நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 05A

 [சீரழியும் சமுதாயம்] 

1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]

பாலியல் நோக்குநிலை என்பது நீங்கள் யார் மீது ஈர்க்கப்படுகிறீர்கள் மற்றும் உறவு வைத்திருக்க விரும்புகிறீர்கள் பற்றிய உங்கள் பாலியல் நடத்தை ஆகும் எனலாம் [Sexual orientation is about who you’re attracted to and want to have relationships with]. அந்த பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் ஆகிறது. எனவே தனிப் பட்டவர்களுக்கு குடும்பங்கள் ஒரு முக்கிய ஆதரவு அமைப்பை - குழந்தை பருவத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரிகள், மாமா, மாமி .... என தொடங்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிலையில் வழங்குகிறது. இப்படியான வெவேறு பல தனிப்பட்டவர்கள் பரஸ்பர நன்மைக்காக ஒன்றாக வேலை செய்யும் பொழுது அங்கு ஒரு சமூகம் உதயமாகிறது. அது சிறிதோ பெரிதோ, அவர்களிற்கு இடையான தொடர்பு அல்லது இணைப்பு அந்த சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. இப்படியான குடும்பத்தின் பாத்திரங்கள் [roles] கலாச்சாரத்தை தொடர்ந்து நூற்றாண்டுகளாக வாழ, நிலைநாட்ட முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இதை உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் மூலம் இனப்பெருக்கத்தையும், மற்றும் சமூகம் மூலம் சமூகமயமாக்களையும் குடும்பங்கள் செய்கின்றன [biologically through procreation, and socially through socialization].

குடும்பம் சமூகத்தின் அடிப்படை சமூக அலகு என்பதால், ஒரு சமூகம், சமுதாயம் நிலைத்து, வலுவாக நிற்க, சில குறிப்பிட்ட இயல்புகளை கொண்ட தனிநபர்களினால் அமைக்கப்பட்ட  வலுவான குடும்பங்கள் எமக்கு தேவைப்படுகிறது. இந்த நோக்கில் நாம் பார்க்கும் பொழுது கட்டாயம் ஒரு தனிப்பட்ட ஆணாலும் ஒரு தனிப்பட்ட பெண்ணாலும் அமைக்கப்பட்ட குடும்பம் ஒரு சிறந்த அமைப்பாக தென்படுகிறது, ஏனென்றால்,

1] குழந்தை தனது இயல்பான, உயிரியல் [natural, Biological] தந்தை மற்றும் தாயின் செல்வாக்கின் கீழ் வளர்க்கப் படுகிறது,
2] குடும்பங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை என்றால் அல்லது ஒரு இனம், இனப்பெருக்கம் செய்யவில்லை என்றால், அந்த குடும்பங்கள் அல்லது அந்த உயிர் இனங்கள் அழிந்து போகும் அல்லது இறந்து போகும், அதனுடன் அவர்களின் அல்லது அவைகளின் சமூகமும் அழிந்து போகும்.

கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து பூரணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார்    

"தண்டு ழாய்முடி யான்தனி நாயகற்
கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான்
உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ
கொண்ட வேடம் இனிதென்று கூறினான்." [1458]

அதற்கு பாடல் 33 இல், திருமால்,சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல்  முறையோ? என்று

"அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டது மன்று முதல்வநீ
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463]

என வினவினார். மேலும் கடவுள் சிலைகளை தாண்டி, பல வகையான கவர்ச்சிமிகு எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை நிர்வாண சிலைகள், இந்தியாவின் பெரும்பாலான பழைய இந்து கோவில்களின் கோபுரங்களில் மற்றும் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கஜுராஹோ- மத்தியப் பிரதேசம், மார்க்கண்டேஸ்வரர் கோவில்- மகாராஸ்டிரா, படவலி கோவில்- மத்தியப் பிரதேசம், ரணக்பூர் ஜெயின் கோவில்- ராஜஸ்தான், சூரிய கோவில்- ஓடிஸா, சூரிய கோவில்- குஜராத், ஓசியான்- ராஜஸ்தான், விருபாக்ஷா கோயில்- கர்நாடகா போன்றவை ஆகும். இது ஓரினச்சேர்க்கை அன்று புராண கதைகளில், கடவுள் துதிகளில் காணப்பட்டதற்கு சாட்சி பகிர்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

சுமார் 400 மிருக இனங்கள் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண் அடங்கும். சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன்[ Goodeid fish] போட்டியாளர்களை ஏமாற்றுவதற் க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி ,உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 05B தொடரும்..
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 05B வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 05B

1 comment:

  1. அத்துடன் இன்றய தொலைக்காடசி ஊடகங்களில் குழந்தைகள் கொச்சையான பாடல்களை நடித்துக்காட்டி படிப்பதுவும் , காதல்,போன்ற நாடகங்கள் செய்வதுவும் அருகில் பெற்றோர்களே அதைப் பார்த்து இரசிப்பதுவும் ,சமுதாய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது

    ReplyDelete