தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]::பகுதி 79

{தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}
[பண்டைய தாய்மார்கள்,தஞ்சாவூர்]
தென் இந்தியாவின் வணிகம் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை[கி.மு.3000 முதல் கி.மு.700 வரை],பொதுவாக  இந்தோனேசியத் தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர்.என்றாலும் கி மு 3000 ஆண்டளவிலேயே,அதன் வர்த்தகத்தை மெசொப்பொத்தேமியாவிற்கு மட்டும் இன்றி எகிப்பது வரை நீடித்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.முதலில்,அராபிய நாடுகள் இடைத்தரகர்களாக மசிலின்[மென் துகில் வகை/muslin] மற்றும் மிளகு,கிராம்பு,ஏலம் போன்ற வாசனைத் திரவியங்களை தென் இந்திய பரதவரிடம் இருந்து பெற்று ஏடன்[Aden] துறை முக நகருக்கும் கிழக்கு ஆஃப்ரிகாவிற்கும் படகில் எடுத்து சென்றனர்.பின்னர் தமிழர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சோமாலியா ) வணிகம் செய்தனர்.சிலவேளை அங்கு தங்கி இருந்தும் வணிகம் செய்து வந்தனர்.ஆதியாகமம்,37 அதி காரம்,25ஆவது பிரிவு[Genesis 37:25] "கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர் கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி வாசனைத்திரவியங்களையும்[spicery],பிசின் தைலத்தையும்[balm] வெள்ளைப் போளத்தையும்[dried sap of the myrrha tree] ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்." என்று குறிப்பிடுகிறது.மேலும் பண்டைய எகிப்திய அரசர்களின் படகுகளில் எகிப்திற்கு எடுத்துச் செல்ல ஏற்றிய செல்வங்களில் அல்லது கொள்ளை யுடமைகளில் எகிப்தின் நிலத்துக்கு சொந்தம் அற்ற தென் இந்தியா விலங்குகளும் பொருட்களும்,உதாரணமாக யானைத் தந்தங்கள்,மதிப்பு மிக்க கற்கள்,சந்தன கட்டைகள்,வாசனைப் பொருட்கள்,குரங்கு,முதலியன இருந்தன என அரேபியர் குறிப்புகள் உள்ளன.தந்தத்தால் ஆன பொருட்களான மேசை,நாற்காலி,சிலை போன்றவற்றைப் எகிப்தியர்கள் பயன்படுத் தியதற்கான சான்றுகள் உள்ளன.ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப்
[அய்யனார் சிற்பம்,முசிறி]
பிடிப்பது எளிது.எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன.அது மட்டும் அல்ல,அவுரி என்ற Indigo,புளி போன்றவை  கல்லறைகளில் காணப்பட்டன.மேலும் எகிப்தியர் இந்தியாவில் கிடைக்கும் அவுரியிலிருந்து[இண்டிகோ ] எடுக்கப்படும் நீலத்தினால் ஆடைகளுக்குச் சாய மூட்டினார்கள்.அத்துடன் கி.மு. 1462 இல் பதினெட்டாவது தலைமுறையாக முடிவெய்திய எகிப்திய அரசரின் "மம்மீஸ்"[பதனப் பிணத்தை/mummies] என்னும் பிரேதங்கள் இந்திய மசிலின் துணிகளால் மூடப்பட்டிருந்தன.இந்தியாவினின்றும் பிறநாடுகளுக்குச் சென்ற வியாபாரப் பொருட்களுள் பட்டு,மசிலின் முதலியன முக்கியமான சிறந்த பொருட்கள் ஆகும்.தமிழர் சுமத்திரா,ஜாவா,மலாயா முதலிய நாடுகளோடும் வியா பாரம் நடத்திவந்தார்கள்.இதற்குச் சான்று மணிமேகலையிலுள்ளது.அத்துடன் பட்டினப்பாலை "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்".குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன (நீரின் வந்த நிமிர்பரிப் புரவி).பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன [காலின் வந்த கருங்குறி மூடை] என்று பல உண்மைகள் தெரிய வருகின்றன.முன்னைய ஆஃப்ரிக்க வர்த்தகர்களுக்கு தடையமாக திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் ஆஃப்ரிக்காவிலுள்ள பருத்த அடியுடைய பெருக்க மரம் [African Baobab] காணப்படுகிறது.கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே(MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து ஹர்க்குப்(HARKHWF,governor of Upper Egypt) என்பவனின்
[மாதவி]
