பங்காளி கிணறு விற்ற கதை:


கந்தன் என்பவர் சோமர் என்பவரிடம். இருவருக்கும் பொதுவாக இருந்த ஒரு கிணற்றை, பணம் கொடுத்து முறைப்படி எழுதி தனக்குச் சொந்தமாக வாங்கிக் கொண்டார்.

சோமருக்குக் கொஞ்சம் கவலைதான், கிணறு கைவிட்டுப் போனது. சோமர் ஒரு கபட புத்தி உள்ளவர். வீட்டுக்குச் சென்ற சோமர் கந்தனை தொலை பேசியில் அழைத்து,
" அடடா, நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன். நான் உங்களுக்கு விற்றது கிணற்றை மட்டும்தான்; உள்ளே உள்ள தண்ணீரை அல்ல! தண்ணீர் இன்னும் எனக்குத்தான் சொந்தம்" என்று போட்டார் ஒரு போடு.
கந்தன் "அப்படியா?"
"ஆமாம்"
"அப்போ?"
"நீங்கள் கிணற்றில் அள்ளி எடுக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீருக்கும் லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் எனக்கு தினசரி பணம் தர வேண்டி இருக்கும்"
"அப்போ சரிங்க. நான் தருகின்றேன். கிணற்றுக்குள் எவ்வளவு உங்கள் தண்ணீர் இருக்கின்றது என்று அளந்து சொல்லுங்க; பின்னர் குறைந்தால் நான் எடுத்தது என்று சொல்லப் படாது"
"நாளைக்குச் சொல்கின்றேன்"

சோமர் கிணற்றின் விட்டம்,ஆழம் எல்லாம் அளந்து கணக்குப் பார்த்து சரியாக எத்தனை லீட்டர் என்று கண்டு, கந்தனை நேரிலேயே போய் சந்தித்து,

"கந்தன், கிணற்றுக்குள் 22 538  லீட்டர் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் எப்பவும் அள்ளலாம், ஆனால் பணம் மட்டும் ...."
"சரிங்க, பிரச்சனையே இல்லை"
கந்தனுக்கு கிணற்றில் அள்ள, அள்ள நீர் ஊறி ஒரே மடடத்தில்தான் நிற்கும் என்பது தெரிந்த விடயம்.
சோமர் மனதுக்குள் தனது வெற்றியை நினைத்து சிரித்தபடியே,
"நல்லது, சந்திப்போம்"

சோமர் போக வெளிக்கிடவேகந்தன்,
"கொஞ்சம் பொறுங்க சோமர்"
"என்ன விடயம்?"
"கிணற்றுக்குள் இருப்பது முழுவதுமே உங்கள் தண்ணீர் தானே?"
"ஆமாம், அதில் என்ன சந்தேகம்?"
" 22 538  லீட்டரும் உங்களுடையது?"
"ஆம்"
"கிணறு மட்டும்தான் என்னுடையது?"
"ஆமாம், அதுதான் முடிவாகி விட்டதே!
"அப்படி என்றால், எனது கிணற்றில் உங்கள் தண்ணீரை நான் வைத்துப் பாதுகாப்பதற்கு நீங்கள் எனக்கு நாளாந்தம் வாடகை தர வேண்டும்"
"என்னா ... "
"ஒரு லிட்டருக்கு 10 சதம் படி ஒவ்வொரு நாளும் 2254 ரூபா தர வேண்டும்"
"கந்தன்..."
"உங்களுக்கு வாடகைப் பணம் தர இஷ்டம் இல்லை என்றால் ஒரு சொட்டு நீரும் இல்லாமல் கிணற்றில் இருந்து அப்புறப் படுத்தி எடுத்துச் செல்லலாம்"
"கந்தன்........!"
"அத்தோடு தண்ணீர் எடுக்க பம்ப், பைப்புகள் போட்டு எனது கிணற்றைப் பாவிக்க மேலதிக கட்டணமும் உண்டு!"

சோமர் ஆளை விடடால் போதும் என்று ஓட, ஓட , கந்தன்,
"சோமர், இறைத்த பின்னர் புதிதாய் ஊறி வரும் தண்ணீரும் உங்களுடையது தான், உங்களுடையதே தான்! கொஞ்சம் நில்லுங்க..!"


(கோரா-quora-வில் இருந்து எடுத்து மெருகூட்டப்பட்டது.)
கூட்டல் : செல்வதுரை, சந்திரகாசன் 



1 comment:

  1. வேத மதன்Monday, August 12, 2019

    இதுக்கெல்லாம் றூம் போட்டுத்தான் பிளான் பிளான் பண்ணணும்

    ReplyDelete