சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகுதி:06

சித்தர்கள் இறைவனை முழுதும் உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் ஆன்மிக வழி நின்று ஞானம்  எய்தினார்கள். ஆரியர்கள் கொண்டுவந்த ஆலய வழிபாடு கண்டு அவர்கள் ஆன்மிகத்தின்  எதிர்காலம் குறித்துப் பயந்தனர். அதுபோலவே இன்று ஆன்மிகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அவைகளை இங்கு திரட்டித் தருகிறார் கயல்விழி-பரந்தாமன்.
ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தல் /A    

                      இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் என்பது தற்காலத்தில் தன்னை நம்பி வரும் மக்களை ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தி பணம், பொருள் இவைகளை ஏமாற்றி வாங்கும் போலி குருமார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் , கோயில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், ஏதாவது ஒரு சித்தரை, ரிஷியை வணங்கி வாக்கு சொல்கின்றேன் என கூறும் போலி ஜோதிடர்கள் மருளாளிகள், சாமியாடிகள், ஏவல், பில்லி, சூனியம் என கூறி பிழைப்பு நடத்தும் மந்திரவாதிகள், போன்ற நபர்கள் கடைபிடித்து வரும் ஆன்மீகம் ஆகும். தன்னை நம்பிய மக்களை, பக்தர்களை ஏமாற்றி, பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பவர்களின் தந்திர வழி இது.
                     இந்த போலி நபர்கள் தன்னிடம் கஷ்டம், பிரச்சனை என்று வரும் மக்களிடம் உங்களுக்கு தெய்வ குற்றம் உள்ளது.  யாரோ ஏவல், சூனியம் வைத்துவிட்டார்கள். உன் வீட்டில் துஷ்ட சக்தி உள்ளது. நீ பிறருக்கு துரோகம் செய்துவிட்டாய், என எதையாவது ஒன்றை சொல்லி, அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இல்லையேல் கஷ்டம் தீராது, மகப்பேறு கிடைக்காது, நோய் தீராது என கூறி பயமுறுத்தி விடுவார்கள். இன்னும் சிலர் கோதானம் செய், அன்னதானம் செய், இந்த மலைக்கு போ, காசிக்கு போ, ராமேஸ்வரம் போ, என்பார்கள். சிலர் ஓலையில் வந்தது, நாடியில் வந்தது, அருள் வாக்கில் வந்தது என எதையாவது கூறி, பாமர மக்களை அச்சுறுத்தி ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் பறித்து விடுவார்கள்.
                     இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் சில போலி நபர்கள், மக்களை ஏமாற்றி பணம் பறிக்க உதவுமேயன்றி மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை தீர்க்க உதவாது. மேலும் இந்த போலி குருமார்கள், வாக்கு சொல்பவர்கள் தீட்சை மந்திரம், நம்பர்பிளேட் எழுத்து போட்டு கோலம் வரைந்த அட்சரதகடுகள், தாயத்துகள், வாஸ்து என்ற பெயரில் ஏதாவது பொருட்கள், பொம்மை என கொடுத்து பணத்தை பிடுங்கி விடுவார்கள். இந்த பொருட்களை வைத்து வணங்குவதாலும் எந்த நன்மையும் கிடைக்காது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                     ஆன்மீகம் என்ற பெயரில் இவ்வளவு பிரிவுகளை மக்கள் கடைபிடித்து வாழ்ந்து, ஏமாந்து வருகின்றார்கள்.
                      ஆன்மீகம் என்பது ஊர், ஊராக அலைந்து திரிந்து, காடு, மலை, ஏறி, கடல் நீரில் குளித்து, கடவுளை வணங்கி, பாட்டுபாடி குருவை பாத பூசை செய்து, பூசை, யாகம், அபிஷேகம் செய்து அலைவது, தீட்சை பெற்று மந்திரம் சொல்லி ஆன்மீகத்தை அடைய முடியாது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                      என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                      நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய்
                      கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய்
                      எட்டு திக்கு தேவரும்பொய் ஏழிரண்டு லோகமும் பொய்
                      மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே.
                      பூசையும், தேவரும், புராணமும், தெய்வமும், வேதமும் பொய்யானது. நம் அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே, அதாவது தன்னை உணர்தலே ஆன்மீகம் என்கின்றார்.
                      என்குரு பட்டினத்தடிகள் கூறுவதை கேளுங்கள்.
                      என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
                      உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே.
                      வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
                      தானேன்பார் வீணர் தனையறியார் பூரணமே.
                      ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
                      என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே.
                      நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
                      வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே.
                      வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துணைத்தான் போற்றாமல்
                      காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே.
                      உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
                      கடல் மலைதோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே

என்று கூறுகின்றார்.


அடுத்த செவ்வாய் தொடரும்.......

முதலிலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01

tags: anmigam / kadavul / saivam / hindu / anma / siththar / kovil / koyil / puja / thevaram / samayam / kuravar / periyar / vazhipadu / nerththi / thondu / vazhkai / manithan

No comments:

Post a Comment