பக்தி, ஞானம், முக்தி, தெளிவு தொடர்ச்சி....
முக்தி/A
இன்றைய மனிதர்கள் முக்தி
என்பது இறந்த பின் மோட்சம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என
இந்த உலகங்களை அடைவது தான் முக்தி அடைதல், என்ற நம்பிக்கை கொண்டு
வாழ்ந்து வருகின்றார்கள். இதற்கு இறைவனை வணங்கி வந்தால், கடவுள் உபாசனை
செய்து வந்தால், முக்தி கிடைக்கும் என்று எண்ணி வாழ்ந்து வருகின்றார்கள். சிலர் இறப்பது தான்
முக்தி என்றும் கூறிவருகின்றார்கள். இதுபோன்ற மனிதர்களை பார்த்து என்குரு அகத்தியர்
கூறுவதை கேளுங்கள்.
"நாடு மெச்ச நரகம்
என்பார் சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண
மாட்டார்"
-என்கிறார்.
மற்றவர்கள் தன்னைப்பற்றி பெருமையாக எண்ண வேண்டி நரகம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என
எல்லாம் தெளிந்த ஞானி போல் பேசுவார்கள் ஆனால் தன் வாழ்வில் தனக்கு எது நல்லது, கெட்டது, தன் செயல்களில்
எது நல்லது, கெட்டது என அறிந்து கொள்ளாத மூடர்கள் என்கிறார்.
இந்த பூமியில் நாம் உயிருடன்
வாழும் காலத்திலேயே சுகம், போகம், செல்வம், புகழ், பதவி என
அனைத்தையும் அடைந்து, தன்னை உருவாக்கிய தாய், தந்தையையும், தான் உருவாக்கிய
மனைவி, குழந்தை, குடும்பத்தாரை சந்தோஷமாக வாழ செய்து, பெற்றோருக்கு நல்லமகனாக, மனைவிக்கு நல்ல
கணவனாக, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக வாழ்ந்து, தானும் மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து "இல்லை" என்ற சொல்லே வாழ்வில் "இல்லை" என்று
வாழ்ந்து வருவது தான் வாழ்வில் முக்தியை அடைந்த நிலையாகும்.
முக்தி என்பது கல்லூரி படிப்பை
போன்றது உயர்நிலை பள்ளியில் தன்னிடம் உள்ள திறமை, ஞானம் அறிந்து
தான் கற்ற கல்வியை மேலும், மேலும், விருத்தி செய்து அதில்
நிபுணத்துவம் பெற்று, பக்குவம் அடைந்து, வெற்றியை அடையும்
பருவம். பிறர் தன்னை திறமை உடையவன் என்று ஒப்புக் கொண்டநிலை. உயர்நிலைப் பள்ளியில்
கணிதம் கற்றவன் கல்லூரி படிப்பில் பொறியாளர் ஆக உருவாகின்றான். விஞ்ஞானம்
படித்தவன் விஞ்ஞானி, மருத்துவனாக முழுமை பெறுகின்றான். கலை கல்வி
படித்தவன் அந்த கலையில் திறமையை நிரூபிக்கின்றான். இது போன்று தன் திறமையை முழுமையாக
செயல்படுத்தும் சக்தியை அடைதலே, "முக்தி நிலை" என்று கூறலாம். வாழ்வில்
பிறரை சார்ந்து வாழாமல், தன்னையறிந்து, முழுமை பெற்று, தன் திறமையால்
புகழ், பொருள், பதவி என அனைத்தையும் அடையும் தகுதியை பெற்று, வாழ்வில்
உயர்நிலையை அடைபவன் முக்தி நிலை அடைந்தவன் ஆவான். இதுவே மனிதன் முக்தி அடைதல்
ஆகும்.
மோட்சம்
வேண்டார்கள் - அகப்பேய்
முக்தியும்
வேண்டார்கள
தீட்சை வேண்டார்கள் - அகப்பேய்
சின்மயமானவர்கள்
- என்கிறார்.
என்குரு தன்னையறிந்து ஞானம்
பெற்ற மனிதர்கள், தன் வாழ்வில் இறந்தபின் மோட்சம் அடைய வேண்டும்.
