சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:9

சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு

பக்தி/A

             பக்தி என்ற சொல்லிற்கு ஒரு சீவன், வேறு ஒரு பொருளின் மீது, அல்லது வேறு ஒரு சக்தி மீது முழு நம்பிக்கை கொண்டு, அதனை ஆதாரமாக பற்றி கொண்டு வாழ்வது, அதாவது தன்னைத் தவிர, வேறு ஒன்றை பற்றி கொள்வதை பக்தி என்று கூறலாம்.
             இன்றைய மனிதர்கள் பக்தி என்ற பெயரில் பல விதமான வழிமுறைகளை கடைபிடித்து வாழ்கின்றார்கள். கடவுள் வழிபாடு, இறை வழிபாடு, குரு வழிபாடு என வழிபாட்டு முறைகளை பக்தி என்று கூறிக் கொள்கின்றார்கள். கடவுளை வணங்கி, பக்தி செலுத்தினால் வாழ்வில் நன்மை உண்டாகும், தான் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பி வாழ்பவர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள் என்ற பிரிவினர்.
             சிலர் தன் குடும்பத்து முன்னோர்கள், தாய், தந்தை, பெற்றோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம், அனுகிரகம் நம்மை காப்பாற்றி, வாழ்வில் உயர்வை தரும், என முன்னோர்களை வழிபாடு செய்து வருபவர்கள் முன்னோரை வழிபடும் பிரிவினர்.
              சிலர் குரு என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு, குருவின் அருளாலே தன் வாழ்வு வெற்றியும், மேன்மையும் அடையும், என்று குருவை வழிபட்டு, வருபவர்கள் குருபக்தி குருவழிபாடு கொண்டவர்கள். இது போன்று தன்னைத் தவிர வேறு ஒன்றினை பற்றி பக்தி செலுத்தி வாழ்ந்து வருபவர்கள் இன்றைய மனிதர்கள்.
             இதில் கடவுள் பக்தி கொண்டவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் சைவம், வைணவம் என்ற பேதம் கொண்டு ஒரு மதத்திற்கு ஒரு கடவுள், ஒரு கொள்கை, மந்திரம், நாம பாராயணம், பூசை முறைகள், என மதசின்னங்களை தனித்தனியே அமைத்துக் கொண்டு, அவரவர் செய்யும் ஆகம முறையே உண்மையான பக்தி என்று கூறிக் கொள்கின்றார்கள். இன்னும் சில மனிதர்கள் கணபதி, முருகன், காளி, சக்தி, அய்யப்பன் என கடவுளை தனித்தனியாக பிரித்து, அவரவர் மனத்திற்கு பிடித்த தெய்வ உருவங்களை வணங்கி பக்தி என்ற கூறிவருகின்றார்கள். இவர்களில் சில பேர், தான் வணங்கும் தெய்வங்களின் அருள், அனுகிரகம் பெற்று உள்ளோம், என கூறி உபாசகர், அடியார் என்ற பட்டத்தை தாங்களே வைத்துக் கொள்கின்றார்கள். சக்தி உபாசகர், முருகன் உபாசகர், அனுமன் உபாசகர் என தன்னை கூறிக் கொள்கின்றார்கள். இது போன்றவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களே பெரிது, சக்தி வாய்ந்தது என்று கூறி தெய்வங்கள் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள். சிலர் கடவுள் பக்தி என்று கூறி கொண்டு, கடவுளை வணங்கும் போது தன் முன்னோர்கள் கூறியுள்ள முறைகள் என்று கூறி கடவுளை வழிபட்டு வருகின்றார்கள். இவர்கள் உருவ வழிபாட்டினை பெரிதாக செய்து வருபவர்கள். இந்த பக்தி செலுத்தும் முறை உலக மக்கள் இடையே தேசத்திற்கு, தேசம் மாறுபட்டே காணப்படுகிறது. இறைவழிபாடு உலகில் ஒன்று போல் அமைந்து இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தன் சிறுவயதில், தன்முன்னோர்கள் கூறிய வழி காட்டுதல்படி ஏதாவது ஒரு கடவுளை வழிபட்டு வந்த போதும் வயது முதிர்ச்சி அடைந்து தானே சுயமாக சிந்திக்கும் அனுபவமுதிர்ச்சி நிலை ஏற்படும் போது அவரவர் விருப்பத்திற்கும், தன் மனத்திற்கும் பிடித்த வேறு ஒரு கடவுளை வழிபடும் சூழ்நிலையும் காணப்படுகின்றது. இன்னும் சிலர் தான் பிறந்த மதங்களையே மாற்றிக் கொண்டு வேறு மத வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வாழ்ந்து வருபவர்களும் உண்டு. இது போல் கடவுள் பக்தி அடிக்கடி மாற்றி கொள்ள கூடியதாக உள்ளது.
               மனிதர்களின் மனம் புத்தி மாறும் போதும், மனிதர்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேறாத போதும், தான் வணங்கும் கடவுளிடம் எதாவது ஒரு காரியம் நிறைவேற பிரார்த்தனை செய்து, அந்த காரியம் நடக்காத போதும் இதுவரை தான் பக்தி செலுத்தி, நம்பிக்கை வைத்து வணங்கிய கடவுளின் மீது நம்பிக்கை மாறுவதும் உண்டு. இந்த கடவுள் பக்தி என்பது நிலையானது அல்ல. இது மனம் மாறும் போதெல்லாம் மாறிக் கொண்டே போகும். எனவே இந்த பக்தி என்பது "மாயை" என கூறுவார்கள். இது மாயா தத்துவத்தை சேர்ந்தது. ஒரு மனிதன் தன் வாழ்வில் தன்னையறியாமல், பிறசக்திகளின் துணை கொண்டு பூசை, ஹோமம், யாகம், மந்திரம், அர்ச்சனை, அபிஷேகம் என வேறு ஒன்றின் துணையை நாடி தன் வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும், தடைகளையும் தீர்த்துக் கொள்ளலாம் என மனம் நம்பிக்கை கொள்ள செய்வதே மாயையின் முதல் செயலாகும். இது போன்ற எண்ணம் கொண்டவர்கள் மாயாவாத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறலாம்.
               இன்னொரு பிரிவு மக்கள் குருபக்தி கொண்டவர்கள். இவர்கள் எதாவது ஒரு பீடாதிபதியையோ, அல்லது மாடாதிபதியையோ, தன் முன்னோர்கள் கூறிய "வம்ச குரு" என்று ஓருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அந்த குரு மீது முழு நம்பிக்கை கொண்டு தன் வாழ்வின் எந்த ஒரு செயலை செய்யும் முன் அந்த குருவிடம் வாக்கு கேட்டு அதன்படி எதனையும் செய்து வருவார்கள். தாங்கள் குருபக்தியை வெளிப்படுத்த குருவின் காலில் வீழ்ந்து வணங்கியும், குருவின் மடத்திற்கு சொத்து, பொருள், என தானம் கொடுத்தும் வருபவர்கள் குருபக்தி உடையவர்கள்.
               இவர்கள் வணங்கும் குரு என்பவர், தன்னை நம்பிவரும் மக்களிடம் வேதம், சாஸ்திரம், புராணம் இவைகளில் இருந்து ஏதாவது ஒரு கடவுளை வணங்க சொல்வார்கள். இவர்கள் தன்னை நம்பும் பக்தரின் கஷ்டங்களை தன் சுய சக்தியால் நீக்கும் திறன் அற்றவர்கள். இன்னும் சில குரு என்பவர்கள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை வரவழைத்து கொடுத்து தன்னிடம் ஏதோ சக்தி இருப்பதாக வெளிப்படுத்தி, தன்னை நம்பும்படி செய்து விடுவார்கள். காலி காலத்தில் சொத்து, போகம், பொருள்கள், பெண்கள் மீது ஆசை கொண்ட குருமார்களே அதிகம் இருப்பார்கள், என என் குரு கொங்கண சித்தர் கூறுவதை கேளுங்கள்.

