வளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்

👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬நாம் தமிழை வளர்க்க வேண்டாம், வாழ விட்டால் போதும். அதற்கு நம் மிக எளிமையான யோசனைகள்:
1. முதலில் தமிழை ஒரு பீடத்தில் அமர்த்தும் செயலை ஆட்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் நிறுத்த வேண்டும். மேடைத்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வேறு வேறு உருவம் தாங்கும் தமிழின் வளைந்து கொடுக்கும் தன்மையால் தான் அது இன்றும் வாழ்கிறது. அதை கன்னித்தமிழ், தூய தமிழ் என்று சிறையில் அடைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். ஆங்கிலம் இலத்தீனை விழுங்கியது. தமிழ் சமஸ்க்ருதத்தை விழுங்கியது. அதில் தவறில்லை. தமிழைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி ஆங்கில, சமஸ்கிருத 'தீட்டை' நீக்கினால், தமிழ் அன்னியப்பட்டு விடும். வரைமுறை இருந்தால் போதும்.

2. தமிழை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப மொழி வளரும். முன்பே சொன்னது போல் தமிழை யாரும் தனியாக வளர்க்கவில்லை. பக்தி இலக்கிய காலத்தில் பக்திப் பாடல்கள் தமிழில் இயற்றப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்திப் பாடல்கள் தமிழில் வந்தன. அந்த காலகட்டத்தில் மக்கள் மீது தாக்கம் அதிகமாக உள்ள விஷயங்களை தமிழில் சொன்னதால், தமிழ் இன்னும் செழுமை பெற்றது. இதே போன்று இன்றைய காலகட்டத்தில் வீச்சு அதிகமாக உள்ள விஞ்ஞானம், விளையாட்டு, திரைப்படம் போன்றவற்றில் தமிழ் புக வேண்டும். தமிழை வலுக்கட்டாயமாக இவற்றில் திணிக்கக்கூடாது.

3. நெருடாத, எளிதில் புரியக்கூடிய புதிய சொற்கள் உருவாக்க வேண்டும். சில பெயர் சொற்கள் வேற்று மொழி வார்த்தைகளாக இருந்து, தமிழில் எளிமையாக மாற்றமுடியா விட்டால் அப்படியே எடுத்தாளலாம். (உம். காபி இதை கொட்டை வடி நீர், குளம்பி என்றால் குழம்பிப் போக வேண்டியது தான். நமது 'நாவாய்' என்ற தமிழ் வார்த்தை தான் இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்று உபயோகத்தில் உள்ளது.

4. இருக்கும் நல்ல தமிழ் கலைச்சொற்களை இழக்கக்கூடாது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் புற நானூற்றில் பயன்படுத்திய 'மணல், இரவு, மலர், மாலை, முன்னோர், கண், நிலம், உயிர், உடம்புபோன்ற வார்த்தைகள் இன்றும் செலாவணியில் உள்ளன. 'ஏமம் (பாதுகாப்பு), மடங்கல் (இறுதி), வளி (காற்று), நீத்தம் (மிகுதி), பகடு (எருது), வலவன் (ஓட்டுனர்) ஆகியவற்றைத் தொலைத்து விட்டோம். எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட்எல்லாம் தமிழ் கலைச்சொல் இல்லை.

5. தமிழ் பண்டிதர்கள் கலைச்சொற்களை உருவாக்கக் கூடாது. தமிழ் நாட்டில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அறிவியல், கணித பாட புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். கரடு முரடாக மொழிபெயர்த்து தமிழில் இவற்றைப் பயிலும் மாணவர்களை ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் மாற்றுவதில் யாருக்கு என்ன இலாபம்.? இதற்கு ஒரே வழி, எல்லா துறையினருக்கும் தமிழ் அறிவு தருவது. அந்த அந்த துறையில் வல்லுனர்கள் தமிழில் கலைச் சொற்களை ஆக்கினால் சொல்ல வரும் விஷயம் தமிழில் எளிதில் விளங்கும். விஞ்ஞானிகளுக்கு தமிழ் அறிவு புகட்டுவது, தமிழ் பண்டிதர்களுக்கு விஞ்ஞானத்தைப் புரிய வைப்பதை விட எளிதில்லையா? இது புதிய யோசனையுமல்ல. வரலாற்றைப் புரட்டினால் பெஸ்கி என்ற வெளிநாட்டவர் கிறித்தவத்தைப் பரப்ப தமிழை முனைந்து கற்று, பின் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்டு சதுர் அகராதி, பரமார்த்தகுரு கதைகள் போன்றவற்றை உருவாக்கியதில் இந்த உண்மை பொதிந்திருக்கிறது.

