இன்டர்நெட் எனும் பெருந்தெருவில்…

நவீன பேய் பிசாசு உலாவுதென்று பெற்றோர் அறிவாரோ!..

சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தாக்குபவர்கள் ஒரு முதியவராகவோ அல்லது ஒழுங்கற்ற முறையில் அழுக்கான உடையுடன் ஒரு 'மழைக்கோட்டு’ அணிந்தவராக மட்டுமோ இருக்கவேண்டுமென்றில்லை.

பதிலாக அவர் போலிப் பெயர் கொண்ட ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். அத்துடன் எந்த அந்தஸ்த்தினைக் கொண்ட எந்த வயதினராகவோ, எந்தத் தொழிலைச் செய்பவராகவோ இருக்கலாம்.

மணம் முடித்தவராகவும் இருக்கலாம். இவர்கள் சிறுவர்களைத் தமது ஆசைகளுக்கு அடிபணிய வைப்பதற்கு வேண்டிய தந்திரங்கள் அனைத்திலும் கைதேர்ந்தவர்களாக இருப்பர்.

இவர்களுள் பெரும்பாலானோர் புத்திசாலித்தனமான வழிமுறைகளைக் கையாண்டு சிறுவர்களைத் தமது வலைக்குள் வீழ்த்திக் கொள்வர். நன்கு பழக்கப்பட்டவர்களது பாலியல் இச்சைகளுக்கே சிறுவர்கள் அனுமதிக்கின்றார்கள் என்பதை இவர்கள் அனுபவ ரீதியாகவும் புள்ளிவிபரக் கணிப்பீடுகள் வழியாகவும் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளார்கள்.

இதனால் பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் - ஏன் பல வருடங்கள்கூடக் காத்திருந்து சிறுவர்களின் நட்பைப் பெற்று தமது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர்.

குடும்பங்களில் அன்பு, அரவணைப்பு, கவனிப்பு என்பன கிடைக்கப் பெறாத பிள்ளைகள்தான் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகளின் 'மென் இலக்குகள்' ஆகிவிடுகின்றனர்.

காணாமற்போன, கற்பழிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட சிறுவர்களுள் பெரும்பாலானோர் இந்த வகையைச் சார்ந்தவர்களே எனச் சான்றுகள் கூறுகின்றன. இவ்வாறான குழந்தைகளின் அன்பையும் அனுதாபத்தையும் பெறும்பொருட்டு பெருமளவிலான நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் இவர்கள் செலவு செய்கின்றனர்;.

நவீன இசை, திரைப் படங்கள், விளையாட்டுக்கள் போன்ற பொழுது போக்குக்களுடன் கொம்பியூட்டர் தொடர்பான தொழில் நுட்பம் என்பன பற்றியும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சிலர் எடுத்த எடுப்பில் உடனடியாக நேருக்குநேர் சிறுவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பர்.

அநேகமானோர் மிக நீண்ட நேரம் - மிக நீண்ட காலம் சிறுவர்களுடன் மின் சம்பாஷணைகளில் (Chat) ஈடுபடுவர். சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு பொறுமையோடு செவி மடுப்பர். அவர்களுக்காக இரக்கப்படுவதாகப் பாவனை செய்வர். பின்னர் ஆலோசனை கூறுவர்;.

அன்பளிப்புப் பொருட்களை அனுப்பி வைப்பர். தேவைப்படுமிடத்து பண உதவியையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இவ்வாறாக உறவினைக் கட்டியெழுப்பிய பின்னர், தமது பேச்சுக்களை மிகவும் சாதுரியமாகப் பாலியல் விடயங்களை நோக்கித் திசைதிருப்புவர். பாலியல் தொடர்பான அந்தரங்கங்களை அறிவதில் சிறுவர்களுக்கு இருக்கும் ஆவலைத் தூண்டி, மென்மேலும் அவை தொடர்பான படங்களையும் காட்சிகளையும் பொருட்களையும் பார்ப்பதற்கும் உற்சாகப் படுத்திவிடுகின்றனர்.

பாலியல் முறைகேட்டாளர்கள் விரசமான படங்களைப் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்வதை கொம்பியூட்டரும் இன்ரநெற்றும் சுலபமாக்கிவிடுகின்றன. இவர்களிடம் ஸ்கானர்கள், டிஜிற்றரல் கமராக்கள் போன்ற நவீன கருவிகள் உண்டு. இவற்றை உபயோகித்து தமது படங்களையும் ஆபாசமான வேறு படங்களையும் தயாரித்து மின்னஞ்சல் வழியாகச் சிறுவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். முடிவாக, தவறு என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தும் அதிலிருந்து விடுபட முடியாமல் ஏராளமான சிறுவர்கள் பாலியல் விலங்குகளின் வஞ்சக வலையில் வீழ்ந்துவிடுகின்றனர்.

'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும் - வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்' என்ற உண்மையை உணராத குழந்தைச் செல்வங்கள் இவ்வாறு கெட்டழிந்து போவதைப் பெற்றோர் எவ்வாறு கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம்?

ஆலோசனைகளாக ஒரு சில:

1) உங்கள் குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுங்கள். கொம்பியூட்டர் வழியாகப் பாலியற் கெடுதிகள் விளைவிப்போரைப் பற்றியும் அவர்களால் விளைவிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் கலந்துரையாடுங்கள். பின்வருவன போன்ற அறிவுரைகளைச் சொல்லிக் கொடுங்கள்.

- இன்ரநெற் மூலம் அறிமுகமானவர்களை ஒருபோதும் நேரில் சந்திக்கக்கூடாது

- இன்ரநெற் மூலம் அறிமுகமானவர்களுக்குத் தமது படங்களை அனுப்பக்கூடாது

- முன்பின் தெரியாதவர்களுக்கு பெயர், முகவரி, பாடசாலைப் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் கொடுக்கக் கூடாது

- முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் படங்களை download பண்ணக் கூடாது

- இன்ரநெற் மூலமாக வற்புறுத்தும் அல்லது தொந்தரவுபடுத்தும் அறிவுறுத்தல்களுக்குப் பதிலளிக்கக்கூடாது

- இன்ரநெற்றில்; சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை என நம்பத்தேவையில்லை என்று கூறிவையுங்கள்.


2) உங்கள் பிள்ளைகளின் கொம்பியூட்டரை அடிக்கடி கண்காணித்துக் கொள்ளுங்கள். மின் சம்பாஷணை, இன்ரநெற், மின்னஞ்சல் என்பவற்றைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவை பற்றிய போதிய அறிவு உங்களுக்கு இல்லையாயின் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், உறவினர்கள், சகவேலையாட்களிடம் கேட்டறிந்துகொள்ளுங்கள்

3) வீட்டிற்கு வரும் தொலைபேசி அழைப்புக்களின் இலக்கங்களையும் ஏற்கனவே வந்த அழைப்புக்களின் இலக்கங்களையும் கடைசியாக வந்த இலக்கத்தையும் காண்பிக்கக்கூடிய தொலைபேசிச் சேவைகளை உபயோகியுங்கள்

4) உங்கள் பிள்ளைகளோடு இணைந்து இன்ரநெற்றில் நேரத்தைச் செலவிடுங்கள்

5) வீட்டில் ஒரு பொது இடத்தில் கொம்பியூட்டரை வையுங்கள்

6)தேவையற்ற புரோகிராம்களைத் தடை செய்யக்கூடிய சேவைகளை கொம்பியூட்டரில் இணைத்துக்கொள்ளுங்கள்

7) பாடசாலையில், நூலகத்தில், நண்பர்கள்-உறவினர்களது வீடுகளில் என்ன வகையான 'இன்ரநெற் பாதுகாப்ப' உண்டு எனத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

8) உங்கள் பிள்ளைகளின் இன்ரநெற் நண்பர்கள் யார் என்பதைக் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்

9) இன்ரநெற் வழியாக யாராவது உங்கள் குழந்தை மீது பாலியற் குற்றச் செயல்களைச் செய்வதாக அல்லது செய்ய முயற்சிப்பதாக நீங்கள் கண்டுபிடித்தால் அவற்றிற்கான ஆதாரங்களை அழிய விடாமல் பாதுகாத்து வைத்து, பின்னர் பொலீசாரிடம் அறிவியுங்கள்.

