சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு
தொடர்ச்சி....
ஞானம்/B
மேலும் சித்தர்கள் கூறுவதை
கேளுங்கள் படித்தவர்கள் மட்டும்தான் ஞானம் அடைய முடியும் படிக்காதவன் ஞானம் அடைய
முடியாது என்பதல்ல. படிக்காதவர்களும், இயற்கையில் தனக்கு
பிறப்பிலேயே அமைந்துள்ள திறமையை சரியாக பயன்படுத்தி, ஞானத்தினை
விருத்தி செய்து நல்வாழ்வு பெற்றவர்கள் ஏராளம். இதனை கேள்வி ஞானம் மூலம் பல
கலைஞர்கள் புகழ் பெற்று உள்ளனர். அனுபவ ஞானம் மூலம் அரசியல் தலைவர்கள், வியாபாரிகள் என
உலக புகழ் பெற்று உன்னத நிலையில் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ
வைத்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இவர்கள் சிறு வயதில் சிரமம் அடைந்து இருந்த
போதும், ஞான நிலை அடையும் பருவ வயது வந்த போது தன்னையறிந்து, தன்னிடம் உள்ள
திறமையை சரியாக உணர்ந்து, அதனை செயல்படுத்தி வாழ்வில் உயர்ந்து
விடுவார்கள். இவர்கள் தன் அறிவு, ஞானத்தை பயன்படுத்தி வாழ்வில் உன்னத நிலையை
அடைந்தவர்கள் தானே தவிர, கடவுளை வணங்கி மந்திரம் கூறி வாழ்வில் புகழ்
பெற்றவர்கள் அல்ல. கல்வி என்பது பருவ வயதிற்காக, உதாரணமாக
கூறப்பட்டது என்குரு, ஞானிகளை பற்றி கூறும் போது,
"சன்னியாசி
யானவருள் மூடருண்டு
சமுசாரஞ் செய்பவருள் ஞானியுண்டு"
என்கிறார்.
கடவுளை வணங்கி, பக்திமான், மகான், என கூறிக் கொண்டு, காவி, கமண்டலம், ருத்ராட்சம், மதசின்னங்களை
அணிந்து தன்னை பெரிய சக்தி உள்ளவர் போல காட்டிக் கொள்ளும், "குருமார்"
என்று தன்னை கூறிக் கொள்ளும் மனிதர்களிலும், ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் , பிறரை ஏமாற்றி
பிழைப்பவர்கள் வேடதாரிகள் இருப்பார்கள். திருமணம் புரிந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன்
இல்லற வாழ்கையில் ஈடுபட்டு இருக்கும் சம்சாரியிலும் அளவற்ற ஞானம் உள்ள ஞானிகள்
இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள் என்கிறார். கடவுளை வணங்குபவர் ஞானி அல்ல, கடவுளை
வணங்கினால் ஞானம் அடைய முடியாது என்கிறார்.
என்குரு அகப்பேய் சித்தர்
கூறும்போது
சரியை யாகாதே – அகப்பேய்
சாலோகங் கண்டாயே கிரியை செய்தாலும் - அகப்பேய்
கிட்டுவ தொன்றில்லை யோக மாகாதே - அகப்பேய்
உள்ளது கண்டக்கால் தேக ஞானமடி - அகப்பேய்
தேடாது சொன்னேனே தன்னை யறிய
வேணும் - அகப்பேய்
சாராமற் சாரவேணும் பின்னை
யறிவதெல்லாம்- அகப்பேய்
பேயறி வாகுமடி
- என்கிறார்.
சரியை என கூறும் பூசை செய்தால்
நீ சாவு உலகம் தான் காணமுடியும், கிரியை பூசை செய்வதால் உனக்கு ஞானம் கிட்டாது.
யோக நிலையை அடைந்தேன், எல்லாவற்றையும் அறிந்தேன், சகல சாத்திரம், புராணம், அறிந்தேன் என்று
பல உதாரண கதைகளை கூறி நீயே உன்னை "யோகி" என்று பட்டம் சூட்டி அழைத்து
கொண்டாலும் ஞானம் கிட்டாது. ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும். வேறு எந்த வேஷம்
கட்டியும், கடவுளை பற்றிய விபரங்களை கற்றும், கடவுளை பற்றிய மந்திரம்
சொல்லியும் பூசை, ஹோமம் செய்தாலும் அவைகள் எல்லாம் ஞான அறிவு
கிடையாது. இந்த செயல்களை நம்பிக்கையுடன் செய்யும் நீ மனிதன் அல்ல, பேய் அறிவு
கொண்ட பேயின் நிலையில் வாழ்பவன் என்கிறார்
என்குரு.
இன்னும் சித்தர் பெரு மக்களும், தவத்தில் சிறந்த
முனிவர்களும், வள்ளலார், திருவள்ளுவர் போன்ற ஞானிகளும் ஞானத்தை பற்றி கூறும்போது இந்த பூமியில் பிறந்த
ஒவ்வொரு சீவனுக்கும் மனிதனுக்கும் சுயஅறிவு, ஆராயும் அறிவு, சமுதாய அறிவு, பிரபஞ்ச அறிவு, தன்னை அறியும்
ஆன்ம அறிவு நிலை கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன. இது இயற்கையின் விதி. இதனை சரியாக
புரிந்து, அறிந்து வாழ்பவன் தன்னையறியும் அறிவால், ஞான அறிவை அடைவான்.
