நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 09 A

[சீரழியும் சமுதாயம்] 
5]  இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture].



இன்பவியல் [Hedonism] என்பது இன்பமே மதிப்புப் பெற்ற ஒரே இலக்கு என்ற கோட்பாடு ஆகும், சிலர் இன்று அதற்க்கே அடிமையாகிறார்கள். அது எப்படி தம்மை கெடுக்கும் என்று எள்ளளவும் கவலை படுவதில்லை. உதாரணமாக, ஒரு உணவு எனக்கு உருசி என்றால், அந்த "உணவு" கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்றவற்றை கொடுக்கும் என்றாலும் எந்த கவலையும் இன்றி இப்ப இன்பமே அதை விட எனக்கு பெரிது என்று சாப்பிட்டு மகிழ்வதை குறிக்கலாம். வாழ்வு சலிப்பாக உள்ளதா? வாழ்க்கை எம்மை மூழ்கடிக்கிறதா? ", நான், நாள் முழுவதும் வீடியோ விளையாட்டு [video games] விளையாடுவேன். எனக்கு இந்த உண்மையான உலகம் தேவையில்லை" என்று எந்த மக்களுடனும் சமுதாயத்துடனும் பெரிதாக பங்கு பற்றாமல் இருந்த இடத்தில் சந்தோசம் என்று களித்து உடல் பருமனையும் நோயையும் வரவழைப்பதையும் மேலும் ஒரு உதாரணமாக கூறலாம். அதாவது ஒரு பரந்த அடிப்படையில், மகிழ்ச்சியை மட்டும் தனக்கு அதிகரிக்க முயற்சித்து, அதன் மூலம் தனது வலியை குறைக்க முயலும் ஒரு செயல் என்றும் கூறலாம். ஆனால் இந்த அவர்களின் கட்டாய கலாச்சாரத்தால், புத்திசாலித்தனமான, பொறுப்பான வாழும் வழியை [sensible, responsible way to live] அவர்கள் நிராகரிப்பதை காண்கிறோம். இது தான் எமக்கும் சமுதாயத்திற்கும் கவலை தரும் விடயம்.

ஒரு மனிதனுக்கு காதலனின் அல்லது காதலியின் சீராட்டு மகிழ்ச்சியை தருகிறது, அதே போல, ஒருவருக்கு ஒரு இசை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக களித்தல், அல்லது வெறுமனே ஒரு தீவிரமான நாளின் பின், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காற்று வாங்குதல் போன்றவை கட்டாயம் அவனுக்கு அல்லது அவளுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நடவடிக்கைகள் உண்மையில் நல்லவையே, அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல, ஒரு மனிதன் முற்றும் முழுதாக ஒன்றில் சார்ந்திருத்தல், ஒரு பழக்கத்திற்கு அடிமையாதல், அளவுக்கு மீறி உண்ணுதல் அல்லது குடித்தல், மற்றும் கட்டாய நுகர்வு [Dependence, addiction, bingeing and compulsive consumption] போன்ற ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. முன்னர் மகிழ்ச்சியை தந்த நடவடிக்கைகள் அல்லது பழக்கங்கள், எந்த கட்டத்தில் சிக்கல் நிறைந்ததாக மாறும் என்று நாம் சரியாக குறித்து காட்ட முடியாது. என்றாலும், உதாரணமாக, எப்போதாவது ஒரு போதை பானம் பியர் [Beer/ஒரு வகைச் சாராயம்] அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு காலை படுக்கையிலிருந்து எழும்பும் போது ஏதாவது ஒரு போதை பானம் தேவை என்ற நிலைக்கும், இடையில் இந்த பிரச்சினைக்கு உரிய நிலையை நாம் கடந்து இருப்போம் என்று கூறலாம்.

