"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"[பகுதி:04]


ராமனை தெய்வமாக்க வேண்டுமா?


பலருக்கு,ராமன்,நிறைமாத கர்ப்பணியான சீதையை நாடு கடத்தி, காட்டிற்கு தன்னம் தனியாக விட்டது  ஒரு மிகவும் குழப்பமான, புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வாக உள்ளது.இது உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன.ஆனால் வால்மீகியோ அல்லது கம்பரோ இதை எழுதவில்லை.அவர்கள் பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விட்டார்கள்.இந்த உத்தர காண்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட  ஒரு வரலாறு இது ஆகும். தமிழில் உத்தர காண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தர் ஆகும்.அதில் 

"மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க் கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள் நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு"[பாடல் 728],

அதாவது  “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே”  என்று மக்கள் பேசுகின்றனர் என ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறினார்.ராமனும் அதை அப்படியே ஆமதித்து, லட்சுமணன் மூலம் அவளை  வால்மீகி ஆசிரமம் அருகே,கண்ணை கட்டி கூட்டிக்கொண்டு போய் விட்டான்.

  "என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்"[பாடல் 753],

அதாவது,அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று
உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் சீதையிடம் கூறி,காட்டில் விட்டுச் செல்ல,அதனால், பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் சீதை வீழ்ந்தாள் என்கிறது.ஆனால் வால்மீகி ராமாயணத்தில்,கொஞ்சம் மாறுபட விதத்தில்,

"பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி"[பாடல் 3, ஸர்க்கம் 45 ]