6. தமிழ் பேசும் குடும்பங்களோ, நண்பர்களோ சந்தித்துப் பேசும் போது கூடிய வரை தமிழில் பேசலாம். தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் கொச்சைத்தமிழை கிண்டல் செய்யும் நாம், முழுதும் ஆங்கிலத்தில் பேசுவது என்ன நியாயம்? தொலைக்காட்சி தமிழைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது ஒரு அலை, வேறு அலை விரைவில் இதை மாற்றும். அறுபது வருடங்களுக்கு முன் மணிப்பிரவாள நடை, பின் அக்ரஹார தமிழ், சென்னைத் தமிழ், சமீபத்தில் 'மொழி மாற்ற ஜுனூன் தமிழ் ( நான் சொல்லிட்டேன் உங்ககிட்ட அப்ப முன்னாடியே) எல்லாம் வந்து போகும். இவை தமிழுக்கு வேறு வேறு ஆடைகள் போல் சமயத்துக்கு தகுந்தாற் போல் மாறும். இவை தமிழின் அடையாளமாக மாறிவிடாது.

7. தமிழ் படித்த மக்களை இன்றைய ஊடகங்களுக்கு கொண்டு வர வேண்டும். திரை, தொலைக்காட்சி, இணையம் இவற்றில் அதிகம் இடம் பெறவேண்டும். ஓலைச்சுவடிகளை கறையானுக்கும், காலத்துக்கும், ஆடிப்பெருக்கில் வெள்ளத்துக்கும் தொலைத்ததுபோல் அரிய தமிழ் பொக்கிஷங்களை இன்னும் சில ஆண்டுகளுக்குள் இணையத்தில் கொண்டு வராவிட்டால் அவற்றை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். 'ப்ராஜக்ட் மதுரை' போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் தரவேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் இதில் முன்னணியில் உள்ளனர்.

8. தமிழ் எழுத்து சீர்திருத்தம் (80 களுக்கு பிறகு ஒன்றும் செய்யப்படவில்லை), இணைய ஒருங்கிணைப்பு போன்றவற்றை அரசாங்கங்களோ, பொது அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு உருப்படியாக நிதி ஒதுக்கி சீரமைப்பது வருங்காலத்துக்கு நல்லது. இன்னமும் பழம்பெருமை மட்டும் பேசும் மாநாடுகளால் ஒரு பயனும் இல்லை.

9. தமிழை ஒரு மொழியாக பயில்விக்க முன்னுரிமை தர வேண்டும். நிலை முறைப்படி (stream based) தமிழை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். பெரும் பண்டிதராக விரும்புவோர்க்கு கடினமான இலக்கணம், சங்க காலப் பாடல்கள் கற்றுத்தரலாம். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இவற்றைத் திணிக்கத் தேவையில்லை. அவனுக்கு பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் நன்றாக வந்தால் போதுமானது. சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் இத்தகு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட +2 மாணவர்கள் எடுத்துக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணம் தமிழில் எவ்வளவு நன்றாக எழுதினாலும் நூற்றுக்கு நூறு கிடைப்பதில்லை என்பதால் தான். இந்தக்குறையை அரசாங்கமும், தமிழ் ஆசிரியர்களும் தான் சரி செய்யவேண்டும்.

10. இறுதியாக, நம் குழந்தைகளுக்கு உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழ் கற்றுத்தர வேண்டும். நமக்கு நேரமில்லை என்று நம் மொழியை நாம் அடுத்த தலைமுறைக்கு பரிச்சயம் செய்யத்தவறினால், மொழியோடு நம் கலாச்சாரம், சரித்திரம், நாட்டின் தொடர்பு எல்லாவற்றையும் துண்டிக்கும் பாவத்தை செய்தவர்களாவோம். தமிழை நாம் ஓரளவுக்கு பயிற்றுவித்தோமானால் தமிழின் இனிமை இவர்களை ஆட்கொண்டு மேலும் கற்க தூண்டும். இது நமது தலையாய கடமை.


தமிழ் நம் மொழி என்பதில் நாம் எல்லாரும் பெருமை கொள்ளலாம். நாமக்கல் கவிஞர் ' தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினார். என்னைப் பொருத்தவரை தமிழருக்கு தனி குணமோ, அடையாளமோ கிடையாது. தமிழ் மட்டும் தான் நமது அடையாளம். அதுவே நம்மை இணைக்கும் பாலம். சினிமாவோ, கிரிக்கெட்டோ, அரசியலோ அல்ல. தமிழை வளர்க்க வேண்டாம். வாழ விடுவோம். வாழ்க தமிழ்!

நன்றி:விகடன்.காம் 
குறிப்பு: பெரும்பான்மையான தமிழருக்கு இது கேளாது என  நம்பலாம்.


0 comments:

Post a Comment