கல்வெட்டில் நறுமணப் புகைதரும் மெழுக்கு,கருங்காலிமரம்,நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம்,தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM) நாட்டிலிருந்து வந்திறங்கினஎன்ற குறிப்பு உள்ளது.இதிலுள்ள கருங்காலி மரம்,நவதானியம்,சிறுத்தைப்புலி முதலியன தென் னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்[P. T. Srinivasa Iyengar]( தமிழக வரலாறு பக்.31) அது மட்டும் அல்ல அரிஸ்ட்டாட்டிலின் (Aristotle) மாணவரான தியோபிரேஸ்டஸ் (Theophrastus) என்பவர் இதில் குறிக்கப்பட்டுள்ள கருங்காலி மரம்[ebony] பிரத்தியேகமாக இந்தியாவிற்குரியது என்கிறார்.கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni,6th dynasty official serving Pepi II as crown governor for the territory of Aswan.) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம்,விலங்கின் தோல் முதலியன உள்ளன.அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும்,இரும்புப்பொருட்கள் ( மரத்தைச்,செங்கல்லை செதுக்கும் ஆயுதமான வாய்ச்சி , கோடரி,வாள்) பலவற்றை எகிப்து,சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும்,அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார் (தமிழக வரலாறு பக்.32.) தமிழர்கள் தொடக்ககாலத்தி லிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை
என்பதை,திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின் சென்ட் ஸ்மித்,ஸ்காப்,கென்னடி,ஸ்வெல்[Vincent Smith,Schoff,Kennedy,Swell] போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.தமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா,ஏடன்,கிழக்கு ஆஃப்ரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க,அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும் [Phoenicians],அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi). எகிப்தின் 17 ஆவது அரச வம்சம்(கி மு 1580-1530 ) நிறைய யானைத் தந்தங்களையும் தந்தங்களால் ஆன பொருட் களான மேசை,நாற்காலி,சிலை போன்றவற்றையும் பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.அதே போல 18வது அரச வம்சம்(கி மு1543–1292 ) தென் இந்தியா கருங்காலி,மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள்,தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு,குரங்கு,நாய்,புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.எகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசஸ்-3 (Rameses III,கி.மு.1198-1167) என்ப வரும்,எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து தென்னிந்திய பொருட்களை,குறிப்பாக கருங்காலி,மதிப்பு மிக்க
கற்கள்,பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன.இந்த எகிப்தின் 28 ஆவது அரச வம்ச காலத்தில் அரச குடும்பம் பாவித்த உடுப்புகள் தென் இந்தியா மசிலின்[மிக மெல்லிய நேர்த்தியான பருத்தி நூல் துணி] ஆகும். பண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடான பண்டில் (Land of Punt) இருந்து எகிப்து இறக்குமதி செய்த இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை [cinnamon] ,நல்லெண்ணெய் போன்றவை உண்மையில் தென் இந்தியாவில் இருந்து அராபிய இடைத்தரகர்கள் பெற்றது ஆகும்.
 பல நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ்[Periplus of the Erythraean Sea or Voyage around the Erythraean Sea] என்னும் நூலினை மொழிபெயர்த்த ஆசிரியர் W.H  ஸ்காப்[Schoff],கிரேக்க மக்கள் அநாகரிகத் தினின்றும் விழித்தெழுவதற்கு பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தும் பண்டைய இந்தியாவும் வணிகத் தொடர்பு கொண்டு இருந்தன என்கிறார்.தமிழக வணிகர்கள் மஸ்லின் துணி,ஏலம் இலவங்கம் போன்ற வாசனை பண்டங்களை மரக் கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடா துறை முகத்தில் இறக்கினர்.பினீசியர் அல்லது அராபியர்[Phoenicians or Arabians] அச் சரக்குகளை பின் எகிப்துக்கு எடுத்து சென்றனர் என்கிறார்.மேலும் அலெக்ஸ் சாண்டரின் ஒரு படைப் பெருந்தலைவர் இந்த கரையோரமாக பயணித்து அங்கு காணப்பட்ட  வெளி நாட்டு வர்த்தகர்களை குறிப்பிட்டுள்ளார்.இன்னும் ஒரு  சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால்,வாஸ்கோட காமா [Vasco da Gama (1460-1524)],கென்யாவின் [Kenya] இரண்டாவது பெரிய நகரமான மொம்பாசா[Mombasa] அடைந்த போது அங்கே இந்தியர்கள் குடியேறி இருப்பதை கண்டார் என்பதும்,அது மட்டும் அல்ல இந்தியன் மாலுமியே அவரை கோவாவிற்கு [Goa]கொண்டு போனார் என்பதும் ஆகும்.

