இன்று பல்வேறு
நாடுகளிலும் உறவுகள் பிரிந்து வாழ்ந்தாலும், இருக்கும் நாடுகளில் உள்ள தம் சில உறவுகளினிற் கிடையே , உறவினைத் தக்க வைத்துக் கொள்ளல் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
அதிலும் தாம்
பழகுவதில் ,சொந்தங்களை விட அந்நியர்
அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனும்
கருத்துக்கள் இன்று பரவலாக செவிவழியே கேட்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால்
அக்கருத்து ஏழக் காரணங்கள் என்ன என்று சிந்திக்க மட்டும் யாருக்கும் இங்கு
நேரமில்லை.
‘நேரமில்லை’ என்பது இக் காலத்தில் தப்பிக்கக் கூறும் புதிய பேச்சு வழக்காக
இருந்தாலும் , உதாரணமாக -தாம் நினைத்தபடி விசேட
நாட்களில் நடைபெறும் 24 மணிநேர கூட்டுப்
பிராத்தனைக்கு செல்லும் ஒருவர், தன் கூடப் பிறந்தவளிடம் , நத்தார் விடுமுறைக்குக் கூட செல்ல நேரமில்லாமல் , அங்கு பிராத்தனைக்கு
வந்தவர்களின் வீடுகளுக்குமட்டும் சென்று குதூகலித்து வருகிறார் என்றால் ,எப்படிச் சொந்தங்களுக்குள் அன்பு விருத்தியடைவது.
ஒருமுறை, என் நண்பன் ஒருவனின் தந்தையின் இழவுவீட்டிற்கு
சென்றிருந்தேன். இந்த இடத்தில் இழவு வீட்டில் அழலாம், அல்லது அழப்படாது என்று நான் கூற வரவில்லை. அங்கு மையம்
வைக்கப்பட்டிருந்த இடத்தினை நோக்கி , குடும்பமாகவோ, தனியாளாகவோ வந்தவர்கள் ,வந்த முறைப்படி சென்று மையத்தின் முன் நின்று சில வினாடிகள்
அமைதி வணக்கம் செய்து ,திரும்பிக்கொண்டனர்.
சிலர் வந்தால் 'ஓ' வென்று அழும் அமரரின் மனைவியும் , மகளவையும் சிலரின் வருகையின் போது கவனியாது இருந்தனர்.
எனது சந்தேகத்தினை
சில காலம் கழித்து என் நண்பனிடமே கேட்டுக் கொண்ட போது ,புன்னகையோடு அவன் கூறினான் ''அது பிறத்தி ஆட்கள் வந்தபோது அப்படி அவர்கள் அழுதார்களாம்''
முன்னரெல்லாம் , இந்தச் சந்தர்ப்பத்தில்
உறவுகளைக் கண்டால் கூடிப் பழகியதை நினைத்து உணர்வுப்பூர்வமாக அழுகை வருவது இயல்பு. இது
சொந்தங்கள் வரும்போது மட்டும் அழுகை
வரவில்லை என்றால் [அழுகைக்குக் கூட 'சுவிச்' வச்சிருக்கிறாங்களோ?] , தங்கள் உறவுகளுடன் கூடிப்
பழகாமையே காரணம் எனத் தெட்டத் தெளிவாக்கத் தெரிகிறது.
அதிலும் , சொந்தமில்லாதவர்களின் எந்தக் கருத்துக்களையும்
அனுசரித்துப் பழகும் நம்மவர், உறவுகளிடம் எதற்கும் எதிர்ப் புணர்வுகளைக் காட்டி , உறவினிடையே இடைவெளியினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
ஏன்? சில வீடுகளில் கணவன்/மனைவி
பேச்சுக்கு மதிப்பை கொடுக்கப்படுவதில்லை. பதிலாக அடுத்தவன் /அடுத்தவள்
பேச்சே எடுபடுகிறது. இவ் இயல்புகள் குடும்பவாழ்வில் ஆரோக்கியத்தினை ஒருநாளும் கொடுக்கப் போவதில்லை.
எனவே
அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பினை ,உங்கள் உறவுகளுக்கும் கொடுத்தாலேயே மேலும் சந்தோசமாக வாழ வழி பிறக்கும் . கூடி வாழ முடியும்.
✍செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment