எந்த நாடு போனாலும்.. தமிழன் ஊர் [சுழிபுரம்] போலாகுமா!...........................

முருகன் ஆலயம் 
சுழிபுரம் ஈழத்தின் வட முனையிலே, யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர். ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.
இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ உள்ளன.
  
இவ்வூரில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தவர்கள். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.
சம்பில் துறை 
இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.

இங்குள்ள சம்பில்துறை என்னும் இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான துறைமுகமாகும். இது மாதகலுக்கும் சுழிபுரத்துக்கும் இடையே உள்ளதால், இதை இவ்விரு ஊர் மக்களும் தமக்கே உரித்தானது என உரிமை கொண்டாடினாலும், சம்பில் துறையை அண்டிய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக சுழிபுரத்து மக்களே உள்ளார்கள். சம்பில்துறையிலே வந்திறங்கிய சோழர் படை தமது தங்குமிடமாக, சுழிபுரத்தை பாவித்ததனால், அப்போது இக்கிராமம் சோழியபுரம் என அழைக்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் திரிபுபட்டு 'சுழிபுரம்' என மருவியது என்ற காரணக் கதையும் இவ்வூருக்கு உண்டு.

நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே பறாளாய் விநாயகர் ஆலயமும், பறாளாய் முருகன் ஆலயமும் உண்டு. 'பாராலயம்பதி' என்பதே பறாளாய் என மருவியது. பறாளாய் விநாயகருக்கு 'காக்கைப் பிள்ளையார்' என்றொரு பெயரும் உண்டு. டச்சு அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் பிள்ளையார் சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து 'காக்கைப் பிள்ளையார்' என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய பறாளை விநாயகர் பள்ளு புகழ்பெற்றதாகும்.
சங்கமித்திரையும் கப்பலும் 

சம்பில்துறையில் வந்திறங்கிய சங்கமித்திரை இரண்டுவெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.

சுழிபுரத்திலே நாவலர் சனசமூக நிலையம், பறாளாய் விளையாட்டுக் கழகம் என்ற அமைப்புக்கள் குறிப்பிட்டுக் கூறுமளவில் தம்மாலியன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வூர் மக்களின் உதவியோடு இவை இரண்டும் இணைந்து தமக்கான சொந்தநிலத்தில், சொந்தக்கட்டிடத்தில், திறந்தவெளி அரங்கு நூலகம் சிறுவர் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கி இயங்கி வருகின்றன.
விக்ரோறியாக் கல்லூரி
பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாடசாலைகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் ஒன்றாகும். அத்துடன் பெரிய விளையாட்டு மைதானத்தையும் தன்னகத்தே கொண்டதாகும். இதைத் தவிர, ஐக்கிய சங்க வித்தியாசாலை, ஆறுமுக வித்தியாசாலை, அமெரிக்க மிஷன் பாடசாலை ஆகிய ஆரம்ப நடுத்தர பாடசாலைகளும் உள்ளன.
மாறாத பழமையோடு காட்சி தரும் சுழிபுரம் பற்றி IBC தொலைக்காட்சியினர் தயாரித்து வழங்கிய காணொளியினை இங்கே பார்க்கலாம்.

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

No comments:

Post a Comment