திருமண அழைப்பிதழ்


தற்காலத்தில்  தமிழர் திருமணம் 

(அழைக்கப்பட்டோர் / அழைக்கப்படாதோர் பட்டியல்)

நமது சாதாரண திருமண அழைப்புகள் ஒன்று இப்படி இருக்கும்; ஆனால் உண்மையான விடயம் வேறு விதமாக இருக்கும்.

ஓர் 500 - 1000 பேர் என்றாலும் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.

➦அழைப்பிதழ்....  

💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑
நிகழும் மங்களகரமான ஸர்வதாரி வருடம்
ஆனி மாதம், எட்டாம் நாள் 
(22 - 06 - 2008 )  சனிக்கிழமை,
 சதுர்த்தி திதியும், திருவோண நட்சத்திரமும்,  அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில்,
காலை 10 .00 முதல் 11 . 30 வரை அமைந்துள்ள மிதுன லக்கின சுப முகூர்த்தத்தில்,
எமது கனிஷ்ட புத்திரன்  
செல்வன் செல்வராசாவுக்கும்,
எமது சிரேஷ்ட புத்திரி 
செல்வி Dr . செல்வராணிக்கும்
திருமணம் செய்து வைக்க, இறைவனால் திருவருள் கொண்டு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ---------
இத்தருணம், தங்கள் சுற்றமும், நட்பும்  சூழ வருகை தந்து, மண மக்களை வாழ்த்தி அருள,
 மிகவும் அன்புடன் அழைக்கிறோம்.

---- (இருவீட்டாரின் அன்பான இனிய அழைப்பு).
💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑

இது ஒரு காதலித்ததால் செய்து வைக்கப்படும் திருமணம்; கடவுளுக்கோ, பெரியோர்களுக்கோ அங்கு ஒன்றும் இடமில்லை

இங்கே 'அன்பு, உறவு, நட்பு, பெரியோர், வாழ்த்து என்று சொல்வதெல்லாம் ஒருவித கருத்தும் இருக்காது என்பது 'அழைக்கப்பட்டோர், அழைக்கப்படாதோர் பட்டியலைப் படித்தால் புரியும்.

 ( ஒரு வெளிநாட்டுச்  சூழலில்) மணமகனின் தந்தை தயாரித்தபடி:

அழைக்கப்பட்டோர் பட்டியல்:

(# = முழுப் பெயர் கேட்டறிய வேண்டும்.
@ = விலாசம்  கேட்டறிய வேண்டும்)
*  இங்குள்ள அம்மா, பெரியண்ணன், மணமகளின் அண்ணன் வரதன், தம்பி குமரன், சித்தப்பன் நாகலிங்கம்   - இவர்கள் காதலை ஆதரித்தவர்கள்.
*ஊரில் இருந்து தங்கை, சின்ன தம்பி ஆகியோர்.
* மேலதிக வருவாய் வருவதற்கு உதவி செய்த செல்வகுமார்.
* வரி கடடாமல் தப்ப உபாய வழி சொல்லித்தந்த கனகலிங்கம்.
* வைத்தியர்கள் கனகராசா, சாம்பசிவம் @.
* 10 ஆம் வகுப்பு ஆசிரியர் கனகா டீச்சர்.
* இடைக்கிடை கூப்பிட்டு சாப்பாடு தரும் சுமதி.
* சூரியகுமார், ஒரு பெண் விடயத்தில், ஒரு மாதிரிக் குணம் உள்ள சின்ன அண்ணனுடன்  சண்டை போட்டு, அவருடன் கோவமாய் இருப்பவர்.
* ஊரில் பழகிய நண்பர்கள் கனகர், செல்வன், மணியம், சீதை.
* பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் படித்த சோமு, ராமன் @.
* பல்கலைக் கழக மோகன் @, தங்கா #@, கண்ணன் @..
* வேலையிடத்தில் சந்தித்த பரமு #@, முகிலன் #@.
* முருகன் கோவிலில் காணும் 120  பேர்கள் #@.
* பாபா பஜனையில் சந்தித்த 25  பேர்கள் #@.
* கடையில் சந்தித்த போது கல்யாணம் எப்போது என்று கேட்கும்  அந்த ராஜா, வேலு, கோமளா, இன்னும் ஒரு இரண்டு தம்பிமார் (எல்லாம்) #@.
* பார்க்கில் சந்தித்த அந்த இந்தியர் மூவர் #@.
* முன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு, கண்டால் குட் மோர்னிங் சொல்லும்  இத்தாலியன் ரோனி #.
* அதற்கு அடுத்த வீட்டு, கண்டால் வானிலை பற்றிக் கூறும் கிரேக்க அலெக்ஸ் #.,
* பின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த நல்ல சீன மனிதர் #.
* நாய்க்குட்டி, ஒளியை நடக்கக் கொண்டு போகும்போது இடைக்கிடை சந்திக்கும் பிளாக்கியின் சீன அம்மா #, டைகரின் மலேசிய அம்மா #@, சொப்பியின் இந்திய அப்பா #@, படியின் சேர்பிய அம்மா #, இன்னொரு பெரிய நாயின் கொழுத்த, அந்த இந்தியன் போல இருக்கும் மனிதர் #@.
* சீன சுற்றுலா போனபோது சந்தித்த அந்த பிஜி நாட்டவர்; போன் இலக்கம் இருக்கிறது #@.
* மணமகனின் பட்டியல்
*மணமகளின் பட்டியல்.

அழைக்கப்படாதோர் பட்டியல்:

* மணமகளின் பெற்றோர், காதலை எதித்தவர்கள்.
* பெரிய தம்பி; என்னை  கவனிக்காமல் விட்டவர்.
* சின்ன அண்ணன், நான் அவரைக் கவனிக்கவில்லை என்று கோவமாய் இருப்பவர்.
* மணமகளின் அக்கா கிரிசா, தங்கையின் வருமானத்தையே சுரண்டிக்கொண்டு இருப்பவர். ,
* சித்தாப்பா, அவர் பிள்ளைகள் எனக்கு ஒரு நாளும் போன் எடுத்துக் கதைக்காதவர்கள்.
* ஊரில் அயல் வீட்டுக் கந்தையாவின் பேரப் பிள்ளைகள்  ரஞ்சன், ரஞ்சி. ஊரில் 60 - 65 ஆம் ஆண்டுகளில் எல்லை வேலியின் கதியால்களை எங்கள் பக்கம் அலவாங்கால் தள்ளித் தள்ளி போட்டு, நிலம் பிடித்து, அப்பாவோடு சண்டை பிடித்தவர் அந்தக் கந்தையா.
* 7  ஆம் வகுப்பில் இருந்து இன்னமும் என்மீது  பொறாமையில் இருக்கும் நல்லத்தம்பியின் பிள்ளைகள் அருணா, குமுதா.
* முன் வீட்டு தமிழ் மனுஷி லட்சுமி, பக்கத்து வீட்டு பீட்டர்; எப்போதும் எங்கள் வீட்டை ஜன்னலுக்கால் பார்ப்பவர்கள்.
* பின் வீட்டு சீனன், எல்லை வேலி போட்டுவிட்டு பங்கு கேட்டவர். அவரின் பக்கத்து வீட்டு சீனன் இவரைக் கூடாதவர் என்று சொன்னார்.
* நான் பெரிய வீடு கட்டினது கொழுப்பிலே  என்று கதைத்த மாமா ஜெகன்.
* என்னுடைய காரைப் பீத்தல் வண்டி என்று 30 வருடத்துக்கு முதல் பரிகாசம் செய்தார் என்று கேள்விப்பட்டு, இன்னமும் கோவமாய் இருக்கும், ஊரில் முன் வீட்டில் இருந்த, எனது ஒன்று விட்ட சகோதரன்  அருளன்.
* என்னைக் காசுப்பேய் என்று சொல்லித்திரிந்த என் மனைவியின் அக்கா குடும்பம்.
* இந்தத்  தெருவில் இருக்கும் வேலனின் பேரப்  பிள்ளைகள்; ஊரில் தெரிந்தவர்கள்தான்; ஆனால், அவர்களை யார் என்று எல்லாருக்கும் தெரியுமே! ஏன் பிரச்சனையை?
* மூன்றாவது வீட்டுச் சில்வா; என்னோடு படித்தவர்.எங்கள் சனங்களை அவர்களின் ஆட்கள் தானே சாக அடித்தவர்கள்; கூப்பிடக் கூடாது.

