சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகுதி:10

சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு  தொடர்ச்சி....
.
பக்தி/B

                 உலகினில் பிறந்த எந்த மனிதனும் தன் சுய அறிவு செயல்பட தொடங்கும் வரை, தானே சிந்திக்கும் திறன் உண்டாகும் வயது வரை, தன் முன்னோர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டும். இது பல பருவம் ஆகும். அதாவது  ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாம் வகுப்பு வரை கல்வி பயிலும் வயது நிலை ஆகும். இந்த பருவம் பிறர் கட்டுபாட்டில் வாழ்ந்து, பிறர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள காலம். இந்த அறியாப் பருவத்தில் செய்யும் எந்த செயலையும் மனிதன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து செய்வது இல்லை. பக்தி என்பது இதைப் போன்ற ஒன்றுதான்.
                 உலகில் பிறந்த அனைவரும் தன் ஆரம்ப வயதில் இறைவழிபாடு, கடவுள்பக்தி என்ற நிலையை, அது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு, ஈடுபட்டு வாழ்ந்தே ஆக வேண்டிய நிலைதான். இது காலம், காலமாக சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
                 என் குரு சிவவாக்கிய சித்தர் தன் இளம் வயதில் ஞானம் அடைய, தன்னையறிய பக்தி தான் உண்மையாக உதவி செய்யும் என்று நம்பிக்கை கொண்டு இராமனே தெய்வம், "ராம நாம மந்திரம் ஞானம் தரும், முக்தி தரும்" என்று ராமனை வணங்கி வாழ்ந்து வந்தார். பின் இந்த ராம பக்தி மார்கத்தினால் எந்த பலனும் கிட்டாது என்று தெளிந்து "ராமன் என்பதும் பொய், ராமநாம மந்திரம் பொய்" என்று கூறிவிட்டு சிவனை வணங்கி எல்லாம் சிவாயமே என்றார். ஐந்தெழுத்தே ஆன்மாவை அறிய உதவும், சிவனே பெரிய தெய்வம் என்று சிவபக்தி கொண்டு வாழ்ந்தார். இதனாலும் ஆன்மாவை அறிய, தன்னையறியும் நிலை ஏற்படாது என்று அறிந்து "மூல மந்திரம் என்பதும் பொய், மூவரும் பொய்" என்று சிவனை வழிபடுவதை விட்டார். அதுபோல் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் இளம் வயதில் தெய்வங்களை வணங்கி பக்தி செலுத்தி நிறைய பாடல்களை பாடினார், கடைசியில் ஒளி வழிபாட்டை உருவாக்கி, சித்தர்கள் அருளிய "சைவ சித்தாந்த கொள்கைகளை" ஏற்று மகா ஞானம் அடைந்தார். வள்ளலார் கூட இளம் வயதில் வேதாந்த மார்க்கத்தினை ஏற்று கடவுளை வணங்கி வந்த போது சித்தர்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், சித்தர்களை குறைவாக மதிப்பிட்டு சில பாடல்களை பாடியுள்ளார் ஆனால் வாழ்நாளில் கடைசி காலத்தில் சித்தர்கள் கூறிய வழியில் வாழ்ந்து அகத்தின் உள்ளே சோதி தரிசனம் பெற்றார். இவர்களை போன்று பட்டினத்தாரும் பக்தி நிலையை விட்டு, சித்தாந்த கருத்தை ஏற்றார். இதைப் போன்று சாகாநிலை பெற்று தன்னை மறைத்துக் கொண்ட அனைத்து ஞானிகளும், சித்தர்களும் மகான்களும் பக்தியை விட்டு கடவுள் வழிபாட்டினை நீக்கி சித்தர்கள் கூறிய சித்தாந்த கொள்கையை கடைபிடித்து வாழ்ந்து தன்னையறிந்தவர்கள்.
                  அனைத்து ஞானிகளும், மகான்களும் இளம் வயதில் ஆரம்ப காலத்தில் கடவுள் பக்தி கொண்டு கடவுளை வணங்கி, மாயையின் வசம் ஆட்பட்டு, பாட்டுபாடி அலைந்தவர்கள்தான். இதனை மறுக்க முடியாது. இந்த மகான்களும், ஞானிகளும் அறிவின் முதிர்ச்சி உண்டாகி, வாழ்வின் அனுபவத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்று 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பு செல்பவர் 5ம் வகுப்பு பாடத்தை விட்டதுபோல் பக்தியை விட்டனர். தன்னையறியும் நிலையை பெற முயற்சித்தனர். உருவ வழிபாட்டை ஒதுக்கினார்கள். பூசை, ஹோமம், யாகம், அர்ச்சனை, அபிஷேகம், கடவுளை போற்றி பாடுவது போன்றவைகளை விடுத்து, வாசி யோகம் பயிற்சி மூலம் தன் சக்தியை வளர்த்தனர் ஞானம் கிட்டியது. ஆத்மா சோதி பிரகாசித்தது. இவர்கள் இன்றும் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
                   இன்றைய மக்கள் பட்டினத்தாரும், சிவவாக்கியரும், இராமலிங்க சுவாமிகளும் தாங்கள் அறியாத இளம் வயதில் பாடிய கடவுள் பக்தி பாடல்களை மட்டும் படித்து விட்டு, இந்த மகான்கள் கடவுளை வணங்கியே ஞானமும், முக்தியும் அடைந்தனர் என்று தவறாக எண்ணி வாழ்கின்றார்கள். இவர்கள் பூரண ஞானம் பெற்ற பின் பாடிய பாடல்களை யாரும் படிப்பது கிடையாது. இவர்கள்பாடிய கடவுள்பக்தி பாடல்களையே பத்திரிகைகளும், தொலைகாட்சியும், பட்டிமன்ற பேச்சாளர்களும், பசனை குழுவினரும் இன்னும் பாடிக் கொண்டு மக்களை ஞானம் பெற விடாமல் தடுத்து வருகின்றார்கள். பட்டினத்தாரின் பூரணமாலை படியுங்கள். சிவவாக்கியரின் ஞான பாடலை படியுங்கள். வள்ளலாரின் ஆன்மஜோதி தத்துவ பாடல்களை படியுங்கள் அப்போது தான் ஞானம் அடைய வழி கிட்டும் முக்தி அடையும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
                  இன்றைய மக்கள் பக்தி என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து வாழ்வில் உயர வேண்டும் என்ற முயற்சி இன்றி கடவுள் அருளால் எல்லாம் நடக்கும், பூசை, ஹோமம், தானம், தர்மம், விரதம் இருந்தால், மந்திரம், நாமபாரயணம் செய்தால் எல்லாம் வாழ்வில் கிடைத்து விடும், தடைகள் விலகிவிடும், வாழ்வில் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி வாழ்கின்றார்கள். இந்த பக்தி நிலைப்பாட்டில் வாழும் மக்கள் இன்னும் ஆரம்பபள்ளி பாடத்தையே படித்துக் கொண்டு இருப்பவர்கள் என கூறலாம். இது போன்ற அடிப்படை ஞானமே இல்லாமல் மக்கள் பக்தி ஒன்றையே நம்பி கடைபிடித்து வாழும் மக்கள் இன்றைய உலகில் 90% சதவீதம் பேர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்வில் மேன்மை அடைய பக்தி நிலையை விட்டு ஞான நிலை கல்விக்கு உயர்தல் வேண்டும்.
                   என்குரு அகத்தியர் பக்தி என்று கூறிக் கொள்ளும் சாத்திரம், புராணம், ஆகமம் இவைகளால் எந்த நற்பலனும் கிடைக்காது என்பதை கூறுவதைக் கேளுங்கள்.

