அன்புள்ள ஆச்சிக்கு , 25/07/2019
நாம் நலம்.அதுபோல் உங்கள் சுபமும் ஆகுக.
ஆச்சி, உங்கள் நீண்ட கடிதம் கிடைத்தது.
அனைத்துப் புதினங்களும் அறிந்தேன்.
ஆச்சி ,உங்கள் கடிதம் படித்தபோது ,மிகவும் கவலை அடைந்தேன். ஏன் நீங்கள் இப்படியெல்லாம்
சிந்திக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
ஆச்சி ,நீங்கள் என்னைப் பெற்றவர் என்ற
ரீதியில் என்னோடு கோவிக்கமாட் டியல் என்ற நம்பிக்கையுடன் இக் கடிதத்தில் நான் ஒரு
உண்மையினை கூற விரும்புகிறேன்.
ஆச்சி, தங்கைச்சியின் கல்யாண பேச்சின்போது உங்களுக்கும் , உங்கள் சம்பந்திவீட்டுக்கும் போட்டிகள்
இருந்திருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். அவை உலகில் சகஜம்.
அவைகள் கல்யாணத்தின்பின் மறக்கப் படவேண்டியவை.
ஆச்சி,தங்கைச்சி திருமணம் முடித்து
வெளிநாட்டுக்கு மாப்பிள்ளையுடன் வாழ வந்திட்டாள்.
அவள் வாழ ஆரம்பித்தத்து ஒரு புது மனிதனுடன், புதிய சூழல். அத்துடன் இருவரும் ஒருவருக்கு ஒருவர்
புதியவரே . இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிந்துகொள்ள வேண்டிய,புரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன
என்பது அனுபவசாலியான உங்களுக்குத் தெரியாத விடயமல்ல.
ஆச்சி, இருவருக்கும் தங்கள்
பெற்றோர்கள் அவரவரைப் பொறுத்தவரையில் இனிமையானவர்களே. அதனை புரிந்துகொள்ளும்படி தங்கைச்சி உணர்ந்து நடந்திருக்க நீங்கள்
தடையாக இருந்திருக்கிறீர்கள் என்பது உங்கள்
கடிதம் எனக்குப் புரிய வைக்கிறது. பதிலாக
தங்கைச்சி மனதில் மாமன்,மாமி தொடர்பாக நற்கருத்துக்களை
நீங்கள் விதைத்திருந்தால் புலம் பெயர்
நாட்டில் அவள் தனிமைப்படுத்தப் படவேண்டிய நிலை வந்திருக்காது என எண்ணுகிறேன்.
ஆச்சி, இன்று வெளிநாடுகளில் காணப்படும்
சில திருமணமுறிவுகளுக்கு காரணம் , அவர்கள் குடும்ப விவகாரங்களில்
பெற்றோர்களின் மித மிஞ்சிய தலையீடுகள் என்பது காணக்கூடியதாக இருக்கிறது.
உங்களை தலையிடவேண்டாம் என நான் கூறவில்லை. ஆரோக்கியமான கருத்துக்களுடன் அவளை வாழவிடுங்கள்
என்றே கெஞ்சிக்கொள்கிறேன்.
ஆச்சி,வாழ்க்கை என்பது இன்பமும்,துன்பமும் நிறைந்தது தான். வாழ்க்கை என்ற சுமையினை
கணவன் ,மனைவி இணைந்து தான் சுமந்துகொள்வது தான் நியதி. அதை
உணரும் காலம் எதுவெனில் அவர்களின் இயலாமைக்காலமான வயது போன காலம் தான். அதுவரையில் இடையிடை சண்டைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அது தான் வாழ்க்கை. அது அடுத்த மனிதர்கள் வாயில்
தான் சுவைப்பது அதிகம். ஆனால் அந்த அடுத்த மனிதர்கள் தங்கள் பிரச்சனைகளை ,வெளியில் காட்டிக்கொள்ளாததால் அவர்கள் நல்ல வாழ்க்கை
வாழ்வதாக தவறாக எண்ணி ஏனையோர் ஒப்பிட்டு பேசுவார்கள். தலையிடியும், காய்ச்சலும்
எல்லோருக்கும் வருவதுதான். வீட்டு வைத்தியத்துடன் முடிப்பவர் நோயினை
அடுத்தவர் அறிந்துகொள்ள சந்தர்ப்பமில்லை.
அதனால் தான் யாரையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
ஆச்சி, இவையெல்லாம் நீங்கள்
அறியாதவரல்ல . ஆனால் தங்கச்சி விடயத்தில்
ஏன் இப்படி நீங்கள் நடந்து கொண்டீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
ஆச்சி, உங்கள் தேவைகளையும்,சுகத்தினையும் , உங்கள் பதிலில்
எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
அன்புள்ளமகன்
செ. மனுவேந்தன்
No comments:
Post a Comment