"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?" / ஒரு ஆரம்பம்

[நீங்கள் வேறு கருத்துகள்/ 

நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம்

.நான் எனது தனிப்பட்ட கருத்தை

இங்கு கூறுகிறேன்.நான் எவரையும்

அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு

செய்யவில்லை.இதில் கூறியுள்ள

கருத்துக்களின் தவறுகளை

விமர்சியுங்கள்! ]


"கற்றது கை அளவு  கல்லாதது கடல் அளவு” 


தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது ஞாபகம் வருகிறது.'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள்.இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன! ஆனால் எம்மில் பலர்  அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை.அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்.விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை தீபாவளியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் நாம் தீபாவளி என்றால் என்ன? என்று எப்பவாவது யோசித்து இருக்கிறோமா?மேலும் இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏன் நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்?எப்படி தீபாவளி பிறந்தது?இது என்னுடை கதை இல்லை, புராணம் கூறும் கதை.முன்பொருகாலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். இதனால் ஆத்திரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார்கள், தேவர்களின் முறையீட்டை ஏற்று விஷ்ணு பன்றி உருவெடுத்து கடலுக்குள் சென்று அசுரனிடம் இருந்து உலகை மீட்டார்.உலகை அசுரனிடமிருந்து காப்பாற்றியதன் பலனாக உலகுடன் பன்றி கலவி செய்தது.கலவியின் பயனாக பூமி கற்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளை பிறந்தது.பின்னர் அந்த நரகாசுரன் தேவர்களை துன்புறுத்திவந்தான்.தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனை கொல்ல முற்பட்டு தோல்வியடைந்தான்.பின் விஷ்ணுவின் மனைவி நரகாசுரணுடன் போர் புரிந்து அவனை கொன்றான்.அவனைக் கொண்ற நாளை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.ஒரு  வேளை,அப்படி புராணம் உண்மையானாலும் நரகாசுரன் என்பவன் ஒரு அசுரர் குலத்தைச் சேர்ந்தவன்.அசுரர் என்றால் அ + சுரர். அ என்றால் இல்லை என்று அர்த்தம்.சுரர் என்றால் சுறா பானம் உள்ளிட்ட போதைக்கு அடிமையானவன்,ஆகவே அசுரர் என்றால் சுறாபானம் அருந்தாதவன்.போதைக்கு அடிமையாகாதவன்.இன்னும் ஒன்றை கவனியுங்கள்.நரகாசூரனை அவனின் தந்தை அவனின் தாயின் உதவியுடன் கொல்கிறான்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன.போரில் வெற்றி பெற்ற நாள்,விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள்,கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும்,வெற்றியையும்,விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.ஆனால் தீபாவளி அப்படி அல்ல.ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது.தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.அது மட்டும் அல்ல,இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை.எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை.கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை.இப்படி யாராக இருந்தாலும்,பொதுவாக ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை.இதை நாம் உணரவேண்டும்.

கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி இந்தியா வந்தனர்.செழிப்பான சிந்து சம வெளியை பார்த்து இங்கேயே தங்கி விட்டனர்.பின் அங்கு வாழ்ந்த திராவிடரை வென்றனர்.எனினும் பிறகு கங்கை நோக்கி அசைந்தனர்.இவர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம்,சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித்துள்ளனர்.

திபாவளி கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு காரணமும் திராவிடர் அற்றவர்களால் கூறப்படுகிறது.இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர்.ஆனால் சீதைக்கு நடந்தது என்ன?அயோத்திக்கு திரும்ப முன்பே அவளுக்கு சோதனை,வேதனை ஆரம்பமாகிவிட்டது.ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான்.ராவணன் மிகச்சிறந்த பக்திமான்.நல்ல அரசன்.கடைசி வரை நேர்மையாக போரிட்டவன்.கடைசியில் இராமன் ஏமாற்றுகளால்  சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை .நம்பவில்லை.சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டுகின்றான்.இராவணனின் சிறையில்  உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?"என மேலும் ராமன் கூறுகிறார்.கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான்.அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள்.ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.

     "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்
     ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
     தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்"

அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.

