கனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............



                                                          15-01-2020           

அன்புள்ள அண்ணனுக்கு ,

நாம் நலம்.அதுபோல் உங்கள் நலனும் ஆக வாழ்த்துகிறேன். 

அண்ணா, நீங்கள் முதலில் குறிப்பிட்டது தவறான செய்தியாகும். அவுஸ்திரேலியா , கனடா போன்ற நாடுகளில் பல மொழிகள் போன்று தமிழையும் பாடசாலைகளில் கற்பித்தலுக்கு இருக்கும் சலுகையினை ,எம்மவர்கள் '' அந் நாடுகளில் தமிழும் ஆடசிமொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது என முகநூலில் தவறான செய்திகளினைப் பரிமாறி வருகிறார்கள். இந்தப் பொய்யுக்கு ,பெரும் பெருமைகள் அடித்து   கருத்துக்கள் இடும் ஏமாளிகள் ஒருபுறம் , உலகை ஆளப்போறான் தமிழன் என்ற பீத்தல் கோஷங்கள் வேறு.  

அண்ணா, நீங்கள் கூறியதுபோல் , உலகம் முழுவதும் பறந்து பரவிவிட்டோம். எமது சமுத்தாயத்தில் பிள்ளைகள் எல்லாரும் உயர்கல்வி முடித்து நல்ல நிலைகளில் விளங்குகிறார்கள்.சில நாடுகளில் சில பிள்ளைகள் சாதனையார்களாக பிரகாசிக்கிறார்கள். கேட்கும்போது சந்தோஷமாகவே இருக்கிறது. ஆனால் பெருமையாகக் கூற முடியவில்லை. ஏனெனில் இன்னொரு பக்கத்தில் நாம்  அழிந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

அமெரிக்காவில் தமிழ் பெண் சாதனைஅவுஸ்திரேலியாவில் தமிழன் சாதனை, லண்டனில் சாதனை என்றெல்லாம் செய்திகள் சமூகவலைத்தளங்கள் வரையில் பெரும் பறையடித்துக்கொண்டு இருக்கிறது. நன்று.ஆனால் இவர்கள் தமிழ் பேசும் சக்தியை இழந்தவர்கள் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை மட்டுமல்லபிள்ளைகள் தமிழ் படிக்க விரும்பினாலும் ,ஆங்கிலத்தில் சிறுவருடன் உரையாட விரும்பும் பெற்றோர்கள்,பெரியோர்கள் மத்தியில் பிள்ளைகளைக்   குற்றம் சாட்ட முடியவில்லை. மேலும் வேற்று மொழி சூழ்நிலையில், அவர்கள் தமிழ் பேசக் கற்றுக்கொண்டாலும், அடுத்த சந்ததியினரை , தமிழ் மணம் கூட நெருங்கும் என்பது நிச்சயம் இல்லை.

எப்படி இலங்கையிலிருந்து யுத்த காலத்தில் நாட்டை விட்டு இலகுவாக வெளியேற முடிந்தது என்று இப்பொழுதுதான் புரிகிறது. இப்பொழுது தாயகத்திலும் நாங்கள் முன்னர் இருந்ததைவிட மேலும் சிறு பான்மை இனமாக ஆக்கப்பட்டுள்ளோம். இங்கு வாழும் தமிழருடன் தமிழினம் அழிந்துவிடும். தமிழ் நாட்டிலும் , தமிழை வெறுத்து ஆங்கிலம் பேசிகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். சில வருடங்களில்  தமிழருக்கென்று ஒரு இனப்பிரச்சனையே உலகில் இருக்காது. ஏனெனில் தமிழினம் இருந்தால் தானே!

இதைவாசிக்கும் போது , நீங்கள் கவலையடையக்கூடும். எனக்கும் என்ன தமிழ் அழிவதில் சந்தோசமா? இல்லையே! போகின்ற போக்கில், இச் செய்திகளெல்லாம்  கவலையுடன் விழுங்க முடியாத செய்தியாக இருந்தாலும் விழுங்கவேண்டியுள்ளதே!

 தமிழனுக்கு மொழி பிடிக்கவில்லை, தமிழில் பேசினால் எம்மைப் பிடிக்கவில்லை, தமிழனைக் கண்டால் பிடிக்கவில்லை, ஒரு அலுவலகத்தில் ,அல்லது சற்று அதிகாரம் உள்ள இடத்தில் தமிழன் இருந்தால் , உதவி கேட்டு வருவோரில் தமிழரைக் கண்டால் மட்டும் அவனில் அதிக அதிகாரம் செலுத்தி அவனுக்கு மன அழுத்தம் கொடுப்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறான் தமிழன். இப்படி பல பிரச்சனைகள் அவன் இரத்தத்தில் ஊறிவிட்டன. இதனால்தான் நாம் அழியும் இனமாக சபிக்கப்பட்டோம் என என் நண்பன் ஒருவன் பலமுறை கூறுவதை கவலையுடன் செவிமடுத்திருக்கிறேன்.

அண்ணா! என்ன செய்வது.எம்மால் இயன்றவரையில் நாம் தமிழராகவே வாழ்வோம். அதற்கு இந்த குடியேறிய நாடுகள் தடையேதும் இல்லை. அவர்கள் எம்மையும், எம் மொழியையும் ,பண்பாட்டினையும் மதிக்கிறார்கள். வளர்க என வாழ்த்துகிறார்கள். எமது பேச்சாளர்களையும் மேடையில் ஏற்றிவிட்டால் தமிழ்தான் எங்கள் மூச்சு என்று வீரம் பேசுகிறார்கள். கையோடு கீழே வந்து ஆங்கிலத்தில் தமிழரோடு பேசி உறவாடித்  தங்கள் ஆங்கிலத் திறமையினை உலகறிய வைப்பதில் பெருமை கொள்கிறார்கள்.. பிள்ளைகள் தமிழை விரும்பினாலும் கூட , நம்மில்  பலர் அவற்றிற்கு  தயாரில்லை.

தற்போது எதையும் செய்யாது பழமையின் பெருமைகளைப் பறை அடித்துக் கொள்வதில் எவ் வித பயனுமில்லை என்பதே என்கருத்து . 

அண்ணா, உங்கள் சுகத்தினையும் , ஊர் ப்புதினங்களையும் உங்கள் பதிலில் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
அன்பின் தம்பி
செ .மனுவேந்தன்.     
                      📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘                               

No comments:

Post a Comment