ருனோகோ  ரஷிடி [Runoko Rashidi] என்பவர் தமிழ் நாட்டு மக்களை குறிக்கும் போது அவர்கள் தாம் ஆஃப்ரிக்கர் என்று கருதாவிட்டாலும் தாமும் ஆஃப்ரிக்கரும் ஒரே மூல இடமான ஒன்றில் இருந்து,அதாவது மிக மிக பண்டைய காலத்தில் தென் ஆசியாவையும் கிழக்கு ஆஃப்ரிகாவையும் இணைத்திருந்த ஒரு கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என நம்புகிறார்கள் என்கிறார்.

பண்டைய கிரேக்கரும் ரோமரும்[இவர்களை  யவனர் எனக் சங்க பாடல்கள் குறிக்கும்] இந்த தமிழ் நாட்டு திராவிடரை கிழக்கு எதியோபியன்["Ethiopian"] என குறிப்பிட்டனர்.எதியோபியன் என்பது ஒரு கிரீக்[Greek] சொல்,அதன் கருத்து சூரியனால் எரிக்கப்பட்ட முகத்தை கொண்டவர்கள் என்பது.அவர்கள் மேற்கு எதியோபியன் என்று ஆஃப்ரிகாவில் இருந்தவர்களை அழைத்தனர்.இருவருவே கருப்பு மக்கள்.அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு முடியின் திசுக் கட்டமைப்பு ஆகும்

மக்களது புறத்தோற்றத்தை வைத்து இனம் என்று பாகுபடுத்தினர்.இதில் நிறம்,உருவம்,முக அமைப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாக ஆயின.அந்த அடிப்படையில் சீனர்களை  மங்கோலிய  இனம் என்றனர்.ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை நீக்ரோ இனம் அல்லது  கறுப்பர் இனம் என்றனர். கருமை என்னும் பொருள்படும நீக்ரோ என்ற சொல் ஸ்பானிஷ், போர்சுகீசிய  மொழியிலிருந்து வந்தது.இப்படியே மற்றவையும்

இத்தாலிய வணிகரான  மார்கோ  போலோ[Marco Polo கிபி 1254 -1324],13 ஆவது நூற்றாண்ட்டில் தமிழ் நாட்டிற்கு இரு தடவை வந்துள்ளார்.அவர் தமிழர்கள் தமது  கறுத்த தோல் உடல் கட்டமைப்பையிட்டு பெருமை உள்ளவர்களாகவே இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறும் போது அவர்களுடைய இளம் பிள்ளைகள் நல் எண்ணெய் தேய்த்து [sesame oil] குளித்து தமது தோலை மேலும் கருமையாக்கினார்கள் என்றும் தமது கடவுள், மகான்களை கருமையாகவே சித்தரித்துள்ளனர் என்றும் சைத்தான்,பிசாசுகளை பனி மாதிரி வெள்ளையாக சித்தரித்துள்ளனர் என்றும் கூறுகிறார்[Marco Polo's Travels.].

ஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:
பகுதி 80 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :80
பகுதி:80 தொடரும்

No comments:

Post a Comment