[உண்மைகள் உறங்குவதில்லை-
அதை மக்கள் உணரும் காலம் வெகு விரைவில் வரும்.]
சித்தர்கள் கூறிய
பக்தி, ஞானம், முக்தி, தெளிவு தொடர்ச்சி....
ஞானம்
இன்றைய உலகில் மக்கள் ஞான நிலையை
அடைந்து விட, மிகவும்
பிரயாசைப்பட்டு அலைந்து வருகின்றார்கள். பாரதம், புராணம், இதிகாச கதைகளை படித்தால், இவைகளை சொற்பொழிவுகள் கேட்டால் ஞானம் வரும், கடவுளை வணங்கி
பக்தி செலுத்தி வாழ்ந்தால் ஞானம் உண்டாகும், இவைகளை கடைபிடித்து வாழ்பவன் தான் ஞானி, என்று மக்கள்
எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஞானம் பெற வேதாந்தம் கூறும் வழி முறைகள்
என்று கூறி வருகின்றார்கள். இன்றைய மக்கள் இந்த வேதாந்த முறையை கடைபிடித்தே இன்று
ஞானத்தை தேடி, தேடி அலைந்து
கொண்டு இருக்கின்றார்கள்.
சைவ சித்தாந்த கொள்கையை நமக்கு அருளிய
அகத்திய முனிவரும் அவரின் சீடர்களாகிய பதினெட்டு சித்தர்களும், ஞானம் என்றால்
என்ன? இந்த ஞானம்
எங்குள்ளது? ஞானம் அடைந்தவன்
யார்? பூரணஞானம்
அடையும் வழியாது? என
எல்லாவற்றிற்கும் தெளிவான,
குழப்பமில்லாத
எளிதான வழியை கூறியுள்ளார்கள்.
சித்தர்கள், ஞானம் பெற பக்தி
மார்க்கம் உதவாது, கடவுளை வணங்கி
வழிபட்டு வருவதால் ஞானம் உண்டாகாது. ஞான வாழ்வை பெற முடியாது என்று
கூறுகின்றார்கள்.
இன்று கலிகால மக்கள் ஞானம்
அடையும் வழி என்று கூறிக்கொண்டு பூஜை, ஹோமம், யாகம் வேள்வி என்று கடவுளை வணங்கி அர்ச்சனை, அபிஷேகம், என செய்தல்
மற்றும் நாம மந்திரம் கூறுதல், கூட்டமாக சேர்ந்து பசனை பாடல்களை பாடுதல் ஆன்மீகம் என்ற
பெயரில் ஏதேதோ சடங்குகளை செய்தல், தீட்சை வாங்குதல், தீட்சை மந்திரம் கூறி ஜபம் செய்தல் என இன்னும் பல வழிகளில்
ஞானம் அடைய, தன் முன்வினைகளை
தீர்த்துக் கொள்ள பணம் பொருள், என செலவு செய்து அலைந்து வருகின்றார்கள். இது போன்ற
செயல்களை மக்கள் தன் வாழ்வில் கடைபிடித்து வருவதால், இந்த வேதாந்த முறைகளை சார்ந்து செயல்பட்டு
வாழ்வதால் ஞானம் அடையமுடியாது, நல்வாழ்வை பெறமுடியாது.
"தயங்காமற்
பிழைப்பதற்கே இந்த ஞானம்
சார்வாக
பாராட்டும் ஞானம் வேறே"
மக்கள் தயங்காமல், வாழ்வில் பாவம், சாபம், ஊழ்வினை பாதிப்பு
இல்லாமல் ஞானம் பெற்று நல்ல வாழ்வை அடைய நான் வழி கூறுகின்றேன் என்கிறார் என் குரு
அகத்தியர்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு
மனிதனும், பிறக்கும் போது
ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தனிப்பட்ட திறமையே
அறிவு என்றும், பாண்டித்தியம், திறமை என
கூறுவார்கள். தன் தனிப்பட்ட திறமையை அறிந்து கொண்டு மேலும், மேலும்
வளர்த்துக் கொண்டு உலகிற்கு வெளிப்படுத்துபவனை மற்றவர்கள் "மேதை"
என்றும், "ஞானம்
உள்ளவன்" என்றும் கூறுவார்கள். தன்னைப் பற்றி அறிதலே ஞானம், தன்னையறியும்
அறிவு உடையவன் ஞானி ஆவான். இந்த ஞானம் என்பது பலவகைப்படும்.
கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம், வான் இயல், அரசியல், பேச்சு, இசை, நடிப்பு, எழுத்து, ஓவியம் என இது
போன்று இன்னும் பல விதமான வகைகளில் மனிதனின் திறமை, ஆற்றல் உள்ளிருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும்.
ஒரு மனிதன் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிவை ஆதிமுதல் அந்தம் வரை ஆராய்ந்து நுட்பமாக
உணர்ந்து அதனை மேலும், மேலும், விருத்தி செய்து
கொள்வதே ஞானம் அடைதல் ஆகும். தன் திறமையை, உலக மக்கள் நன்மைக்காக செயல்படுத்தி வாழ்பவன்
"ஞானி" என்று மக்களால் போற்றி புகழப்படுவான்.
