கனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடுத்தல் ]

  

                                        12.10.2019
அன்புள்ள அப்புவுக்கு,

நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக!

அப்பு உங்கள் கடிதம் கிடைத்தது.உறவுகள் சுகம் யாவும் அறிந்தேன்.மகிழ்ச்சி.
ஆனால் மாமியாவையின் நிலை குறித்து வருத்தமாக இருந்தது. வாழ்வதற்கு பல வழிகளிருக்க ஏன் அவுஸ்திரேலியா கப்பலில்  போக முயற்சி எடுத்தார்கள் என்று புரியவில்லை. அந்த நாடு எவரையும் இந்த வழியில் அகதிகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கையும் ,அவுஸ்திரேலியாவும் பலமுறையும் திடமாகக் கூறியதுடன் , ஏற்கனவே கப்பலில் வந்தவர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்காது கிரிஸ்மாஸ் தீவில் தடுத்து வைத்திருப்பது தெரிந்தும் ,என்ன துணிவில் சென்று ஏமாந்து அவர்களும் தீவில் நின்று கஷ்ட்டப்படுகிறார்கள். கடைசியாக  இருந்த கொஞ்ச சொத்துக்களையும் இழந்து இடையில் எதுவும் இல்லாது  நிற்கிறார்கள்.
 அப்பு, சென்ற வருடம் கனடா வந்து சேர்ந்த கனகர் மகன் கோபிக்கு என்ன நடந்தது? ஏன் கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டான்?  என கடிதத்தில் கேட்டிருந்தீர்கள்.
அப்பு,கோபி கனடா வந்த வேளையில் ,அவ்வருடம் புதிதாக கனடா வந்து சேர்ந்த சிறி என்பவருடன் இருவரும் கனடாவுக்கு புதியவர்கள் என்ற வகையில் பழக்கம் ஏற்பட்டது. அப்பழக்கம், இருவருக்குமிடையில் ஏற்பட நட்பின் காரணமாக இருவரும் இணைந்து ஒரு வீடு எடுத்து ,செலவுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
இருவரும் அகதிநிலை கோரி விண்ணப்பித்தவர்கள் என்ற அடிப்படையில் ,தங்கள் அனுபவங்களுடன்  கனடாவுக்கு வந்த விதங்களையும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி பங்கிட்டுக் கொண்டனர்.
இந்த வேளையில் கோபி தான் கனடா வரமுதல்  சுவீடனில் இருந்த அனுபவங்களையும் கூறியதுண்டு.

கோபியும்  ஆவலுடனும் ஏக்கத்துடனும் காத்திருந்த அவனது அகதி நிலைக் கோரிக்கைக்கான வழக்குக் குரிய அறிவித்தல் கடிதம் இரண்டு வருடத்தின் பின்னரே அவனுக்கு  அனுப்பியிருந்தார்கள். அவனும்  அத்தேதியில் அதற்குரிய பத்திரங்களுடன் தனக்கு  நீதி கிடக்கவேணும் என்று தான் அறிந்த கடவுளெல்லாவற்றையும் வேண்டிக்கொண்டு சென்றான்.
அங்கே வழக்கு ஆரம்பமானதும் அவன்  இலங்கை அல்லாது வேறு நாட்டிலிருந்து வந்தவனா என விசாரித்தார்கள். ஏனெனில் அவன்  அப்படி வேறு நாட்டிலிருந்து வந்திருந்தால் எனது அகதிநிலைக் கோரிக்கையை  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இங்கு யாரும் அதனைக் கூறுவதில்லை. ஆனால் அவன்  எதிர்பாராதது நடந்துவிட்டது.
அவர்கள் அவனிடம் ஒரு கடிதத்தினை நீட்டினார்கள். அதில் அவன் தன்  நண்பனென நம்பி சிறியுடன் அலட்டிய அவனது  சுவீடன் அனுபவங்களெல்லாம் அழகாக எழுதபட்டிருந்தன. எனவே அவனது அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏன்இப்படி செய்தாய் என சிறியிடம் நான் கேட்டபோது ,ஊருக்கு அனுப்ப  கடனாகக் காசு கேட்டபோது, கோபி  அந்த உதவியினை செய்யவில்லையாம். அந்த ஆத்திரத்தில் அப்படி செய்தானாம் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிக்கொண்டான். 
அப்பு,இதற்காக நீங்கள் கலங்கவேண்டாம். இங்கு இப்படி எத்தனை,எத்தனையோ நடக்கின்றன. சில்லறைத்தனமான விடயங்களுக்கெல்லாம் அடுத்தவர்களின் எதிர்காலத்தினை துவம்சம் செய்கின்றனர்.ஏனோ தெரியவில்லை எம்மினத்தார் சிலர் எமினத்திற்கே எதிரியாகவுள்ளனர்!.
இப்படியான எம்மவர்களின் செயற்பாடுகளே வெவ்வேறு துறைகளிலும் எம்மினத்தாரை பின்நோக்கி வீழ்த்திக் கொண்டுள்ளது. இதனால் எம்மை நண்டுகள் இனம் என கூறுவோர் உண்டு. ஏனெனில் பெட்டிக்குள் இருக்கும் நண்டுகள் ஒன்றினை ஒன்று வீழ்த்தி ஒன்றுமே வெளியேறி தப்ப முடியாமல் செய்திடுமாம். இவற்றினை இவர்கள் என்றைக்கும் உணரப்போவதில்லை.

அப்பு,.உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.மேலும் புதினங்களை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
 இப்படிக்கு 
அன்பு மகன் 
செ.மனுவேந்தன் 
             

No comments:

Post a Comment