தன்னையறியும் அறிவு உள்ளவன்
தனக்கு உள்ளே மறைந்துள்ள சக்தியை தேடி அடைவான். உலகில் மனிதன் வாழ தேவையான தண்ணீர், தானியம், தங்கம், வெள்ளி, வைரம் போன்ற
பொருட்களை எப்படி மண்ணை தோண்டி உள்ளே இருந்து எடுத்து மனிதன் நம்வாழ்வின்
செயல்களுக்கு பயன்படுத்துகின்றானோ, அதைப் போன்று மண் என்று
கூறப்படும் நம் தேகத்தின் உள்ளே கடந்து சென்று நம்மை பற்றி அறிந்து கொள்ள
வேண்டும். நம்மை நாமே உள் கடந்து தன் அகத்தை ஆராய்ந்து தன்னை அறிவதே கடவுள்
வழிபாடு ஆகும். இதை விடுத்து கோவிலில் கடவுளை வணங்குவது கடவுள் வழிபாடு அல்ல.
இந்த பூமியில் நாம் எதற்காக
பிறந்தோம். நாம் எந்த செயலை செய்தால் வாழ்க்கையில் உயர்வு அடைவோம், நம் வாழ்வில்
எதனால் கஷ்டம், பிரச்சனை, வறுமை, உண்டானது. சரீரம் நோய் இல்லாமல் இருக்க எந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். எந்த
உணவு வகைகளை நீக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களில் நமக்கு
நன்மை செய்பவர்கள் யார்? தீமை செய்பவர்கள் யார்? எந்த தொழில்
செய்தால் நம் வாழ்வில் உயர்வு அடைவோம். நமது வம்சத்தில் வாழ்ந்த முன்னோர்களால்
உண்டாக்கப்பட்ட பாவ, சாப, புண்ணியம் எது? இவைகள் நம்
வாழ்க்கையில் "பிராப்தம்" என்ற
பெயரில் எப்படி பாதிப்பை உண்டு பண்ணுகின்றது? இந்த பூமியில்
படைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் மனிதன் அனுபவிக்கவா? அல்லது துறந்து
விடுவதற்கா? தன்னிடம் பிறப்பிலேயே உண்டான திறமை
எது? இதனை எப்படி விருத்தி செய்து கொள்வது? இந்த உலகில் இயற்கையில்
உருவானது எது? அதில் நிலையானது எது? மனிதனால் உருவாக்கப்பட்டு மறைவது எது? இப்படி தன்
வாழ்விற்கு தேவையான ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, தனக்கு வாழ்வில் தீமை, கஷ்டம், நஷ்டம் இவைகளை
உண்டு பண்ணும் செயல்களையும், பொருட்களையும், உறவுகளையும், நட்பையும், நீக்கிவிடுதல்
வேண்டும். நம் வாழ்வின் உயர்வுக்கும், மேன்மைக்கும் நன்மை தருபவனவற்றை
மட்டும் பயன்படுத்தி வாழ்பவன் ஞான நிலை அடைந்த ஞானி ஆவான். இதுவே தன்னை பற்றி பூரண
ஞானம் அடைந்த நிலை. "தன்னையறிதல் ஞானம் " தன்னையறிந்தவனே ஞானி ஆவான்.
ஞானம் என்பது ஏதாவது ஒன்றை
பற்றி மட்டும் தெரிந்து கொள்வது ஒரு வகை. இசையை மட்டும் நன்கு அறிந்து அதில்
நிபுணராக இருப்பவர் இசை ஞானி, இவருக்கு வேறு ஒன்றைப் பற்றிய அறிவு இராது.
கணிதத்தில் மட்டும் மேதையாக இருப்பவர் கணித அறிவை தவிர வேறு ஒன்றும் தெரியாதவராக
இருப்பார். சாத்திரம் படித்தவர் தான் ஏட்டில் படித்த, பாடல்களை பற்றிய
விளக்கமும், மந்திரங்களை இசையுடன் பாடும் வல்லமை பெற்று இருப்பார். வேறு ஞானம், உலகை பற்றிய
தெளிவு இராது. இதைப் போன்று ஏதாவது ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து அதில் பொருள்
சம்பாதித்து வாழ்ந்து வருபவர் ஒரு வகை ஞானம் பெற்றவர். ஆனால் பூரண ஞானம் என்பது
மனிதன், உயிர், உடல், ஆன்மா, வைத்யம், வானியல், வாசி, ஜோதிடம், பஞ்சபூதங்கள், நவகோள்கள், என அனைத்தையும் அறிந்து, தெரிந்து, புரிந்தவரே, பூரண ஞானி இதுவே
பூரண ஞானம். இந்த பூரண ஞானம் பெற்றவர் தான் "பூரண ஞானி" என்று
அழைக்கப்படுவார். நமது தேசத்தில் பூரண ஞானம் பெற்றவர்கள் அகத்தியர், 18 சித்தர்கள், இராமலிங்க அடிகள், புலத்தியர், அத்திரி, பட்டினத்தார், பத்ரகிரியார், போன்ற இன்னும் பல
ஞானிகள் உள்ளனர். இவர்கள் சகல கலா ஞானிகள் ஆவார்கள். இவர்கள் மரணம் இல்லாபெரு
வாழ்வு பெற்று, இன்னும் சூட்சும தேகத்துடன் வாழ்ந்து, நம்மை வழி நடத்தி
வாழ்வித்துக் கொண்டு இருகின்றார்கள்.
தொடரும்...
பகுதி 13 வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக..13
ஆரம்பத்திலிருந்து படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01..
பகுதி 13 வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக..13
ஆரம்பத்திலிருந்து படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01..
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
No comments:
Post a Comment