o கனவுகள் என்றால் என்ன?
o ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்?
o அவற்றின் பலன்கள் என்ன?
o அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா?
o கனவுகள் உணர்வுரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா?
o நாம் எப்போது கனவு காண்கிறோம்?
o அடிக்கடி கனவுகள் வருமா?
o கனவுகள் முக்கியமானவையா?
o கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?
o யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?
o போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா?
o கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா?
o அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?
o குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?
o கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?
o கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்?
o கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா?
இதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.
கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம்.
மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.
கனவுகள் என்றால் என்ன?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.
இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.
2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.
கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், ‘என்னாயிற்று உனக்கு?’என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்
3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் ‘நினைவுகள்’ என்றுகூடச் சொல்லலாம்.
4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.
கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், “கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு” என்று சொல்லலாம்.
இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம்.
கனவுகளை பற்றிய சில உண்மைகள்
சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.
குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் நமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விஷயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.
மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்,
கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?
சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்?
கீழ்காணும் ஏழு காரணிகளில் எவையாவது உங்கள் சமீபத்திய ஒரு கனவுடன் ஒத்துப் போனால் அந்த கனவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஒரு செக்லிஸ்ட் போல இதை ஒரு சமீபத்திய கனவுடன் பயன்படுத்தி பாருங்கள்.
1.பலமான உணர்வுகள். அந்த கனவு உங்களை உணர்வுரீதியாக பாதித்ததா?
உணர்வுகளுடன் வரும் கனவுகள் அவ்வப்போது தகவல்களுடன் இருக்கும். அவை நிலைகுலைய செய்தாலும், அவற்றை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி இருக்கும், அதாவது அது சந்தோசமான கனவோ, பயங்கரமான கனவோ அதில் வரும் விஷயங்கள் தெளிவாக இருக்கும்.
2. தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா? இதைப் போன்ற தீவிரமான எண்ணங்கள் அதை மீண்டும் வேறொரு சமயம் நினைப்பதற்காக நம் நினைவாற்றலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த எண்ணங்கள்/பிம்பங்க:ள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன.
3. மீண்டும் ஒரே கனவு அல்லது பிம்பங்கள் தோன்றுதல். அதாவது ஒரு கனவு அல்லது சம்பவம் அல்லது உருவம் ஏற்கனவே ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம்.
4. அதைப் பற்றி நினைக்கவே முடியாது. உதாரணமாக nightmare எனப்படும் இரவில் ஏற்படும் சொல்ல முடியாத பயங்கர கணவுகள் நம்மிடம் எதையோ உணர்த்த முயற்சிக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவற்றை புரிந்துகொண்டால் உங்களுக்கு சரியாகிவிடும்.
5. உங்களுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மாற்றத்தை நோக்கி ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். மாற்றம் என்றவுடன் திருமணம், வேலை அல்லது மற்றவற்றில் மாறுதல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். கனவில் வருபவற்றை உங்கள் உள்மனதிற்கு(ஆத்மா) என்றும் மாறாத வாழ்வின் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
6. அது உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும். சில கனவுகள் எளிதில் மறைந்துவிடாது. அவை நம் அன்றாட பணிகளை செய்யும்போது அவை நம்மை சுற்றி வாசனை போல ஒட்டிக் கொண்டிருக்கும். இப்படி நேர்ந்தால், உங்கள் ஆழ்மனது நீங்கள் அதை நினைக்க வேண்டும் எனவும் அது சொல்லும் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.
7. அறிந்துகொள்ள ஆர்வமாய் இருத்தல். எல்லோரும் கனவிலிருந்து விழித்துக் கொண்டு உணர்வுரீதியாகவோ, அவர்கள் பார்த்த உருவங்களாலோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும்.
மேற்கண்ட ஏழு காரணிகளில் ஏதாவது ஒன்றாவது உங்களோடு ஒத்துப்போனால், அக்கனவைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஏனெனில் அது சில உதவிகரமான உள்ளுணர்வுகளை கொண்டிருக்கலாம். இத்தொடரின்போது பலருக்கு ஏற்பட்ட பலவித கனவுகள் அவை சார்ந்த விசயங்களை ஆங்காங்கே சொல்கிறேன். மற்றவர்களின் கனவுகள், ஒரே மாதிரியான கனவுகள், அவை சொல்லும் செய்திகளை அறியும்பொழுது, அது உங்களுக்கு பலன்களை அளிக்கலாம்.
நாம் எப்போது கனவு காண்கிறோம்? அடிக்கடி கனவுகள் வருமா?
பொதுவாக பத்து வயதுக்குமேல் ஆன அனைவரும் ஒரு நாளைக்கு நாலிருந்து ஆறுமுறை தூக்க நிலையில், REM (Rapid Eye Movement) எனப்படும் துரிதமான கண்ணசைவு நேரங்களில் கனவு காண்கிறார்கள். இந்த துரிதக் கண்ணசைவு நேரங்களில் நாம் விழித்திருக்கும் நிலையைப் போலவே நமது மூளை இயங்குகிறது. ஆனால் மூளையின் எல்லாப் பகுதிகளும் இந்த நிலையில் இயங்குவதில்லை.
இந்த REM (தூங்க ஆரம்பிக்கும் வேளை) முன்னிரவில் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களும் பின்னிரவில் 30லிருந்து 34 நிமிஷங்களும் நீடிக்கின்றன. எனவே கனவு கிட்டத்தட்ட அரைமணி அளவுக்கு நீடிக்கலாம் எனத் தெரிகிறது.
துரிதக் கண்ணசைவு இல்லாத, மூளை சாதாரணமாக இயங்கத் துவங்கும் விடிகாலை நேரங்களிலும் கனவுகள் வருகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சாதாரணமாக நாம் 4லிருந்து 6முறை இரவில் கனவு காண்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் நாம் தூங்கும் நேரங்களில் மட்டும்தான் கனவுகள் வருகின்றன என்று தீர்மானமாகச் சொல்லமுடியாது. பகலில் சிலநேரங்களில் நாம் விழித்திருக்கும்போதுகூட அசந்த நிலையில் நம்மைச் சுற்றி இருப்பதை மறந்திருக்கும்போது கூடப் பகல் கனவுகள் வருகின்றன.
ஓரளவு இருண்ட அறையில் இருவரை அமரவைத்து அவர்களிடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் அவர்கள் விழித்திருந்த நிலையிலும் மனதில் என்ன தோன்றுகின்றன என்று ஆய்வு செய்தபோது இந்த உண்மை நிரூபணம் செய்யப்பட்டது.
நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவைகளையும் மறந்த சூழ்நிலையில் மூளை குறிப்பிட்ட அளவு செயல்பாட்டுடன் இருக்கும்போது எந்த நேரத்திலும் கனவு காணலாம் எனத் தெரிகிறது. பத்துவயதுக்குக் குறைவானவர்கள் துரிதக் கண்ணசைவுகளின்போது 20 சதவிகித நேரங்களில்தான் கனவு காண்கிறார்களாம்.
முடிவாக, நாம் துரிதக்கண்ணசைவு நேரங்களிலோ அல்லது கண்ணசைவு இல்லாத நேரங்களிலோ, விழிப்பு நிலையிலோ கனவு காண்கிறோம். துரிதக் கண்ணசைவு நேரங்களில் கட்டாயம் கனவு காணவேண்டும் என்பதும் இல்லை. அந்த நேரங்களில் கனவுகள் வராமல்கூட இருக்கலாம்.
கனவுகள் முக்கியமானவையா?
நிச்சயமாக அப்படி ஒன்றும் முக்கியமானவை அல்ல. நம்மில் பலர் ஏதாவது கனவு கண்டால் அதைப்பற்றியே பேசி விவரித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலர் தங்களுக்கு வரும் கனவுகளை லட்சியம் செய்வதில்லை.
கனவுகளுக்குக் கொடுக்கப்படும் கவனம் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் வேறுபடுகிறது. கனவு காணாவிட்டால் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்படுமா என்று கேட்டால் அதற்கு ஒன்றும் ஆதாரம் இல்லை.
நாம் காணும் எல்லா கனவுகளுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
இந்தக்கேள்விக்கு ஆமாம் அல்லது இல்லை என்று நிச்சயமாகக் கூறமுடியாது. சிலர் கனவுகளுக்கு உள்ளர்த்தம் இருக்கிறது என்று சொல்வார்கள். நம்மால் அது இல்லை என்று உறுதியாகக் கூறமுடியாது.
சில கனவுகள் உருவகமாக அல்லது அறிகுறியாக ஏதாவது செய்தியைச் சொல்லலாம். ஆனால் நம் கனவுகளில் பெரும்பாலானவை, வழக்கமாக நம் நினைவில் பதிந்த, வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள்தான் பலருக்கு கனவுகளாகத் திரும்பத் திரும்ப வருகின்றன. இது மிகவும் சகஜமான நிகழ்ச்சி. இதற்கு தனி அர்த்தம் ஏதும் கிடையாது.