முக்தி நிலையை அடைய வேண்டும் என எண்ண மாட்டார்கள் ஏன் என்றால் இந்த மோட்சமும், சொர்க்கமும்
பொய்யானது என்று அவர்களுக்கு தெரியும். இந்த மோட்சம், சொர்க்கம், முக்தி இவைகளை
அடைய கடவுள் பக்தியும், பூசை, ஹோமம், தீட்சை
மந்திரங்கள் உதவி செய்யாது என தெளிவாக உணர்ந்து உள்ளதால் இவர்கள் இன்றைய போலி
குருமார்களை நம்பி ஏமாறமாட்டார்கள். அவர்களிடம் சென்று தீட்சை பெற்று
கொள்ளமாட்டார்கள். அவர்கள் கூறும் தீட்சை மந்திரங்களையும் கூறி, செபம் செய்து
செபித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தன் ஞானத்தினால் உலகில் உண்மை, பொய் இவைகளை தானே
அறிந்து மாயை நீக்கி, வாழ்வை மேன்மையானதாக கொண்டு, வாழும் போதே
முக்தி நிலையை அடைவார்கள். அனுபவிப்பார்கள்.
மூலமில்லையடி - அகப்பேய்
முப்பொருளில்லையடி.
மூல முண்டானால் - அகப்பேய்
முக்தியுண்டாமே.
இந்த உலகம் உருவாக காரணம்
கடவுள் தான், இறைவன் தான் இந்த பூமியை உண்டாக்கி, சகல உயிர்களையும்
படைத்தான் என்று கூறுவது பொய்யான வாதம் ஆகும். படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகாவிஷ்ணு, அளிக்கும் கடவுள்
சிவன் என்று கூறுவார்கள். இது பொய், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் என்ற மூவர்
தெய்வ தத்துவம் பொய்யானது. இதை நம்பி அலைவதைவிட்டு விட்டு, உன் பிறப்பின்
மூலத்தை அறிந்து உடல், உயிர், ஆன்மாவாக உள்ள நீ உனக்கு
நிர்ணயிக்கப்பட்ட மூலத்தை, உன் விதியை, உன்னையே நீ அறிந்து
வாழ்ந்து வந்தால் உனக்கு வாழும் போதே முக்தி உண்டாகும் என்கிறார்.
மூல
வேற றிந்து கொண்டால் மூன்றுலகமும்
முன்பாகவே
கண்டு நித்ய முத்தி சேரலாம்
சாலவேர
றிந்தாலே தான் பயனுன்டோ
சகத்தைபொய்
யென்றுதெளிந் தாடாய் பாம்பே.
ஒரு மனிதன் தான் பிறந்ததின்
மூல காரணத்தை, தன் விதியை, ஊழ்வினையை தன் ஞானத்தால் தன்னையறிந்து கொண்டு, தான் வாழ வேண்டிய
வழி முறையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், வாழும் போதே மூன்று
உலகமும் அடைந்து முக்தி நிலையை கொண்டவன் ஆவான். இப்படி தான்வாழும் கலை அறிந்த ஞானி
தினம், தினம் முக்தி அடைந்த வாழ்வை பெறுவான். இதை விடுத்து இந்த பூமியில் சில
பொய்யர்கள் கூறும், இறந்த பின் முக்தி நிலை என்ற பொய்யான
பேச்சுகளை கேட்டு கடவுள், பூசை, ஹோமம், தானம், தர்மம் என்று
நம்பி அலைந்து கொண்டு, தன் வாழ்வினை இவைகள் உயர்த்திவிடும், முக்தியை தந்து
விடும், என்று நம்பி அலைந்து கொண்டு இருந்தால் எந்த பயனும் கிட்டாது. எனவே இந்த
பூமியில் கூறும் பொய்யான, கட்டு கதைகளை புரிந்து கொண்டு தன்னையறிந்து
வாழ்தலே முக்தியை தரும்.
தொடரும்..
ஆரம்பத்திலிருந்து படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01..T
ஆரம்பத்திலிருந்து படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01..T
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
0 comments:
Post a Comment