பென்தாம் (Bentham) என்பவர் கூறும் இன்பவியல் கோட்பாடு ஆண்டாளுக்கு முற்றிலும் பொருந்தும், எல்லா நேரங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு நோக்கத்தின்பால், நடத்தைக்கு உட்படுகிறான். அந்த நோக்க வெற்றியின் இறுதியில் கிட்டும் மகிழ்ச்சியைச் சுவைப் பதற்க்கே ஒருவன் அவ்வாறான நடத்தைக்கு உட்படுகிறான் என்கிறார்.
உதாரணமாக, நாணம் மிகுதியால் நிந்திப்பது போல் மீண்டும் மீண்டும் நினைத்து திருமாலைப் பற்றி பேசுவதும் மற்றும் இது போன்ற ஆண்டாளின் செயல்களும், அவள் பெருமானையே நினைக்கும் நோக்கில், அவள் உண்மையில் சுவைக்கும் இன்ப நிகழ்ச்சிகளை நாம்  காணலாம். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் என கருதப்படும் ஆண்டாள், பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும்.  இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்து, திருமாலைக் காதலிப்பதாகவும் – அத்திருமாலையே மணமுடிக்க வேண்டுமென்று துடிப்பதாகவும் அவரின் பாடல்கள் அமைந்தன எனலாம் . இதில் அவள் தன்னில் எழும் காதல் உணர்ச்சியையும் – காம வேட்கையையும் தீர்த்துக் கொள்கிறார் என்று நம்புகிறேன். இதனால் அவள் நடத்தை, - இன்று சிலர் முற்றும் முழுதாக ஒன்றில் அடிமையாவது போல, உதாரணமாக பாலியல் வீடியோ- அப்படி மாறி, அதில் அவள் இன்பம் துய்த்திருக்கலாம் என்று நம்புகிறேன். உதாரணமாக திருப்பாவை, பாடல்-19  இல் அவளின் இன்ப ரசனையை மிக தெளிவாக காணலாம்.  

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்...”

இதன் அர்த்தம், படுக்கை அறையில் குத்துவிளக்கு எரிகிறதாம். அழகிய கட்டிலில் விரிக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது ஏறிய கண்ணன், அழகிய கூந்தலையுடைய தன் மனைவி நப்பின்னை மேல் பாய்கிறான்; பலவாறு சுகம் கண்டவன், அவளது கொங்கைகளை தன் அகன்ற மார்பின் மீது வைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றானாம். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா? என்று கேட்கிறாள் என்கிறது.இங்கு ஒரு பெண்ணின் அவலம் வெளிப்படுகின்றது. பெண் அதில் பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது.

எழுத்து கண்டுபிடிக்கப் பட்ட பின், கி மு 2100 அளவில் எழுதப்பட்ட  மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh], சிடூரி [ Siduri] என்பவர், "உங்கள் வயிற்றை  நிரப்புங்கள், பகலும் இரவும் மகிழ்ச்சியாகட்டும், நாட்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கட்டும், பகலும் இரவும் நடனமாடி இசை முழங்குங்கள்..... இந்த விடயங்கள் மட்டுமே மனிதர்களின் [ஆண்களின்]  அக்கறையாகட்டும்" [Fill your belly. Day and night make merry. Let days be full of joy. Dance and make music day and night  ... These things alone are the concern of men]  என்று ஆலோசனை வழங்குகிறார். ஒரு வகையில் பார்த்தால், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட  ஒரு இன்பவியல் வாதத்தை இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது எனலாம்.  அதே போல, "ஆசை செழிக்கட்டும், உங்களுக்கான துடிப்புகளை இதயம் மறக்கட்டும், நீ வாழும் வரை உமது விருப்பத்தைப் பின்பற்றுங்கள் [Let thy desire flourish, In order to let thy heart forget the beatifications for thee.Follow thy desire, as long as thou shalt live.], என்ற கி மு 2030 க்கும் கி மு 1640 க்கும் இடைப்பட்ட பண்டைய எகிப்தின் ஹார்ப்பரின் பாடல் [Harper's Songs] ஒன்றும் இன்பவியல் வாதத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.

✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 09B  தொடரும்→→
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

  பகுதி: 09B வாசிக்க அழுத்துங்கள் →→ 
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 09B

1 comment:

  1. Nageswary UruthirasingamFriday, February 14, 2020

    கந்தையா தில்லைவிநாயகம்பிள்ளை ஐயா அவர்களுக்கு நன்றி. யதார்த்தமான வரிகள்.ஆள்வார்கள் வரிசையில் ஆண்டாளின் உதாரணம் சிறப்பு. இதனால் தானோ ஆண்டாளுக்கு விரும்பதாகாத நாமம் ஒன்று வரலாற்றில் சூட்டப்பட்டது.ஊரில் உள்ள யாரோ ஒருவரின் கதையைக் கேட்டு அக்கினியில் குளித்து அழைத்து வந்து தன் குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கும் போதே நடுக்காட்டில் விட்ட சமுதாயம் தானே, எல்லா குணங்களும் ஒருங்கே அமைந்த கணவன் வேண்டும் என்று தவம் இருந்த திரபதிக்கு ,எல்லா குணமும் ஒன்றாக அமைந்த ஆண் இல்லை என்று, ஐந்து கணவனைக் கொடுத்தும் ,கதற கதற அரசபை மண்டபத்தில் கணவன்மார் முன்னிலையில் துகில் உரியப்பட்ட சமூதாயம் தானே.........வரலாறுகள் எல்லாம் இப்படி இருக்க...

    ReplyDelete