முதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ்
நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேயே பயணிக்கின்றன. செத்த
வீட்டில் கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரி பாடுவார்கள். இந்தப் பெண்களுக்கும்
மரணமடைந்த நபருக்கும் இடையில் எந்தவொரு சம்பந்தமும் இருக்காது. ஆனால் சொந்தங்களை
விட சோகமாக வரிகள் கோர்த்து கோரஸாக ஒப்பாரி வைப்பார்கள். இதிலிருந்து இந்த ஒப்பாரி
சங்கதி சம்பிரதாயம் என்று மட்டும் புரிகிறது. வசதிபடைத்த சில வீடுகளில் இந்த
ஒப்பாரியை ஒலிபெருக்கி வைத்து அலறவிடுவதாக அலட்டிக் கொள்கிறார் இங்கிருந்து அங்கு
சென்ற நண்பரொருவர்.
சரி, இந்த ஒப்பாரிதான் இப்படியென்றால் இன்னுமொரு
வியாதிதான் கானாப் பாட்டு. இது செத்த வீடுகள் மூலமே பிரபலமான சமாச்சாரம். இரவு
நேரங்களில் மரணவீடுகள் தோறும் கானாப் பாடல்கள் இசைக்கப்படுவது அங்கு சர்வசாதாரணம்.
இதற்காகவென்று ஒரு பாடகர் கூட்டமே இருக்கின்றது. கானாப் பாடல்கள் இட்டுக் கட்டிப்
பாடப்படுபவை. சந்தர்ப்ப சூழ்நிலையை ஒட்டி மாற்றி மாற்றி இசைக்கப்படுபவை. பின்னணி
தாள வாத்தியங்களோடு பாடப்படுவதால் இதனை ரசிப்பதற்கென்றே கூட்டம் கூடும். இதனால்
கானாப் பாட்டுகாரர்கள் இருப்பது மரணவீடு என்பதையும் மறந்து போய் குஷியாய் குரல்
கொடுப்பார்கள். இவர்களில் பலர் குரல் வளம் மிக்கவர்கள், கற்பனை ஆற்றல் மிகுந்தவர்கள். இவர்களை அடையாளம் கண்டு
அபரிமிதமான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த பெருமை தமிழ்நாட்டு சின்னத் திரைகளையே
சாரும். இந்த தொலைக்காட்சி நிலையங்கள் இந்த கானாப் பாடகர்களை அறிமுகப்படுத்தி
இப்பாடல்களுக்கு தனிமவுசு ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளன. இதனால் வெளிச்சத்துக்கு
வந்தவர்களைத் தமிழ்த் திரைப்படங்களும் பயன்படுத்தத் தவறவில்லை. இப்படி பிரபலமான
கானாப் பாடகர்களாக கானா உலகநாதன், கானா பாலா போன்றோர்
பெருவரவேற்பைப்பெற முடிந்துள்ளது. இவர்கள் கானாப் பாடல்களைப் பாடுவதோடு
காட்சியிலும் தோன்றுவது சிறப்புத்தான்.
இந்த வகையில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மரண வீடுகள் என்றாலே கானாப் பாடல்கள்
பாடப்படுவது ஒரு புது சம்பிரதாயம் போலவே ஆகிவிட்டது. இது இப்படியிருக்க இப்பொழுது
இங்கு என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.
1820களுக்குப்
பின் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்தபோது
சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை. குறிப்பாக தெற்காசிய நாடுகளில்
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பாடை கட்டியே பிரேதங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
பலமான தடிகளாலும் குச்சிகளாலும் பிணைக்கப்பட்டு காலில்லாத கட்டில் போன்ற வடிவில்
அமைக்கப்பட்டதே பாடை. பின்னர் இலை தழைகளாலும் மலர்களாலும் இப்பாடை அலங்கரிக்கப்படும்
பழக்கம் உருவானது.
இப்படி பாடைக் கட்டினாலும் சில சாதிக்காரர்களை இறந்தவர்களை நிமிர்த்தி
உட்காரவைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றது.