ஞானம் என்பது பிறக்கும் போதே
நம்முடன் உருவாகி வந்த திறமை அறிவு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் சிறு வயதில் ஞானம் தான் முதலில் வெளிப்படும். சிறு வயது குழந்தைகள்
பெற்றோர்களை, பெரியோர்களை
பார்த்து, தன் கண்ணில்படும்
ஒவ்வொரு பொருளை பற்றியும்,
அவை சம்பந்தமான
விபரங்களை ஏன்? எப்படி? எதனால்? என்று கேள்வி
மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கும். இது உலகில் தன் பார்வையில் பட்ட, உருவங்களை பற்றிய
ஆராய்ச்சி குணம், அவைகளை பற்றிய
உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், இந்த கேள்வி கேட்கும் செயலே ஞானம் உந்துதல் நிலை என்ற முதல்
நிலையாகும். எவன் ஒருவன் ஒரு பொருளின் மூலாதாரத்தை அறிந்து கொள்ள முயற்சித்து
கேள்விகள் கேட்கின்றானோ அவன் மூலாதார உண்மையை அறிந்து கொள்ள அதைப் பற்றிய தெளிவினை
அடைய, ஞான முயற்சியில்
ஈடுபட்டு விட்டானே என உணர்தல் வேண்டும். இது ஞானம் வெளிப்படும் நிலையாகும். இதனை
சந்தேகம் தெளிதல் என கூறலாம். ஆனால் பெற்றோர்களும், பெரியோர்களும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அல்லது
இவர்களுக்கே பதில் சொல்ல தெரியாமல் குழந்தைகளை அடக்கி விடுவார்கள். இன்னும் சில
பேர் புராண, இதிகாச கதைகளை, மாய மந்திர
கதைகளை கூறி, தெளிவான உண்மை
விளக்கத்தைக் கூறாமல் குழந்தைகளின் ஞானம்வெளிப்படுத்தலை, ஆராயும்திறனை
ஆரம்பத்திலேயே முடக்கி விடுகின்றார்கள். இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே உண்மையை
அறிந்து கொள்ள முடியாமல்,
தன் ஞான நிலையை
வெளிப்படுத்தி கொள்ள முடியாமல் போவதற்கு பகுத்தறிவு இல்லாத பெற்றோர்களே காரணமாகி
விடுகின்றார்கள்.
ஒரு குழந்தை பிறந்தது முதல் 5ம் வகுப்பு கல்வி
பெறும் வயது வரை பிறரை சார்ந்து வாழும் பருவ வயது காலம், பற்றுதல் என்ற
பக்தி நிலை வயது காலம் என்று கூறினோம். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மேல்நிலை கல்வி பயிலும் கால பருவ ஞானநிலை
உதிக்கும் காலம் எனலாம். இந்த பருவ வயது காலத்தில் சரீரம், மனதில்
முதிர்ச்சி தோன்றக் கூடிய காலம் ஆகும். இந்த 12 வயதிற்கு மேல் தான் ஒருவர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட
திறமையை, சக்தியை அறிந்து, தன் எதிர்கால
வாழ்வின் உயர்வுக்கு வழி அமைத்துக் கொள்ள ஆரம்ப காலம் ஆகும். இந்த பள்ளி படிப்பு
காலத்தில் தான் கணிதம், இரசாயணம், கலை, மருத்துவம், இசை என, மனிதன் தன்
திறமையை உணர்ந்து, அந்த கல்வியை
சிறப்பு பாடமாக பெற்று, அதில் மேன்
மேலும் நுட்பங்களை அறிந்து,
அதில் ஞானம், திறமை அடையும்
காலமாகும். தன் திறமையை அறிந்து, அதனை விருத்தி செய்து, தன் எதிர்கால வாழ்விற்கு அடிகோலுகின்றான். இப்படி தன்
தனிப்பட்ட அறிவை சரியாக அறிந்து வளர்த்துக் கொண்டவன் 12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவன் ஆவான். இவன் தன் எதிர்கால நல்வாழ்விற்கு சரியான வழி அமைத்துக்
கொண்டவன், தன் வாழ்வில்
யாரையும் நம்பி வாழாமல் தானே சுயமாக வாழும் தகுதியை பெற்றவன் ஆகின்றான். ஒருவன்
தன் திறமையை தன் சுய அறிவால் அறிந்து, அதனை விருத்தி செய்து தேர்ச்சி பெற்றவன், அந்த துறைகளில்
புகழ் அடைவான். கணித மேதை,
விஞ்ஞானி, சாத்திர ஞானி, இசை ஞானி, மருத்துவ ஞானி, பண்டிதன், கலைஞானி, என நிபுணன், ஞானி, மேதை என
மற்றவர்களால் புகழப்படுவான். இதுவே மனிதன் ஞானம் அடையும் நிலை, ஞானியான நிலை.
இவன் தன்னிடம் உள்ள இயற்கையான திறமையை அறியாமல், கடவுளை மட்டும் வணங்கி பூசைகள் செய்து
கொண்டிருந்தால் இவனின் ஞானம் வெளிப்பட்டு இராது, தன் திறமையை உணராமலே, வாழ்வில் பிறரை
நம்பியே வாழ வேண்டிய நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். கடவுளை வணங்கி பக்தி
செலுத்துபவன் ஞானி இல்லை.
No comments:
Post a Comment