மடையரப்பா வெறும் வீணர் சாம்பல் பூசி
    மாடுபோற் ரிறிந்தலையு முலுத்தர் கோடி
 சடையரப்பா சிலபேர்கள் தீனியாசை
   சமுசார மாயை யிலேலலைவார் கோடி
 அடையாளஞ் சொன்னாலு மறிய மாட்டார்
   அறிவிலாச் சவங்கலென் றசென்மங்கோடி
 உடையாளி வந்தாற் போற் பூசை செய்வார்
 உருளுவான் குருக்களென்ன்பான் குருட்டுமாடே.

என்று இவர்களின் உண்மையான குணத்தையும், உள்நோக்கத்தையும், ஏமாற்றி பிழைக்கும் தன்மையையும் தெளிவாக கூறி, இவர்களை நம்பி குருபக்தி கொண்டு அலையும் மக்கள் அறிவில்லாத பிணத்திற்கு சமமானவர்கள் என்று  கூறுகின்றார். இது போன்ற குருமார்களை நம்பும் மனிதர்கள் ஒன்றுமே தெரியாத, கண் தெரியாத குருட்டு மாட்டிற்கு ஒப்பானவர்கள் என்கிறார்.
               இந்த போலி குருமார்களை பற்றி என்குரு பதஞ்சலியார் கூறுவதை கேளுங்கள்.

மருகினார் சிலது பேர் வாதவித்தை
வந்தவர்போற்சொல்லியவம் பிளைப்போ மென்று 
உருகினார்யோகதண்டு காசாயங்கள்
                              யோக நிட்டை 
பெற்றவர்போ லுருக் கொள்வாரே
 கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
 குறடுமிட்டு நடை நடப்பார் குகையிற் காப்பார்
     விள்ளுவார் வாதமொடு யோக ஞானம்
   வேதாந்தம் அதீதம் விசாரித்தாற் போலத்
  துள்ளுவாரு பதேசம் செய்வோ மென்பார்
  சூதமணி கட்டுகிறேன் தொழிற் பாரென்பார்
 தள்ளுவார் பொருளாசை நமக்கே யென்பார்
  சவுக்கார குருமுடிக்கத் தனமென்பாரே.

                இது போன்ற குணம் கொண்டு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்கள் தான் கலி காலத்தில் தன்னை "குரு" என்று கூறிக்கொண்டு அலைவார்கள். இன்றைய மக்கள் இந்த போலி குருமார்களை நம்பி ஏமாந்த பிறகே புரிந்து கொள்கின்றார்கள்.
                 இந்த குரு பக்தியும், இறைபக்தியும் தன் வாழ்வில் பிரச்சனைகளை தீர்க்க, நல் வாழ்வு அடைய உதவாது இவை எல்லாம் மாயை செய்யும் ஏமாற்று வித்தைகள் ஆகும் என்கிறார்.

No comments:

Post a Comment