கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....


                                                                                23/11/2019                

அன்புள்ள அண்ணைக்கு ,

நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.

நான் என் விடுமுறையினை ஒரு மாதம்  ஊரில் கழித்து நலமே கனடா வந்து சேர்ந்தேன். நீண்ட காலத்தின் பின் ஊரில் உலவியபோது பெரும் மாற்றங்களினையும் ,அனுபவங்களையும்  உணரமுடிந்தது.


 வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்கள் வசதிகளினை பெருமையோடு ,ஊரில் உள்ளவர்களுக்குக் காட்டிச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஊரில் உலவுவதாக  , என் நண்பர் மூலம் அறிந்துகொண்டேன். அப்படிச் சொல்வோர் நிலையில் இருந்து பார்த்தால் அக்கருத்து சரியாக இருந்தாலும் ,இன்னொரு பக்க நியாயமும் அதற்கு உண்டு எனலாம்.

அண்ணைஇங்கு வெளிநாடுகளில் வாழ்வோர் தாம் ,வாங்கிய வீடுகளில் உறங்கக் கூட நேரமில்லாமல் 1,2,3 வேலைகள் கூட செய்து தங்கள் வாழ்வின் பெரும்பாலான நேரத்தினை இழந்து , விறைத்திடும் குளிரினுள்  உடல் நொந்து, சலித்திடும் வாழ்வினில் மனம் வெந்து  பலரும் வேலை,வேலையென்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியான நிலையில் சொந்த உழைப்பில் வாங்கிய உடுப்புகளை போட்டு அழகு பார்க்க நேரமில்லாத நிலையில், விடுப்பு எடுத்து ஊர் வரும்  வேளையினை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள்.  தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை ஒரு சில நாட்களாவது  அனுபவிக்க அவர்களுக்கு உரிமை இல்லையா
 இது கனகாலம் நீடிக்காது என கருதுகிறேன்.ஏனெனில்...

அண்ணை, ஊரில் வருவோரின் பிள்ளைகள் வளர்ந்துவிட்ட்னர். அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுவர ஆரம்பித்துவிட்ட்னர்.  ஆதலால் பிள்ளைகளின் வருகை ஊரில் இனிமேல் குறைய ஆரம்பித்துவிடும். அதேவேளையில் பெற்றோர்களுக்கும் வயது ஏறிக்கொண்டு போவதால் அவர்களுக்கும் இயலாமை வரும்போது தூரப் பயணங்களைக் குறைக்கவே செய்வார். எனவே ஊருக்கு வருவோர் தொகை சீக்கிரம் சரிய ஆரம்பிக்கும் என்பது உணரக்கூடியதாக இருக்கிறது.



வெளிநாடுகளிலிருந்து வருவோரில் சிலர் தாம் வயது போனபின் ஊரில் வந்து இருக்கப் போவதாக கூறுவது நடைமுறையில் சாத்தியமற்றது என எண்ணுகிறேன்.  வயதுபோனபின் இயலாத காலத்தில் இங்கு இருக்கும் வைத்திய வசதிகளையும், பிள்ளைகளின் உதவிகளையும் துறந்து அனாதைகள் போல் தனியே வந்து இருக்க அவர்களின் இயலாமை இடம்கொடாது. ஊர்மேல் உள்ள பற்றினால் அவர்கள் அப்படி உணர்கிறார்கள்.பேசுகிறார்கள்.


வெளிநாடு வந்து நாம்- [மழைக்காலத்தில் விளக்கின் ஒளியினைக் கண்டு ஓடிவந்து வீழ்ந்து இறக்கும்-] விட்டில் பூச்சி களானோம் என எண்ணுவதுண்டு. ஏனெனில் எமது வயதினருடன் தமிழ் பேசும் சமுதாயம் ,புலம் பெயர் நாடுகளில் இல்லாமல் போய்விடும். 

அண்ணை ,இங்கு வைத்தியரின் ஆலோசனையின்படி ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் நடக்கிறோம். பல நாட்டவரும் ,நடப்பதற்கு  பணம் கட்டிப் பயிற்சி நிலையங்களுக்கு சென்றுவருகிறார்கள். 2,3 கிலோமீட்டர் தூரமானாலும் பிள்ளைகள் பாடசாலைக்கு இங்கு நடந்தே செல்கின்றனர். ஆனால் ஊரில் , பாடசாலைப் பிள்ளைகளானாலும் சரி, ஏனையோரும் கால் நிலத்தில் படாமலேயே பயணம் செய்வது , பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிட்ட்து. பக்கத்திலுள்ள பாடசாலைக்கும் பிள்ளைகள்  , மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லப்படுவது , பார்க்கக் கடினமாகவே இருந்தது.
அப்பு,வீட்டுக்கு வீடு பிரச்சனைதான். கருத்து வேறுபாடு இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனால் இன்று கையில் எழுத வசதி கிடைத்தமையினால் தம் வீட்டுக்குள் இடம்பெறும் பிரச்சனைகளை முக நூலில் ஒருவரை ஒருவர் நேரிடையாகத் தாக்கி எழுதி, உலகம் முழுவதும் அதனை படித்துகொள்ளச் செய்வது, தங்களுக்கே கேவலம் என உணர முடியாமல் சிலர்  நடந்துகொள்வது கவலைக்குரிய விடயமாகும். இதனால் உறவுகளின் விரிசல் நிரந்தமாவதுடன் ,உலகம் தம்மைக் கேலி செய்யும் வகையில் , இவர்களே கருத்துக்களை உலகிற்கு  வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் எனப் புரியாதுள்ளனர்.


அண்ணை, புதிதாக ஆலயங்களில் 'மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதற்கான ,பூசைக்கு பதிவு செய்தல்' போன்ற அறிவித்தல்கண்டு அதிசயித்தேன்.

கௌரிக் காப்புக்கு முதல் நாள் காளிகோவினில் மந்திரங்களின் மத்தியில் ஹோமம் வளர்க்கப்பட்டு, அந் நெருப்பில் ஐயர் பட்டுச் சேலைகளையும் , தங்க நகைகளையும் போட்டுக்கொண்டிருக்க , நீண்ட வரிசையில் பெண்கள் நின்று அவற்றினை ஐயரிடம் வழங்கிக்கொண்டிருந்த அற்புதக் காட்சி கண்டு வேதனையடைந்தேன். அங்கே  தீபாவளிக்கும்  ,உடம்பில் உடுப்பில்லாது , உணவில்லாது எத்தனை மனிதர்கள் தரையில் வாழ்ந்து செத்துக்கொண்டிருக்கிறார்கள்.. இந்த அநியாயங்களினை செய்வதற்கு எப்படி இவர்களுக்கு நெஞ்சம் இடம்கொடுக்கிறது.

எமது இனம்  இயற்கையினாலும் , விரோதங்களாலும் அழிந்துகொண்டிருப்பது, பாலாபிஷேகங்களும்,  இப்படியான பாவங்கள் தான் காரணமோ என எண்ணத்தோன்றுகிறது. ஆரியன் அன்று போட்ட முடிச்சு. அதிலிருந்து விடுபட முடியாத சமுதாயமாக நாம் மாற்றப்பட்டுவிட்டோம். எம்மை தற்போது ஆளாத அவனிடம் இருந்து விடுதலையடைய முடியாத நாம் ,எப்படி ஆளுபவனிடமிருந்து விடுதலையைப் பற்றிக் கருத முடியும் , கதைக்க முடியும்?

அண்ணை, நான் சிறுவனாக இருந்த காலத்தில் தைப்பொங்கல் மட்டுமே பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். ஆனால் இந்தியாவினைப் பின்பற்றி இப்போது தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்கக் கண்டேன். வாண வேடிக்கைகள் மகிழ்ச்சியானவைதான்  .ஆனால் வளர்ந்த நாடுகளில் அவை அதிகமாகப் பாவிக்கப்பட்டாலும் உயிராபத்தினை விளைவிக்கக் கூடிய பட்டாசுகள் அனுமதிக்கப் படுவதில்லை.
ஆனால் இலங்கையில் ஆபத்தான பட்டாசுகள்  பாவிக்கப்படுகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்திய சினிமாவின் பாரிய தாக்கத்தினை ஊரில் நின்றபோது கண்டு கவலை கொண்டேன். புதிதாகத் திரையிடப்பட்ட விஜய் நடித்த ''பிகில்'' படத்திற்காக இளையோர் முண்டியடித்த காட்சிகளும் ,திரையரங்கு உடைப்புகளும், மோதல்களும்  நமது சமுதாயம் இவ்வளவு தூரம்  கீழ் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறதே என எண்ணத் தோன்றியது. யாரோ ஒருவனின் சாதனைகளை குறிப்பிடும் இவர்கள், தங்கள் வாழ்க்கையில் எதனைச் சாதித்துக் கொண்டனர் என ஒரு கணம் சிந்திப்பார்களானால் ,இவர்களும் வாழ்க்கையில் சாதனைகளைச் சந்திப்பார்கள். எங்கே? இவர்கள் சிந்திக்க வேண்டுமே?

அண்ணைஉங்கள் சுகத்தையும் தேவைகளையும் எழுதுங்கள். மீதி பின்னர்...
இப்படிக்கு
அன்பின் தம்பி 
செ.மனுவேந்தன்

2 comments:

  1. நண்பனே ,நான் ஊருக்கு போனதில்லை.போகவும் முடியாது. உங்கள் கடிதம் வியப்பினை தருகிறது. நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. சிவா சிவாSaturday, November 23, 2019


    நானும் ஊருக்கு சென்றுவந்தேன்.நீங்கள் எழுதியது அத்தனையும் உண்மை.மேலும் அங்கு விதானையின் அலுவலகம் சென்றபோது விளம்பரப்பலகையில் 30 ற்கு மேற்படட தொழில் இலவசப் பயிற்சிகளுக்கு விளம்பரம் போடப்பட்டிருந்தது. அச் சலுகைகளை பெற்று வாழ்வில் முன்னேறும் நோக்கம் இளையோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசினைக் குறைகூறுவோரே அதிகம்

    ReplyDelete