     "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக"
     "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து"

அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல்  காட்டுக்கு அனுப்பினான்.அப்போது சீதை கருவுற்றிருந்தாள்.சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா?" என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு.என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல.ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்."என்றல்லவா கூறினார்!
இறுதியாக மீண்டும் தன் தூய்மையை நிருபிக்க இரண்டாம் தரம் தீக்குளிக்க நேரிட்ட போது,இதுவரை பட்ட அவமானமும் வேதனையும் காணும் காணும் என்ற வெறுப்பில்,இராமனுடன் இணைய எள்ளளவும் விருப்பம் இன்றி,சீதை தற்கொலை செய்து கொள்கிறாள்.மேலும் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார்.ஒரு தனிப்பட்ட உதவியை பெற,எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ?இந்த கடவுள் அவதாரமான ராமன்  மேலும்  மிகவும்  ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே பறித்து எடுத்தான்.இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ? இப்படி பட்ட ராமனை வரவேற்கும் நாள் தீபாவளி?இதை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?நீங்களே சிந்தியுங்கள்!

"மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா? 
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் 
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! 
'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட் பவனை, 'ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று 
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீபாவாளி ஆயின் சீஎன்று விடுவிரே!"


- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்- 
                
குறிப்பு :மேலும் விளக்கமாக அடுத்துவரும் 5 நாட்கள் இத்தலைப்பின் தொடர்களை படிப்பதன் மூலம் பல தகவல்களை நீங்கள் அறிய click➝➝  Theebam.com: "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?[பகுதி :01] 

Diwali 

   ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 

2 comments:

  1. நம் இராம தாசர்கள் இன்னமும் அடிமைத் தனமாக இருளில் மூழ்கி ராம பஜனைகள் செய்துகொண்டுதான் திரிகின்றார்கள். எவ்வளவு கேவலமான இராமன் ஒருவனின் கதையைத் திரும்பத் திரும்பக் கேட்டு (விளங்குவது இல்லையோ தெரியாது!) பரவசம் அடைந்து கொள்வதாக நினைக்கின்றார்கள்.

    இராவணனின் உயரிய நற்குணங்கள்தான் சீதையை ஒரு களங்கமும் இல்லாது வைத்திருந்ததற்கு காரணம். அவன் அவளைத் தீண்டாததற்குக் காரணம் அவனுக்கு இருந்த சாபம் என்று இராமப் பிரியர்கள் சொல்லிக்கொள்ளுவர். சாபம் அவனுக்கே ஒழிய சீதைக்கு அல்ல. அதாவது சீதையை அவன் தொட்டால்தானே மண்டை வெடிக்கும்; வேறு ஆட்கள் தொடலாம்தானே!

    தன் சொந்த பந்தங்கள் எல்லோரையும் போரில் பறிகொடுத்த ஆத்திரத்தில், அவன் விரும்பி இருந்தால் பல குண்டர்களைக் கொண்டு சீதையை உருத்தெரியாமல் ஆக்கி இருக்கலாமே! அப்படி அவன் செய்யாது விட்டது அவனது பெருந்தன்மை. அந்த 'பயங்கர' அரக்கர்கள் கூடி அவன் செத்தபின்னரும் அவளைத் தீண்ட நினைக்கவே இல்லை.

    சீதையின் தீக்குளிப்பு இராவணின் நல்லகுணத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு!

    நம்மவரின் அடிமைத்தனம் பல நூற்றாண்டுகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது; இன்னும் பல நூற்றாண்டுகளும் அப்படித்தான் இருப்போம் என்று கங்கணம் கட்டி உள்ளோம்.

    ReplyDelete
  2. மணிபாலன்Thursday, October 19, 2017

    நீண்ட காலம் வாழ்ந்து பெரியாரும் கத்திக் கத்தி கூறினார்.தமிழர் மாறவில்லை.இன்னும் புது சுவாமிகள் கிடைக்கமாடடார்களா, வழிபாடு என்ற பெயரில் புதுசாய் ஏதாவது மாட்டுப்படாதா என்று அலைந்து திரிகிறார்கள்.இவர்கள் என்றுமே திருந்தவே மாடடார்கள்.அதுவே மனித சுவாமிகளும் ஏராளம் மலிவாக தோன்றி தாம் நினைத்ததை சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete