இஜேசு பிறந்த மார்கழி 25 !


🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶🎄🎅🤶இஜேசுபிரான் அவதரித்தது மார்கழி 25 என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டாலும், உண்மையில் அவர் இத்திகதியில் பிறந்தார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
 அவர் பிறந்தது இத்திகதியாய் இருக்கமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்தாலும், விரிவஞ்சி சிலவற்றைக் கூற முனையலாம்.
முதலில், ஜேசு பிறந்த இரவில் மேய்ப்பர்கள் தமது மந்தைகளை புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது (லூக் 2:7-8). ஜூடியாவில் மார்கழி இரவு கடும் குளிரும், மழையும் நிறைந்த காலம். இப்படியான இரவில் அவர்கள் மந்தைகளை அதன் பட்டியில்தான் அடைத்து வைத்திருந்திருப்பார்கள். இரவில் வெளியில் உலாவக்கூடிய காலம் கோடை அல்லது இலை உதிர் காலமாக இருந்திருக்க வேண்டும்.

அத்தோடு பெற்றோர்கள் ரோம் குடிசன மதிப்பீட்டுக்காக பெத்தலஹெம் வந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது (லூக் 2:1-4). பனிகொட்டும் குளிரில், பழுதுபட்டிருக்கும் வீதிகளினூடே இப்படியான கணக்கெடுப்பு மார்கழியில் நடைபெறுவது கிடையாது.
மேலும், ஜோனின் தந்தை ஜெருசலேமில் ஜூன் 13-16 அளவில் நடத்திய அபிஜா பூசையின் போது தனக்கும் எலிசபெத்துக்கும் ஒரு மகன் பிறக்க இருப்பதை அறிகிறார். அவர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கர்ப்பமாகின்றாள் (லூக் 1:22-24). இவரின் 6 வது மாதத்தில் மேரி கர்ப்பம் தரித்தார் (லூக் 1:24-36). இதன்படி, மார்ச் கடைசியில் ஜோன் பிறக்க, ஜேசு செப்டெம்பர் கடைசியில்தான் பிறந்திருக்க வேண்டும்.
 அப்படி என்றால் மார்கழி 25 எப்படி வந்தது?
 அக்காலத்தில் பலதெய்வ வணக்கம் ஆழமாகச் சமூகத்தினரிடம் பரவி இருந்தது. இவற்றில் ஒளிதரும் தெய்வமாகிய சூரியனை மார்கழி 25 இல் விழா எடுத்து கொண்டாடுவது  வழக்கமாய் இருந்தது. இக் குழுவினரை திருப்திப்படுத்தி, தம் சமயத்தில் உள்வாங்குவதற்காக கி.பி.336 அளவில் கொன்ஸ்டண்டைன் என்னும் ரோமன் கத்தோலிக்க பேரரசனால் இந்த தினத்தை கிறீஸ்துநாதர் பிறந்த தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இன்று வரை உலகமெல்லாம் கொண்டாடி வருகின்றார்கள்.
 அவர் எங்கு, எப்படி, எப்போது பிறந்தார் என்பதிலும் பார்க்க, அவர் பிறந்தாரே என்று மகிழ்வுற்று இப்பண்டிகையை எல்லோரும் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

செல்வத்துரை சந்திரகாசன் 

0 comments:

Post a Comment