அதேபோல் நம்மில் பலர் யாரோ நம்மைத் துரத்துவதுபோலக் கனவு காண்கிறோம். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் உங்களைப்போல பெரும்பாலானவர்கள் இதே மாதிரி கனவுகளைக் காண்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு ஓரளவு ஆறுதலாய் இருக்கும்!
கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?
நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக அமைகின்றன. இதைத் தொடர்ச்சி அனுமானம் என்று சொல்கிறார்கள். பரீட்சைக்குப் போகும்போது ‘ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!’ என்று பயத்துடன் இருந்தால் உங்கள் கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.
எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள். (டூயட் கூடப் பாடலாம்!)
அடுத்து எழும் கேள்வி,
போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா?
‘தூண்டும்’ என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகள் கனவுகளைப் பயமானதாகவும், விரிவாகவும் ஆக்குகின்றன என்று சொல்லலாம். எல்.டோபா என்ற மருந்தைப் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தபோது இந்த உண்மை அறியப்பட்டது.
ஆனாலும், போதை மருந்துகளுக்கும் கனவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய முழுமையான ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.
யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?
மிருகங்கள் கனவு காணுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் இல்லை. ஆய்வில் சொல்ல முடிவதெல்லாம் மிருகங்களுக்கும் விரைவுக் கண்ணசைவுகள் இருக்கின்றன என்பதுதான். இந்தக் கண்ணசைவு நேரங்களில் நமக்குப் பெரும்பாலும் கனவுகள் வருகின்றன.
குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இனம் எல்லாவற்றிற்கும் இந்த விரைவுக் கண்ணசைவுகள் உண்டு. ஆனால் இதை மட்டும் வைத்து அவைகள் கனவு காண்கின்றன என்று உறுதிப்படுத்த முடியாது. மனிதர்களுக்கும் இந்த மாதிரியான நேரங்களில் கனவு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை அல்லவா!
அடுத்து எழும் வினா,
கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?
நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். நிச்சயம் கண்பார்வை இல்லாதவர்களும் கனவு காண்கிறார்கள்.
குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?
தூக்கப் பரிசோதனை செய்தபோது அவர்கள் அடிக்கடி கனவு காண்பதில்லை மற்றும் அவர்கள் காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக, உப்புச் சப்பில்லாதவையாகவே அமைகின்றன என அறிய முடிந்தது.
ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள்.
கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?
நாம் தூக்க நிலையில் கனவு காண்பதால் அந்தக் கனவிற்கு அப்போது அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது கிட்டத்தட்டப் பழக்கமானவர்கள் காரை டிரைவ் செய்து கொண்டுபோவது போலத்தான். மனம் எங்கேயோ இருந்தாலும் அனிச்சையாக செயல் நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை நினைவில் வைக்க முடிவதில்லை.
கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்?
கனவுகளின் மேல் தனி விருப்பமுள்ளவர்கள் கனவுகளை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்.
சிலருக்கு கனவில் வந்ததுபோல் நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியே அவர்களுக்குக் கனவுகளை நினைவில் வைத்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருக்கிறது.
கனவுகளின் மேல் ஆர்வமும் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்வதற்கான தூண்டுகோலுமே சிலர் கனவுகளை மறக்காமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். சில சமயங்களில், அவர்கள் கனவுகளை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம் செய்துகொண்டவர்களாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு சமயம் அவர்கள் கண்ட கனவு பலித்திருக்கலாம், அல்லது ரொம்ப சுவாரசியமானதாக இருந்திருக்கக் கூடும்.
கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ளும் பலரிடமிருந்து சேகரித்த விவரங்கள் இந்தச் செய்திகளை நமக்குத் தெரிவிக்கின்றன.
முரண்பாடு ஏன்?
சிலர் கனவுகளை அதிகமாக நினைவு வைத்துக்கொள்வதற்கும் அதற்கு மாறாக சிலர் கனவுகளை நினைவிலேயே வைத்துக் கொள்ளாமல் போவதற்கும் அவர்களுள் ஏற்படும் ரசாயனத் தடுமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். சில மருந்துகள் மூலம் ஒருவர் காணும் கனவைத் துல்லியமாக நினைவில் வைக்கமுடிகிறது எனச் சோதனையில் கண்டிருக்கிறார்கள்.