இவ்வளவுக்கும், அழைக்கப்பட்டிருக்கும் ஆயிரம் பேரில் ஒரு பத்து பேராவது  இவர்கள் வீட்டுக்கு தமது வாழ்க்கையில் வந்திருப்பார்களோ தெரியாது. ஓர் ஐந்து பேர் மட்டுமே மணப் பெண்ணையோ, மாப்பிளையையோ ஏற்கனவே கண்டிருப்பார்கள்.

மணம் புரிய போகின்றவர்களுக்கு, அழைக்கப் பட்டவர்களில் ஓர் இரண்டு, மூன்று பேரைத்தான் அதிகமாகத் தெரிந்திருக்கும், அல்லது  கண்டிருப்பார்கள்; பழகியே இருக்க மாட்டார்கள்.

எப்போதும் பழக வேண்டிய, உண்மையில் இதயபூர்வமாக வாழ்த்தக் கூடிய சொந்த, பந்தங்களை எல்லாம் விட்டு விட்டு, சும்மா வந்தவன், போனவன், கணடவன், நின்றவன், சிரித்தவன், கை காட்டியவன், கண் சிமிட்டியவன், பக்கத்தில் நின்றவன், தொட்டவன், கேட்டவன், பந்தம் பிடித்தவன், லஞ்சம் கொடுத்தவன்  என்று எல்லோரையும் கூப்பிட்டால் என்ன நடக்கும்? இவர்கள் எல்லோரும் விருப்பம் இல்லாமல் வந்து, சலிப்புடன் உட்கார்ந்து கொண்டு, 'எப்போதடா இந்த எழவு முடியும்; என்று சபித்தபடி, ஒரு தொகையை விருப்பமே இல்லாது ஒரு தண்டப் பணமாகச் செலுத்தி, போதாமல் முடிந்து கொண்டிருக்கும்  உணவை ஓடிச் சென்று புசித்ததும், பறந்து சென்று விடுவார்கள். அதன் பின்னர் அவர்களை இவர்கள் பக்கம் பார்க்கவே இயலாது.

கடைசியில், வைபவ முடிவில் கணக்கைப் பார்த்தால், பண இலாபம் அடைந்தவர்களும் இருக்கலாம்; நட்டப் பட்டவர்களும் இருக்கலாம்.

எனினும் சொந்தங்களையும், அக்கறையுள்ள  அவர்கள் ஆசீர்வாதங்களையும் முட்டாள்தனமாக் இழந்தமைதான் முன்னிற்கும் என்பது மறுக்கப் படமுடியாத உண்மை.

பிள்ளைகளின் திருமணநாளினை காரணமாக வைத்து ஏற்கனவே விரிசலாக இருந்த உறவுகளுடன் ,,சொந்தங்களை மீண்டும் உறவாக்கிக் கொள்ளும் நிலை வெளிநாட்டு என்ற மோகம் வருவதற்கு முற் காலம் வரை இருந்து வந்தது.. இன்று அவர்களை தவிர்த்து கோப முத்திரையினை ஆழக் குத்தும் நிலையே காணப்படுவதுடன் அவர்களுக்குப் போட்டியாக பெரும் எடுப்பில் ஆடம்பர விழாக்களை எடுத்து பின்னால் நொந்துகொள்கிறார்கள்.  

எண்ணிக்கையைக் கூட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்டு, தேவையான, அக்கறையுள்ள ஒரு சிலரோடு ஆடம்பரம் அற்ற முறையில் நடக்கும் திருமணங்கள் நன்றாகத்தானே இருக்கும்!

ஏன்தான் இந்த அர்த்தமற்ற கொண்டாட்டங்களோ!

✍செல்வத்துரை,சந்திரகாசன் 

0 comments:

Post a Comment