நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 03B

 [சீரழியும் சமுதாயம்] 
சமுதாய சீரழிவு  குடும்ப சீரழிவு இவற்றுக்கு மூலகாரணம் ஒரு தனி மனிதன் தன் கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடான முறையற்ற வழியில் வாழ்வது ஆகும். கம்பராமாயணம்/ பால காண்டம்/ நாட்டுப் படலத்தில் பாடல்  38 இல் "பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.", அதாவது சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும் என்கிறார் கம்பர். மேலும் 53 ஆம் பாடலில் "உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்", அதாவது பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்று கோசல நாட்டு சமூகத்தை புகழ்கிறார். என்றாலும் அந்த கோசல நாட்டு மன்னர் இராமன் தன், மனைவியை தீக்குளிக்க செய்ததும், மீண்டும் கர்ப்பணி மனைவியை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதும், அதன் பின் மீண்டும் ஒரு முறை  தீயில் குளிக்க கட்டாயப் படுத்த அவள் பூமிக்குள் பாய்ந்து தற்கொலை செய்ததும் இந்த கோசல நாட்டில் தான். இங்கு நாம் ஆணாதிக்கத்தையும் ஒற்றை பெற்றோரையும் கூட காண்கிறோம். இங்கு அமிர்தத்தையும் காண்கிறோம், விஷத்தையும் [நஞ்சையும்] காண்கிறோம். ஒரு சமுதாயத்தில் குற்றங்கள் பொதுவாக குறைய வேண்டும் என்றால் ,அந்த சமுதாயத்தின் உறுப்பினர்களிடையில் பழிவாங்களை வெறுத்து அல்லது அஞ்சி வாழும் உறுப்பினர்கள் வேண்டும். அதே போல அவர்களை ஆட்சி செய்பவர்களும் இருக்க வேண்டும். உதாரணமாக, புறநானுறு 184,   

"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே."

என்று பாடுகிறது. அதாவது, யானைக்கு, வாயளவு கொண்ட உணவாக, நெல்லை அறுத்து கொடுத்தால், ஒரு சிறு நிலத்தில் விளைந்த நெல் கூட பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், எந்த பெரிய வயல் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், தான் தின்பதை விட அதன் கால் பட்டு அழியும் நெல்லின் அளவு கூடுதலாகும். அது போலவே
ஆட்சியாளர், சரியான வரி திரட்டும் முறை தெரிந்து, அதன்படி  மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அதைவிட்டு முறையற்று வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல், நாடும் [சமுதாயமும்] பயனற்று, சீரழிந்து போகும் என்கிறது.

ஆமாம், பல கலாச்சார மற்றும் சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்கள் காலப்போக்கில் இன்று பெருமளவு சிதைந்துவிட்டன, மேலும் மக்களின் இதயங்களில் இவைகளின் குடியிருப்பும்  குறைந்து குறைந்து போகின்றன. நாம் நேர்மையாக சிந்தித்தால் அல்லது பார்த்தால், இதைப் பற்றி நிறைய உண்மைகளை நாம் காணமுடியும். இந்த குமுறல்கள் எம் சொந்த மனதில், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் மனதில் இன்று பெரிதாக ஒலிக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவைகளில் பல இன்று நேற்று எம்மத்தியில் தோன்றியவை இல்லை. இந்த மின்னணு [electronic] யுகத்திற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளிற்கு அல்லது அதற்கும்  முன்பே ஆரம்பித்து விட்டது. இனி அந்த சீரழிவுகள் அல்லது குமுறல்கள் என்ன என்னவென்று விரிவாக பார்ப்போமா ? அதற்கு முன் நான் முன்பு எழுதிய பாடல் ஒன்றும் ஞாபகம் வருகிறது. அதை கீழே தருகிறேன்: 

"பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை,வஞ்சகி
உனக்கு ஏனடி பாசாங்கு,ஏதுக்கடி போலி வாழ்வு?
மனிதனின் உண்மை தேவையை,பாசாங்கு உணராது வஞ்சகி
பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!"

"அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி?
விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா,பேரழிவை உண்டாக்கவா
மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா,வஞ்சகி?
கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல,பெண்ணே! "

"உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல,ஒரு துளியே, வஞ்சகி ?
கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய்
உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது,வஞ்சகி?
உன் அறியாமை,நீ உண்மையில் குருடியே என்கிறது, பெண்ணே!"

"மனிதனின் இறுதித் தீர்ப்பு,நிலையற்ற இறப்பே,வஞ்சகி ?
நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய்
நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி, எதைசாதிப்பாய், வஞ்சகி ?

உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ, பெண்ணே!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி:4A  தொடரும்

No comments:

Post a Comment