைவில் ஒரு கடவுள் வழி பாடாக மாறியது. இற்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடிய புற நானூற்றுப் பாடல் (260) ஒன்றில் “கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி”, அதாவது கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி என்ற வரியை காண்கிறோம். மேலும் சிலப்பதிகாரம் என்னும் தமிழ்நூலில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகள் “திங்களைப் போற்றுதும்-ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று கூறுவதையும் காண்கிறோம். இவை எல்லாம் அங்கு எதோ ஒரு சத்தி, வல்லமை, ஆற்றல்  இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஏற்பட்ட வழிபாடாகும். அதை ஒற்றித்தான் நடுகல் வழிபாடும் ,பின் குலதெய்வ வழிபாடும் வந்தன. அதன் பரிணாம வளர்ச்சியில், இன்று தம்மை கவர்ந்த தமது ஹீரோக்களையும் வழிபடத் தொடங்கினார்கள் எனலாம்.

ஒரு வகையில் ஏற்ற, சிறந்த நபரை, ஒரு முன் மாதிரியான நபரை அல்லது ஒரு பிரபலமான நபரை வியந்து பாராட்டுதலை, போற்றுதலை ஹீரோ அல்லது தனி நபர் அல்லது கதாநாயகன், கதாநாயகி  அல்லது வீரன், வீராங்கனை வழிபாடு என்று இன்று கூறப்படுகிறது. என்றாலும், இந்த வழிபாடு ஒரு அடிப்படை தேவைகளையும், அதாவது அவரை மாதிரி அல்லது அவரை பின்பற்றி தாமும் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஒரு தேவையையும் உள்ளடக்கி இருப்பதால், இதன் மூலத்தை நாம் பல பண்டைய நாகரிகங்களிலும் காண்கிறோம். உதாரணமாக, கி.மு. 1900 ஆண்டை சேர்ந்த பபிலோனியன் [Babylonian], தமது வாழ்வில் எதோ ஒரு வகையில் சிறந்து விளங்கிய சிலரை புராண ஹீரோக்களாக [mythic heroes] தரம் உயர்த்தியதை அவர்களின் கல்வெட்டில் இருந்து காண்கிறோம், அதே போல தமிழகத்தில் பெருங்கற்காலமான கி.மு.1000 - 300 இலும், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்'  என வள்ளுவர் கூற்றின் படி, வீரச் சாவு அடைந்த வீரர்களைப் போற்றி வீரக்கல், நடுகல் வைத்து, தமக்கும் அவனை மாதிரி ஒரு வீரம் அல்லது நல்ல குணம் வேண்டி, வழிபடும் கலாசாரம் தமிழர்கள் மத்தியில் தோன்றியது.

"இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்"
[புறநானூறு 329]

வீட்டிலே காய்ச்சிய கள்ளை அந்தச் சிற்றூரில் உள்ள குடும்பத்தினர் கூட்டமாகச் சென்று முன்னோரின் நடுகல்லுக்கு பகல் பொழுதில் படையல் செய்வர். அப்போது நடுகல்லை 
பாராட்டுவர். நெய்யிட்டு விளக்கேற்றி வைப்பர். நெய் விளக்கு ஏற்றியதால் உண்டான புகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப் பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. எனவே, தங்கள் திறமை மற்றும் நல்லொழுக்கங்களில் சிறந்த, வெற்றிகரமான மக்களை, அவர்களின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வும் அல்லது அவர்களை பார்த்து தாம் ஒரு உத்வேகம் பெறவும், அந்த வெற்றியாளர்களை வழி படுவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும், பாராட்டுகள் அதிகப்படியாக ஒரு எல்லையை தாண்டும் பொழுது, துன்புறுத்தக் கூடிய அல்லது அசாதாரணமாக இருக்கும்போது, அந்த ஹீரோ வழிபாட்டிலும் பிரச்சினைகள் எழுகின்றன என்பது இன்று நாம் காணும் உண்மையாகும்.

ஒரு உண்மையான, திறமையான ,பெருமைப்படக் கூடிய ஒரு திரைக் கலைஞரையோ, விளையாட்டு வீரரையோ அவர்களிடம் உள்ள திறமையை மட்டும்  போற்றி பாராட்ட வேண்டுமே ஒழிய, அதை விடுத்து அவரையே கொண்டாடி, பெரிய கடவுள் நிலைக்கு உயர்த்தி தனி மனித துதி அல்லது ஹீரோ வொர்ஷிப் செய்வது, குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து உள்ளது. அவர்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்களே, தமிழகத்தில் நடிகர்களின் அபிமானிகள், அவர்களின் விருப்ப நடிகர்களின் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைப்பது மட்டுமல்ல, நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி, தனி மனித துதி பாடுவது, பால் அபிஷேகம் செய்வதுடன், மன்றங்களுக்கு இடையில் போட்டா போட்டியும், சண்டையும் கூட நடை பெறுகின்றன. அது மட்டும் அல்ல, அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அலுவலகங்கள் வரை தனி மனித வழிபாடுகள் தலைவிரித் தாடுகின்றன. காலில் விழுவதில் காட்டுகிற அக்கறையைக் கருத்துச் சொல்வதில் காட்டுவார்களா? இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட கணியன் பூங்குன்றனாரின் புறநானுறு 192 , தக்கோர் [அறிஞர்] ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால், பிறந்து வாழ்வோரில், சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை, பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை என 'முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்று பாடினார். எனவே பிறரை அளவுக்கு அதிகமாக புகழ்பவர், தன்னைத் தானே தாழ்த்தி கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒரு மனோபாவத்தால் எந்த ஒரு சமுதாயமும் பெற்றதை விட இழந்ததே அதிகம் ஆகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 10B தொடரும்
பகுதி:10B வாசிக்க அழுத்துங்கள் 
   Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 10 B
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள் 
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

0 comments:

Post a Comment