அதாவது, தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது. என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது.ஆகவே,ராமன் தன் சகோதரர்களைப் பார்த்து:
"அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்"[பாடல் 14, ஸர்க்கம் 45], அதாவது,மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல? என்று கூறினான். இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை.அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவ தூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் விசேஷமான சில பொருட்கள் மீது ஆசைப்படு வார்கள். அத்தகைய ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது மரபு.சீதைக்கு அப்படி ஏதேனும் விருப்பமுண்டா என்று முன்பு  ஒரு நாள் இராமன் சீதையிடம் கேட்டான். ஆம் என்றாள் சீதை. அந்த ஆசை என்னவென்று கேட்டான் இராமன். கங்கைக் கரையோரம் அமைந்துள்ள ஏதாவதொரு முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அங்கு கிடைக்கும் பழங்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு ஓரிரவாவது தங்கித் திரும்ப வேண்டும் என்பதே தன் ஆசை என்றாள் கர்ப்பிணியான சீதை.அது இப்ப அவனுக்கு நினைவு வந்தது, ‘’அன்பே,நாளையே நீ விரும்பும் ஆசிரமம் போக நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றான். இராமன். நேசத்திற்குரிய கணவனின் நேர்மையான பேச்சென்று சீதை இராமனின் வார்த்தையை கருதினாள். ஆனால் இராமன் செய்ததென்ன?சீதையைக் காட்டிற்கு அனுப்பி கைகழுவிட இதுவே தக்க தருணம் என இராமன் நினைத்து,தம் சகோதரர்களை அழைத்து சீதையை வனவாசம் அனுப்பி விடுவதெனும் தன் அறுதியான முடிவினை தெரிவித்தான். ஆனால்,சீதைக்கு ஒன்றும் கூறவில்லை.அவள் எதோ தன்னை ஒருநாள் தன் விருப்பத்தை
நிறைவேற்ற கணவன் அனுப்புகிறான் என்று மட்டுமே நினைத்தாள். லட்சுமணனும் அப்படியே அவளை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் விட்டு விட்டு,"நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம்? என்றும் நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு உள்ளேன்"[பாடல் 13,14 ஸர்க்கம் 47] என்றான்.லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள். மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள். [பாடல் 1, ஸர்க்கம் 48]- மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி- என்பதே ராமனின்  முடிவாயிருந்தது. இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே ராமன் எதிர்பார்த்தான்?மன்னனும் மன்னன் குடும்பமும் நாட்டை வழி நடத்தாத ஒரு சூழலை தான் இங்கு காண்கிறோம்?சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான். அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பதை கவனத்தில் கொள்ளாது,அந்த நிலையிலும் அவளை காட்டுக்கு அனுப்புகிறான். ராமனால் கைவிடப்பட்ட  சீதை,வால்மீகியின் ஆசிரமத்தில்,முனிவரின்  ஆதரவில் வாழ்ந்தாள்.அங்கு இரட்டைக் குழந்தைகளை[லவ குசா] அவள் பெற்றெடுத்து,12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது.இவ்வளத்திற்கும் வால்மீகியின் ஆசிரமம் இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந் தொலைவிலொன்றுமில்லை. இந்த உதாரண கணவன் இராமன், பாசம் மிக்க தந்தை, சீதை என்னவானாள்-அவள் செத்தாளா-பிழைத்தாளா-என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விநோதமான சூழ்நிலையில்
இராமன் சீதையை சந்திக்கிறான்.வால்மீகி, சீதை  எந்த கலங்கமும் இல்லாதவள், அப்பாவி என கூறி,தன்னுடன் வந்த  லவ குசா வை  உனது பிள்ளைகள் என அறிமுகப் படுத்தினார்.சீதாவை திருப்ப அயோத்திக்கு கூட்டிப் போக விருப்பம் இருந்தாலும்,சீதை களங்கமற்றவளாக இருந்தால், இன்னும் ஒரு தீக் குளிப்பு மூலம் அதை நிரூபிக்கட்டும்.அதன் பின் அவள் என்னுடன் வரலாம் என்றான்.இதே மாதிரியான சோதனையை சீதை முன்பொருமுறை இலங்கையிலே மேற்கொண்டாள்.இருப்பினும் வால்மீகி சீதையை யாக [வேள்வி]சபைக்கு அழைத்து வருகிறார். இராமன் முன் சீதையை நிறுத்தி வால்மீகி சொன்னார்: ‘’தசரதனின் மகனே, வம்பர்களின் வாய்ப் பேச்சைக் கேட்டு காட்டிலே நீ கைவிட்ட சீதை இங்கே இருக்கிறாள். நீ அனுமதித்தால் அவள் மீண்டும்  நிரூபிப்பாள் என்றார்.என்றாலும் சீதை அதை ஏற்கவில்லை.அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.அவள் "முன்மாதிரி கணவன்" என இன்றைய ராம-பத்தினிகளால்  போற்றப்படும் ராமனுடன் வாழ்வதை விட, சாவதே மேல் என தற்கொலை செய்து கொண்டாள்.அதாவது காட்டுமிராண்டித் தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான இராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது.கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக கூறும் இராஜாஜி வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் எழுதியுள்ளார்.மேலும் உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று இராஜாஜி மனமுடைகிறார்.‘உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ‘ ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது திராவிடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கதை ‘

எப்படி அரசாளும் மன்னன் ராமன் ஒரு குடும்ப வன்முறையாளரான  கட்டாடியின் பேச்சை  கேட்ப்பான்?கொஞ்சமாவது தன் புத்தியை பாவிக்க வேண்டாமா?எப்படி அவனை நம்பி தன் மனைவி சீதையை நாடு கடத்துவான்?எப்படி இவன் இலட்சிய நாயகனாக இருப்பான்?அரண்மனையில் வாழாது கணவனுடன் வனவாசம் புகுந்த சீதையை,எப்படி  சந்தேகம் கொள்வான்? சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து,அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றுவது எப்படி? காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பிணி  சீதா,குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.ஆனால் இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாகப் போற்றி,மணமக்களை அவர்கள் போல வாழ என வாழ்த்துகிறார்கள்????.இது எனக்கு புரியவே இல்லை?