குழந்தைகள் எமது குடும்பங்களின் புத்தம் புதுத் தளிர்கள். பெற்றோராகிய எங்கள் அறியாமையாலும் அசிரத்தையாலும் அவற்றைக் காமக் கால்நடைகள் கடித்துக் குதறிவிட நாம் அனுமதித்தல் ஆகாது. குழந்தைகளை இழப்பதென்பது எமது வாழ்வின் வேர்களை இழப்பதற்குச் சமானமல்லவா?

நவீன விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளின் வேகமான வளர்ச்சி காரணமாக எம்மைவிட எமது பிள்ளைகளுக்கு வாய்ப்பும் வசதிகளும் இந்நாட்களில் மலிந்து கிடக்கின்றன. இன்ரநெற் என்பது இப்புதிய தலைமுறைகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம். இன்ரநெற் பெருந்தெருக்களில் பேய் பிசாசுகள் நடமாடுகின்றன என்பது உண்மைதான்.

பாலியல் குற்றவாளிகளால் விளையக்கூடிய ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த உன்னதமான தகவற் தொடர்புச் சாதனத்தினால் எமது பிள்ளைகள் பயன் பெறும் வாய்ப்பினைத் தடுத்துவிட நினைப்பது புத்திசாலித்தனமல்ல. சமூகத் தெருக்களிலும் ஆங்காங்கே ஆபத்துக்கள் பல்வேறு உருவங்களில் பொறிவைத்துக் காத்துக் கிடக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் அகப்பட்டுழலாமல் அவதானமாக எமது பயணங்களை நாம் மேற்கொள்வதில்லையா? அவ்வாறாகவே இணையத் தொடர்புச் சாதனங்களின் நன்மை, தீமை பற்றி பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆழமான கல்வியைப் புகட்ட வேண்டும்.

இன்ரநெற் பாவனை தொடர்பாகப் பெற்றோர் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேண்டப்படாதவற்றை தடைசெய்யும் புரோகிராம்களை பயன்படுத்த வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத சமயங்களிலும் அவை பிள்ளைகளுக்கு பாதுகாப்பை வழங்கக்கூடியன. தவிர்க்கக்கூடிய தீமைகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைப் பெற்றோர் மேற்கொள்வதே பொருத்தமான தீர்வாகும்.

அறியாப் பருவத்துக் குழந்தைகள் பாலியல் வக்கிர புத்தியாளர்களின் வலைக்குள் வீழ்தல் ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று பொறுமையோடு சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு தவறி வீழ்ந்த குழந்தைகளைக் குற்றவாளிகள் ஆக்காதீர்கள். உண்மைக் குற்றவாளிகள் யார் என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் காவலர்களிடம் கையளித்துவிடுங்கள். எங்கள் புதிய வாழிடத்தில் ஒரேயொரு போல் பேர்னாடோவும் ஒரேயொரு காலா ஹமோக்காவும்தான் உண்டு என நம்பி ஏமாந்து போய்விடாதீர்கள். கொம்பியூட்டர் கருவிக்குள்ளேயும் கொலைகாரர்களும் காமப்பேய்களும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பிள்ளைகள் மழலைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கும்போது அவர்களை உங்கள் மடியிலும் மார்பிலும் தோளிலும் சுமந்து கொள்வீர்கள். அவர்கள் சற்றே வளர்ந்துவிட்டால் அது சாத்தியமில்லை. உங்கள் இதயத்தில் மட்டுமே அவர்களை உங்களால் சுமந்துகொள்ள முடியும்! அத்தகைய உங்கள் பிள்ளைகளோடு கொம்பியூட்டரின் நன்மைகள் தீமைகள் பற்றிக் கலந்துரையாடுங்கள். மனந்திறந்து அளவளாவுங்கள். அன்பாக இருங்கள். அது ஏராளம் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வாகும். அதுவே எப்போதும் சாத்தியப்படக்கூடிய, பயன்மிக்க தீர்வுமாகும்!
💻💻💻💻💻💻💻💻💻💻💻💻💻💻💻💻💻💻






1 comments:

  1. இணையதளத்தின் மூலம் ஏராளமான நன்மைகளும் தீமைகளும்.

    ReplyDelete