நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 04A

[சீரழியும் சமுதாயம்] 

இன்றைய சமுதாயத்தின் சில அம்சங்களில், பெரும்பாலானவை இன்று அதிகமாக சீர்குலைகிறது அல்லது சரிகிறது என்பதை பலர் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது குறைந்தது அவையை கவனத்தில் எடுத்து ஒரு ஆய்வுக்காவது உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். எது எப்படியாயினும் விஞ்ஞானத்தை நாம் முழுக்க முழுக்க அறநெறி அல்லது வாழ்க்கைத் தரங்களில் [morality or living standards] இன்று உணரப்படும் சரிவுக்கு பொறுப்பு கூற முடியாது, அதே மாதிரி மக்கள் கூறும் இந்த சரிவுக்கு மதம் பொறுப்பு என்று முற்றிலும் கூறுவதற்கும் இல்லை. இந்த "சரிவு", பொது மக்களிடையே, மதச்சார்பற்ற இடது சாரிகளால் மற்றும் மத சார்பான வலது சாரிகளால் [secular left and the religious right], மிகைப்படுத்தப் படும் பிரசாரம் போலவும் தெரிகிறது. மற்றும் ஊடகங்களின் கவர்ச்சியான கெட்ட செய்திகளால் வசப்படுத்தும் அல்லது வசீகரத்தைச் செய்யும் [media's fascination with bad news] செயலாகும் எனவும் நம்பத் தோன்றுகிறது. இது இன்று ஒரு வருந்தத்தக்க விளைவு ஆகும் என நாம் கட்டாயம் நம்பலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பொதுமக்களின் ஒட்டு மொத்த அறிவியல் மற்றும் கணித கல்வியறிவின்மையும் [overall scientific and mathematical illiteracy]  இதற்கு ஒரு காரணம் ஆகும்.

உதாரணமாக சாக்ரடீஸ் [Socrates] அன்று, எழுத்துக்களின் எழுச்சியை விரும்பவில்லை, எதிர்கால தலைமுறையினருக்கு நினைவு கலை இதனால் அழிக்கப்படும் என அவர் வருத்தப் பட்டார். அவரைப் போன்ற கொள்கையுள்ள பலர் இன்றும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நாம் நினைவில் வைத்துக்கொள்ள இந்த எழுத்து என்ற மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை, என்றும், ஆனால் அவை, எமக்கு நினைவூட்டிடவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது [You have not discovered a potion for remembering, but for reminding] என வாதாடினார் சாக்ரடீஸ். மேலும், அவர்கள் தங்கள் நினைவகத்தை பயன்படுத்தி பயிற்சி செய்ய மாட்டார்கள், மாறாக, அவர்கள் எழுத்தில் தங்கள் முழு நம்பிக்கையை வைப்பார்கள் என்றார். அதே மாதிரி, மனப்பான்மை கொண்ட 19 ஆம் நூற்றாண்டின் லுட்யைட்கள் [எந்திர உடைப்புக் கிளர்ச்சியாளர்/ Luddites] ஆரம்ப துணி [ஜவுளி] இயந்திரங்களை அழித்தனர்.

19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் சில உண்மைகளும் உண்டு என்பது போல சில நிகழ்வுகளையும் இன்று காண்கிறோம். அவைகள் பலவற்றை வேறு வடிவங்களில் இதிகாசம் புராணம் மற்றும் வரலாற்றிலும் முன்பே கண்டுள்ளோம். உதாரணமாக ஒரு உலகளாவிய வரலாற்று ஆய்வு, ஓரினச்சேர்க்கை [homosexuality] ஒன்றும் புதியது அல்ல என்கிறது. கி மு 385 இல் பிளாட்டோ ஆண்களுக்கு இடையிலான காதல் மிகவும் உயர்ந்த அன்பின் வடிவம் என்றும், பெண்களுடனான பாலியல் தொடர்பு ஒரு காமம் மற்றும் இனப்பெருக்கத்திற்கான வழி மட்டுமே என்றும் வாதாடுகிறார் [Plato argues that love between males is the highest form of love and that sex with women is lustful and only for means of reproduction].  கி மு 326 இல்  ஓரின / இருபால் இராணுவ தலைவர் அலெக்ஸாண்டர், பெரும் தலைவர் [Gay/bisexual military leader Alexander the Great], மில்லியன் கணக்கான மக்களை ஓரின நட்பு - "ஹெலனிஸ்டிக்" [gay-friendly Hellenistic culture] கலாச்சாரத்திற்கு மாற்றினார். கிரீக்கில் [Greek] ஆரம்பித்த இந்த கலாச்சாரம், ரோமன் ஆட்சியிலும் தொடர்ந்ததை வரலாறு காட்டுகிறது.

முக்கிய சமயங்களை நோக்கும் பொழுது, பிராமண இந்து புராணம் [mythology], கிருஷ்ணர் அரவான் என்ற மகாபாரத வீரனை மணந்ததாகவும், மற்றும் அய்யப்பா கடவுள் சிவபெருமான் மற்றும் கிருஷ்ணருக்கு பிறந்தார் என்றும் கூறுகிறது. எனவே இந்து புராணங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளையும் [Homosexuals and transgenders] காண்கிறோம். மேலும், பொது காலத்திற்கு முன் 200 க்கும் பொது காலம் 300 க்கும் இடையில் அதிகமாக எழுதப் பட்ட, பழங்கால  சமசுகிருத பிராமண இந்துச் சட்டமான மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதியில், அத்தியாயம் 11 இல் செய்யுள் 174 & 175 இல், அயோனி (Non-Vaginal sex) பாலியல் பற்றி கூறப்பட்டுள்ளது. உதாரணமாக ஆணும் ஆணும் கூடினால், அந்தந்த சூழலை பொறுத்து, அதற்கு பரிகாரமாக ஒரு வித தவம் கடைபிடிக்க வேண்டும் அல்லது தனது உடையுடன் குளிக்க வேண்டும் என்கிறது .[If someone ejaculates his semen in a man, he should perform the Santapana penance [174] &  If a twice-bom [the condition or rank of a Brahman] has sexual intercourse with a man, in an ox-cart, on water, he should bathe with his clothes on.] அதாவது அது அசுத்தமானது என்று கருதி அதற்கு ஒரு பரிகாரத்தை மட்டும் எடுத்து கூறுகிறது. மற்றும்படி ஓரினச்சேர்க்கை பெரிய விடயமாக அங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. லேவியராகமம், அதிகாரம் 18:22 இல் "பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது." என்றும் ஆதியாகமம் 1:27, 28  இல் "ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார்,பின் அவர்களிடம் 'நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்தார்" என்கிறது பைபிள். எனவே ஓரினச்சேர்க்கையை பைபிள் கண்டனம் செய்கிறது எனலாம். அவ்வாறே 27:55 இல்,  நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” என்றும் கூறினார் என்கிறது குர்ஆன்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 04B  தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 04B  வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 04B
📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱

No comments:

Post a Comment