மன்னராட்சி காலங்களில் மன்னர்கள் இப்படி பல்லக்கில் அமர்ந்து சவாரி செய்ததைப் போலவே
இந்த பாடைப் பவனியும் அமைகிறது. ஆனால் இந்திய வம்சாவளித் தமிழ்ச் சமூகம் இந்தப்
பழக்கத்தை இங்கும் அந்தக் காலத்தில் மேற்கொண்டதா என்பது தெரியவில்லை ஒப்பந்த
அடிப்படையில் கூட்டி வரப்பட்டோருக்காக வீடுகள்
ஆரம்பத்தில் குடிசைகளே ஏற்படுத்தப்பட்டன. காலக்கிரமத்தில் லயவரிசை வீடுகள்
பரிணாமம் பெற்றன. ஆங்கிலேயர்களின் குதிரைகளுக்காக பயன்படுத்தப்பட்ட லயங்களும் கூட
இம்மக்களுக்கான வாழ்விடங்களாக பயன்படுத்தப்பட்டன. இந்தக் குதிரைக் காம்பிராக்களை
அடியொற்றியே லய வரிசை வீடுகள் உருவாக்கப் பெற்றிருக்கவும் கூடும்.
தோட்டத் தொழிலாளி குடும்பத்தில் மரணம் ஒன்று
நிகழுமாயின் அது முழு தோட்டத்துக்குமான துன்ப நிகழ்வாகவே உணரப்பட்டது.
செத்த வீட்டில் டோபிக்கு வேலையுண்டு. பரியாரிக்கும் பங்குண்டு. தப்புக்காரனுக்கும் தக்க இடம் உண்டு. இன்று கூட
ஒரு தோட்டத்தில் நிகழும் மரணம் ஒரு சமூக
இழப்பாகவே உள்வாங்கப்படும் பண்பு காணப்படுகிறது.
இந்த மரணம் நிகழ்ந்த வீட்டில் விடியவிடிய
விழித்திருப்பது வழக்கம். அப்படி வழித்திருக்கக் கூடியவர்களை உற்சாகப்படுத்த சுடச்சுட தேனீர், பிஸ்கட், வெற்றிலைப் பாக்கு, பீடி
இத்யாதிகளுடன் சீட்டுக்கட்டும் கிடைக்கும். தற்போது சில பெருந்தோட்டப் பிரதேசங்களில் இவற்றுக்கு மேலாக டோலக், டொல்கி போன்ற
இசைக்கருவிகளின் உதவியோடு
சினிமாப்பாடல்கள் அதுவும் குத்துப்பாடல்களைப் பாடி நேரத்தைக் கழிக்கின்றார்கள் இளைஞர்கள். உள்ளே
இறந்தவர் உடல், சுற்றிவரச் சொந்த
பந்தங்கள், சோகத்தின் வலைப் பின்னல் சூழ்நிலை. வெளியே மட்டும் முஸ்பாத்தி! இது எப்படி இருக்கின்றது?
சொல்ல வருத்தமாக இருக்கின்றது. தோட்டத்தில் நிகழும் மரண வீட்டுக்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் பகல் வேளையில் வந்து போகிறார். சோகத்தை
உணர்கிறார். அதே வீட்டில் இரவு நேரம்
பாட்டுச்சத்தத்தைக் கேட்கிறார். உற்சாகத்தை உள்வாங்குகிறார். மறு நாள்
தோட்டத்து நபரொருவரைக் கண்டதும் இப்படி கேட்கிறார். "என்ன, செத்துப்போனவர் உயிர் பிழைச்சிட்டாரா? ராத்திரி பாட்டும் கூத்தும் அமர்க்களமாக
இருந்ததே. கேட்டவரில் தவறில்லை.
கேள்வியைக் கேலியாக்க வழிசெய்பவர்கள் யார்? நாம் தானே!
சிறிது காலம் இந்த மியூசிக் பழக்கம் குறைவடைந்து காணப்பட்டது. ஆனால் மீண்டும்
அது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருக்கின்றது.
நன்றி:பன். பாலா
No comments:
Post a Comment