எந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ] போலாகுமா?

கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
பெயர்க்காரணம்
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள்
தங்கி உருவாக்கியதால் கோசர்புத்தூர் -> கோசம்புத்தூர் -> கோயமுத்தூர் என பெயர் வந்ததிருக்கலாம். கோவை, வடவள்ளிக்கு மேற்கே இருந்த 'கோனன்' என்ற வேட்டுவர் தலைவனுக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், ஒருவர் பெயர் கோணி, இனொருவர் பெயர் முத்தா என்று இருந்ததாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியை 'கோணி முத்து ஊர் -> கோணமுத்தூர் -> கோயமுத்தூர்' என மருவி இருக்கலாம். அவர்கள் நிறுவியதே கோனியம்மன் கோவில். "கோவன்" எனும் இருளர் தலைவன் இருந்ததாகவும், அவன் பெயரிலே உண்டான ஊரே கோவன்புத்தூர்-> கோனியம்மன் புத்தூர்-> கோணம்புத்தூர் -> கோயமுத்தூர் என மாறிருக்கலாம் என செவி வழி செய்திகள் கூறுகின்றன.
வரலாறு
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.

9ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாகக் கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.
கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927
உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர். 1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத் தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஏரிகளும் குளங்களும்
பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.
பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து - அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.
தவிர, காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்கு, சந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள் முதலியன வளர்கின்றன.
பூங்காக்கள்
நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையானதொன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா, காந்தி பூங்கா, இராமாயணப் பூங்கா, விவேகானந்தர் பூங்கா.
வானிலை
கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும்.
பெரும்பாலும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி கரிசல் மண்ணாக இருப்பதால் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கையியல் மையம் அமைந்துள்ளது.
வான்வழி
கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம்.
பொருளாதாரம்

நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

No comments:

Post a Comment