வேதமென்ற ஆகமங்க ளாறு சாத்திரம்
வெவ்வேறு மதபேதம் சமய பேதம்
காதமென்ற சாதியும் நாள் பதினெட்டாகக்
கருத்துவமா யுலகோரை மயக்கங் காட்டிக்
கீதமென்றா லரிகீதம் சிவகீத மென்றும்
கிருபையுடன் வெவ்வேறாய் பிரித்துக் காட்டிப்
பாதமென்று சாவதுவே நிசந்தா  னென்று
பாடினார் சாத்திரத்தை பாடினாரே
                   
-என்கிறார்.

                    நான்கு வேதம், ஆறு சாத்திரம், ஆகமம், பல மதம், சாதி, சமயம் பதினெட்டு புராணங்கள், அதற்கு விளக்கம் தரும் அகராதி நூல்கள், இவைகள் எல்லாம் இந்த உலகத்தில் உள்ள மக்களை மயங்க செய்வதற்காக, புத்தி, அறிவு மழுங்க செய்வதற்காக உண்டாக்கப்பட்டது. மேலும், அரிஎன்ற பெருமாளைப்பற்றி வைஷ்ணவர்களுக்கு ஒரு மந்திரம், சிவனுக்கு ஒரு மந்திரம், இது போல் வெவ்வேறு தெய்வங்களுக்கும் பூசை, அபிஷேகம் என ஆகமமுறைகள். இவைகள் சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அப்படி கடைபிடித்து வணங்கி வந்தாலும் வாழ்வில் கஷ்டம், பிரச்சனை வறுமை தீராது. பிறந்தவர்கள் இறந்து போவது மட்டும் உண்மை என்று கூறிவிட்டார்கள். இதுவே கடவுளை வணங்குவதால் உண்டாகும் கடைசி பலன் இந்த வேதாந்தம் கூறும் கடவுள் வழிபாடு உன்னை மரணத்தில் இருந்து காப்பாற்றாது, ஞானம் அடைய உதவாது. தன்னையறியும் நிலையை தராது என்கின்றார் என் குரு அகத்தியர்.

தொடரும்.....
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07
🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔🏔

No comments:

Post a Comment