ஒன்றுமே நினைவில்லை என்று சொல்லுபவர்களுக்கு வரும் கனவுகளே குறைவாக இருக்கலாம், அல்லது கனவு வராமலே கூட இருக்கலாம். துரிதக் கண்ணசைவு நேரங்களில் ஒருவர் நாலு அல்லது ஐந்து முறை கனவு காண்கிறார்கள் என்று சொல்லும்போது இது எப்படி சாத்தியம் எனத் தோன்றலாம்.
ஆனால் இந்தக் கனவுகளைப் பற்றி 1950-60களில் ஆராய்ச்சி செய்தவர்கள் அவசரப்பட்டு முடிவிற்கு வந்துவிட்டார்களோ, போதுமானவர்களிடமிருந்து சரியான தகவல்களைச் சேர்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் கற்பனைத்திறன் குறைவானவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் சிலர் குறைவாகக் கனவு காண்கிறார்கள், ஒரு சிலர் கனவுகளே காண்பதில்லை என்ற கருத்து வலுப்படுகிறது.
சிலருக்கு மூளையில் சில குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் அழற்சி கூட கனவு காணும் திறன் இல்லாமல் போவதற்குக் காரணமாக இருக்கிறது. இவர்களுக்கு எல்லோரையும் போல அயர்ந்த நித்திரைக்கு முன்னால் ஏற்படும் துரிதக் கண்ணசைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் கனவு காண்பதில்லை. இதனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை, மன உறுதியானவர்களாகவே இருக்கிறார்கள்.
சின்னக் குழந்தைகள் பெரியவர்களைப்போல அவ்வளவு கனவுகள் காண்பதில்லை. குழந்தைகள் தூக்கத்தில் ஏதாவது பேசுவதைப்பார்த்து அவர்கள் கனவு கண்டு பேசுகிறார்கள் என நினைக்கிறோம். அது சும்மா, தூக்கத்தில் உளறும் உளறல்கள்தான்.
கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா?
கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.
கனவு காணும்போதே இறப்பது சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. சாவதுபோல் கனவு கண்டால் அது நிச்சயம் நடக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக் கதை. உண்மையில் அதுமாதிரியான கனவுகள் சுகமான அனுபவங்களாக அமைகின்றன.
கனவுகளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள், கனவுகளுக்குப் பலன் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் பல சந்தேகங்கள் தீர்க்கப்படாமலே இருக்கின்றன.
12% மக்கள் முழுமையாக வெறும் கருப்பு வெள்ளையில் மட்டுமே கனவுகளை காண்கிறார்கள். மீதி பேர் நல்ல நிறங்களிலோ மங்கலான நிறங்களிலோ கனவு காண்கிறார்கள். கனவில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களாகவே இருக்கும்.
நீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10 நிமிடங்களில் 90%ஐ மறந்துவிடுவீர்கள். மீதி மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.
நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் நமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
கனவுகள் மீதான சமய நம்பிக்கைகளையும் சேர்த்திருந்தால் மிகவும் நன்று. சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கை யாகவே (Prenomination) நம் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் இதே நம்பிக்கையில், சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் கனவை[5 புகார்க்காண்டம்/9 கனாத்திறம் உரைத்த கதை] விரிவாக தந்திருப்பதுடன், பாண்டிய அரசன் நெடுஞ் செழியனிடம் அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட கனவின் சகுனத்தைப் பற்றி கூறும் போது ,அது உண்மை ஆவது போல அப்பொழுது அங்கு ஒரு கால் சலங்கையுடன் கண்ணகி முறையிட வந்தாள் என்கிறார்.
Deleteநம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர்.
உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்:
"மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!"
இதற்கு மாமி கூறுகிறாள்:
"அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் சடங்காகி அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!"
மேலும் ஒரு உதாரணமாக பெயரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்:
"தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது, நான் பணத்தில் புரள்வதைப் போல் கனவு கண்டேன்; விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன்."
தாத்தா சொல்லுகிறார்:
"உனக்கு நோய் வரும் என தெரிகிறது."
மேலும் சில கனவு பற்றிய நம்பிக்கையை பார்ப்போம்:
கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடாகும்.
வேடிக்கை என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மையாகும்.
உதாரணமாக மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.
1] ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும்.
2]திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.
3]கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும்.
4]மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும்.
5]இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.
6]கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.
7]வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.
8]பெண்கள் கனவில் தண்ணீரைக் கண்டால் குழந்தை பிறக்கும்.
[அதிகாலையில் காணும் கனவு பலிக்கும். நல்ல கனவு கண்டு விழித்தால் பின் தூங்கக் கூடாது.]
