சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி:03


அலங்கார - அந்தஸ்து ஆன்மீகம் 


                      இன்றைய நாட்களில் மக்களில் ஒரு பகுதியினர், ஆன்மிகம் என்பது தன்னுடைய அந்தஸ்தை, கௌரவத்தை வெளிப்படுத்தி, மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும். சமூகத்தில் மரியாதை அடைய வேண்டும் என எண்ணி ஆன்மிகம் என கூறி சில செயல்களை செய்து வருகின்றார்கள். இது ஆடம்பர, அலங்கார ஆன்மிகம் பணம் வசதி கொண்ட செல்வந்தர்கள் கடைபிடிக்கும் ஆன்மீக பாதையாகும். இவர்கள் தங்களிடம் உள்ள பணவசதியால் கோவிலை அலங்கரித்தல் கோவில் குடமுழுக்கு செய்வது, கோவில்களுக்கு பொருட்களை வாங்கி தந்து உபயம் என்ற பெயரில் தங்கள் பெயர்களை விளம்பர படுத்திகொள்வது , தேர், திருவிழா என்ற பெயரில் சாமியை அலங்காரம் செய்து, மக்களை கூட்டி விழா நடத்துவது, அதில் தங்கள் பெயர்களை விளம்பரம் செய்து தட்டி, கட் அவுட் என வைத்து கொள்வது, "திருவிளக்கு பூசை" என்ற பெயரில் பட்டுசேலை, பவுன் நகைகளை அணிந்து, மக்களிடையே தங்கள் செல்வநிலையை, அந்தஸ்தை வெளிப்படுத்தி கொள்வது போன்ற செயல்களை செய்து, தங்களை பெருமைபடுத்தி மனம் சந்தோஷப்படுவார்கள்.
                     இன்னும் சிலர் தங்கள் அந்தஸ்து, கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள அறங்காவலர், அறங்காவல் குழு தலைவர், தக்கார், பரம்பரை கோயில் உரிமை, என பதவிக்கு போட்டி போடுவது, இதில் எதாவது தடை, பிரச்சனை ஏற்பட்டால் வழக்கு போடுவது, ஒற்றுமையான மக்கள் இடையே கோஷ்டி உண்டாக்கி பிரிவினையை உண்டு பண்ணுவது, கலவரம் செய்வது, கோவிலை மூடுவது, கடவுள், ஆன்மீகம் என்ற பெயரால் அர்ச்சகர், பூசாரிகளிடம் பணம் கொடுத்து பரிவட்டம், முதல் மரியாதை பெறுவது போன்ற செயல்களை செய்து கொண்டு வாழ்வார்கள். இது ஆன்மீகம் அல்ல. இந்த "அலங்கார ஆன்மீகம்" என்ற பெயரில் எவ்வளவு பணம், பொருள் செலவு செய்து கோவிலில் கடவுளை வணங்கிய போதும் தன்னையறிய முடியாது. தன் வாழ்வில் பிரச்சனைகளை தீர்த்து கொண்டு உயர்வு அடைய முடியாது.
                     இது போன்ற தன் சுய கௌரவத்திற்காக செலவு செய்து "ஆன்மீகம்" என்ற பெயரில் வாழ்பவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.

1.                  கல்லு கட்டை சாணி மண்ணு
         காராயிந்தூர செம்பில்

         கொல்லன் வார்த்துரு வமைத்த
         கோயினுட் சிலைகளை

         மல்லுகட்டாய்க் கட்டி 
         மகோத்சவம் செய்த போதினும்
         இல்லையே கதிபெறவும்
         ஏமனுப் பிணங்களே.


2.                  திருத்தலம் திருப்பணி 
         திருவிழாவும் செய்திட
          ஒருத்தர் நற்கதி பெறவும்
         உள்ளதோ சொல்லெங்கினும்
         வருத்தமின்றி ஏழைகட்கு
         மாதுலர் பரங்கட்கும்
         பெருத்தவன் அன்னதானம் செய்யப்
        பேருலகை அடைவாரே

                     -என்கின்றார்.
                     கல் சிலை, கட்டையில் சிலை, சாணியில் பிள்ளையார், மண்ணில் சிலை, இரும்பு, செம்பு, ஐம்பொன், உலோகங்கள் என எந்த பொருளில் கொல்லனிடம் கொடுத்து, கடவுள் சிலைகள் செய்து, கோயில் உள்ளே வைத்து கும்பிட்ட போதும், மிகவும் சிரமப்பட்டு, பெரும் பொருள், பணம் செலவு செய்து, எதிர்ப்புகள் இருந்த போதும், அவைகளை தடுத்து திருவிழா, விசேஷம், உற்சவம் என எதை செய்தாலும் உன் விதியை மாற்ற முடியாது. வாழ்வில் தடைகளை நீக்க முடியாது. நீவணங்கும் கடவுள், நீ அனுபவிக்க வேண்டியதை தடுக்க முடியாது. கடைசியில் நீயும் விதியை அனுபவித்து, வாழ்ந்து, எமனுக்குத்தான் பிணமாய் போவாய், தன்னையறிந்தால் மட்டுமே நீ நற்கதி அடைய முடியும். செல்வத்தால் செய்யும் கடவுள் வழிபாடு உனக்கு நற்கதியை தராது என்கிறார். இவர்கள் கடவுளை வணங்கிக் கொண்டே இருப்பவர்கள் ஆனால் கஷ்டம் தீராது. மேலும், மேலும் வாழ்வில் கஷ்டம் அதிகமாகும்.

                     இதுபோன்ற செலவுகளை ஆன்மீகம் என்ற பெயரில் செய்வதை விட்டுவிட்டு யாருமற்ற ஏழை குழந்தைகட்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்தால் பேருலகை அடையலாம் என்கிறார் என்குரு.
                     இந்த ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம் என்ற பெயரில் பக்தி செலுத்தி இதனை பின்பற்றி வாழும் மக்கள் இருள் உலகில் வாழும் இருள் மனம் கொண்டவர்கள் எனலாம்.
𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼𒄼

No comments:

Post a Comment