வால்மீகி ராமாயணத்தில்,"செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும் நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன"(கம்பராமாயணம் ஆரணிய காண்டம் பாடல்:117) என்று வர்ணிக்கப்படும் அழகு மங்கை சூர்ப்பனகையினதும்  'ஏசல்இல் அன்பினளாய் இனிது உன்பால்[இலக்குவன்] ஆசையின் வந்த அயோமுகி 'யினதும் (ஆரணிய காண்டம் பாடல்:52) உறுப்புகளை இலக்குவன் அறுத்தது,சீதையின் தீக் குளிப்பு,மற்றும் கர்ப்பவதி சீதையை காட்டில் கைவிட்டது ராமனின் ஆணாதிக்க ஆதிக்கத்தை தெளிவாக காட்டுகிறது.அது மட்டும் அல்ல, ராமன்,மற்றவர்கள் பின்பற்றக் கூடிய உதாரண உத்தம புருஷன் அல்ல.சீதை ஒரு ஒற்றை தாயார்.அதிகாரப்பூர்வமற்ற முறையில் பிரிந்து வாழ்ந்தாள்.ஆசிரமத்தில்,தனது மகன்களை தனியே வளர்த்தவள்?அது மட்டும் அல்ல பெண்களை நம்பக்கூடாது,மனைவிக்கு  இரகசியம் சொல்லக்கூடாது என்று பெண்களை நம்பாதவன் இந்த ராமன்.(அயோத்திய காண்டம்).மேலும் வாலியை முறையற்று கொன்றது,சீதாவை நடத்திய விதம் எல்லாம் கொடூரமான செயல்கள் ஆகும்.இப்படியானவனை எப்படி நாம் கொண்டாடலாம்?

ஆனால் மறுபக்கம் ராவணன்மாபெரும் வீரனாக, மிகப் பெரிய படைகளுடன் கூடியவனாக, செல்வம், செல்வாக்கு மிக்கவனாக திகழ்ந்துள்ளான்.அது மட்டும் அல்ல, சகல திறமைகளையும் பெற்ற வல்லவனாகவும்,மிகுந்த நாகரீகம் மிகுந்தவனாகவும், மாவீரனாகவும் ஜோதிடத்தில் நிபுணனாகவும் அறிவாளிகளில் மேம்பட்ட அறிவாளியாகவும் மருத்துவம் தெரிந்த வித்தகனாகவும் மாபெரும் இசைக் கலைஞனாகவும்  இருந்தான். சிறந்த கலாச்சாரத்தை உடையதாக தனது நாட்டை வைத்திருந்ததுடன் இவன் காலத்தில் கட்டிடக்கலை சிறந்தும் விளங்கியது. உதாரணமாக கடலை கடந்து இலங்கைக்கு போக ராமனுக்கு மாதக் கணக்கில் எடுத்தது.அதே வேலையை ராவணன் ஒரே நாளில் முடித்து விட்டான்.இப்ப சொல்லுங்கள் ராமனா? ராவணனா? யார் பலசாலி? யார் திறமைசாலி? இப்ப எனது கேள்வி,ஏன் நெடுக்கவும் ராவணனை விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன?

 ஆரம்பத்திலிருந்து படிக்க சொடுக்குங்கள் Theebam.com: "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"

ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

[பி கு :"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"என்ற  தீபத்தில் 2015 இல் வெளியிடப்பட்ட  எனது கட்டுரையை தொடர்ந்து,அதன் விரிவாக இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது]  technology tamil

பகுதி :05   படிக்க சொடுக்குங்கள்       Theebam.com: "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"[பகுதி:05]

Diwali 

1 comment:

  1. பரந்தாமன்Friday, October 25, 2019

    இராம னிடம் அன்பு இரக்கம் கருணை இருக்கவில்லை. யாரோ ஒருவர் கூறியது மார்பினைப் பிளந்ததாம்,. அதே மார்பில் வயிற்றில் பிள்ளையுடன் சீதையை கண்ணைக்கட்டி
    காட்டில் தள்ள எண்ணம் பிளந்ததாம் எப்படி இருக்கிறது கதை

    ReplyDelete