உங்கள் கனவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். காரண காரியங்களை நீங்களே அறிய முயலுங்கள்.
சங்க கால உரையாடல் ஒன்று:
ReplyDeleteதோழி[தலைவியை.பார்த்து:
"அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? "
தலைமகள் [தோழியிடம்]:
"தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/ சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". .
"கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே"-குறுந்தொகை 30
வாய்த்தகை =.மெய்போலும் தன்மையை உடைய
பொய்கனா - பொய்யாகிய கனவு
மருட்ட - மயக்கத்தை உண்டாக்க
ஏற்று எழுந்து - துயிலுணர்ந்து எழுந்து
அமளி தைவந்தனன் - தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்
வண்டுபடு குவளை மலரின் - வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல
சாஅய் - மெலிந்து/சாம்பி/உணர்ச்சி இழந்து/ சாய்ந்து
மன்ற - நிச்சயமாக
தமியேன் - தனித்தவளாயினேன்
"மெய்போலும் தன்மையை உடைய பொய்யாகிய கனவு மயக்கத்தை உண்டாக்க துயிலுணர்ந்து எழுந்து தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்" .
ஆமாம் ..கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன.[தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்]கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக[அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான்] இருப்போம். நமக்குஅல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவுகாண்கிறோம். அவை நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான். அந்த கனவில் வரும் உருவங்கள்[தலைவன்], சிந்தனைகள்[தழுவுதல்] நமக்கு எப்போதாவது பழக்க மானதாகவே அமைந்திருக்கும்.அருகிலிருப்பவர்கள், ‘என்னாயிற்று உனக்கு?’என்று கேட்குமளவுக்கு[நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? ] உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்
-----------------
"மிருகங்களும் கனவுகள்காண்பதாக கூறப்படுகிறது."
தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் விருப்பம் மிக்க பெடையுடன் வருத்தமுடன் அமர்ந்திருக்கும் சிறிய கடற்காக்கை, சுறாமீன் வேட்டையாடிய இடத்தில் எஞ்சி கிடக்கும் வெள்ளிய இறாமீனைப் பற்றி உண்ப தாகக் கனவு காணும் என ஒரு சங்க பாடல் கூறுகிறது.
"கடற்சிறு காக்கை காமர் பெடையொடு 10
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து "-அகநானுறு 170
ஆமாம்... கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள்[வெள்ளிய இறாமீனை உண்ப தாக] ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை.கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகளும்[கடற்காக்கை] எம்போல் கனவுகாண்கின்றன.
......................................
"பல அமானுஷ்ய நம்பமுடியாதநிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன."
உதாரணமாக தமிழ் நாட்டு கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் தனது உத்வேகத்தையும் கணித தீர்வையும் கனவில் காண்பதாக கூறியுள்ளார். அதை நாமக்கல் அம்மனுக்கு உடைமையாகக் கருதுகிறார் .அவர் இப்படி சொல்கிறார் :
“While asleep I had an unusual experience. There was a red screen formed by flowing blood as it were. I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of results in elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing”
பசு கன்று ஈன்றுவது போல் கனவு கன்டால் அதன் பலன் என்ன? கனவு கன்ட நேரம் காலை 6 மணி.
ReplyDeleteகனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.
Deleteஎண் நன்பருக்கு நிச்சயித்த திருமணம் நிற்பது போல் கனவு கன்டேன் என்ன பலனாக இறுக்க முடியும் ?
ReplyDeleteநண்பர் மேல் இருந்த பற்று இக்காலத்தில் நடப்பவை உங்களுக்கு பயத்தினை உருவாக்கியிருக்கலாம்.அதன் எதிரொலியாக இக்கனவு வந்திருக்கலாம்.
Deleteஎனக்கு கடந்த 5 வருடங்களாக அடிக்கடி தேர்வு எழுத்துவதற்கு செல்லும் போது இடையில் தடை ஏற்பட்டு தேர்வு எழுத முடியாமல் நான் கவலை படுவது போல கனவு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுவே பல விதங்களில் வருகிறது.. என்ன காரணமாக இருக்க கூடும்.??
ReplyDeleteநீங்கள் உங்களில் நம்பிக்கை இன்மையே காரணம். அதுவே உங்களுக்கு கனவாக வெளிப்படுகிறது. முதலில் பயத்தினை ஒதுக்கி நம்பிக்கையுடன் உற்சாகமாகப் படியுங்கள்.வெற்றி நிச்சயம்
ReplyDelete