நம்மவரில்
பெரும்பாலோர், தங்கள் வசம் இன்று
கையில் உள்ள ஒரு இலட்சம் பணம், வரும்
காலத்தில் இன்னும் நூறு மடங்காகி ஒரு கோடி என்று ஆக்கினால், "அப்பப்பா, நம் பிற்
காலத்தில் வாழ்க்கை என்ன சந்தோசமாய் இருக்கும்" என்று எண்ணி காலம் முழுவதும், நாயாய்ப்
பேயாய் அலைகின்றார்கள்.
இவர்கள், தெரியாத
ஒரு பிற்காலத்திற்காக தங்கள் தற்கால
வாழ்க்கை, வசதிகளை இழக்கின்றார்கள். தற்காலத்திலும் வாழாமல், பிற்காலத்திலும்
வாழ முடியாமல் சடமாய் இருந்து மடிந்து போகின்றார்கள்.
முக்கியமாக, அவர்கள்
தங்கள் வயோதிப வயதிலும், அவர்களின் பிற் காலத்திற்கு என்றும், பிள்ளைகள், பேரப்
பிள்ளைகளுக்கு என்றும் மூச்சு வாங்க,
வாங்க ஓடி உழைத்துத் திரிவார்கள்.
சிலர் இப்படி பணம் சேர்ப்பதற்காக வாழ்க்கையின்
எந்தக் குறைந்த மட்டத்திற்கும் சென்று
விடுவார்கள்.
அதற்காக இவர்கள்,
* பலவிதமான வேலைகள் 16
- 20 மணித்தியாலங்கள் மாறி, மாறிச்
செய்வார்கள்.
* தள்ளாடித் தள்ளாடி நடந்து வேலைக்குச் செல்வார்கள்.
(காரணம்: வீட்டில் இருந்து என்ன செய்வது?)
* இரவு வேலை செய்தால் ஊதியம் அதிகம் என்பதால், தூக்கம்
இன்றி, முழிகள் பிதுங்க,
விழிகள் கறுக்க,
முகங்கள் சுருங்க காலம் முழுவதும் வேலை செய்வார்கள்.(சாட்டு:
பகல் வேலை கிடைக்குதே இல்லை)
* தொழில் நுட்ப அறிவு இல்லாவிடினும், கந்தோர்
சென்று, ஒரு பக்கத்தில் போய்
உட்கார்ந்து விட்டு வருவார்கள்.(காரணம்: கம்ப்யூட்டர் எல்லாம் பிழை விடூது)
(குறிப்பு: சில மேலை நாடுகளில் அரச ஊழியர் ஒருவரை, வயதை
வைத்து வேலை நிற்பாட்டுவது குற்றம்)
* மகன் வயசு ஒத்த மேனேஜர்
(இவர்களை வேலையைத் தானாகவே விட்டுவிட்டுப் போகப் பண்ணுவதற்காக) எப்படி
இம்சித்தாலும் எதையும் தாங்கி, ஊதியம் ஒன்றில் மட்டும் கண்ணாய் இருப்பார்கள்.
(சொல்லிக் கொள்வது: நான் அனுபவசாலி!)
* கைத்திறன், மூளைத் திறன் குறைந்து,
மிக மந்த கதியில் வேலை செய்தாலும் வருவாயை விடாது போய்க்
கொண்டே இருப்பார்கள்.
( சொல்வது: நாங்கள்தான் சரியாய் செய்வோம்)
* செய்யும் வேலை இழிவானது என்று மற்றையோர் நினைத்தாலும் என்று
பொய்யான வேலைப் பெயரினைச் சொல்லிக்
கொள்வார்கள்.
* வங்கிக் கடன் அட்டை மோசடி மூலம் பொருள் சேர்க்கும்
திருடர்களும் ஆவார்கள்.
* சேர்க்கும் பணத்திற்கு வரி கட்டாதோர் பட்டியலில் சேருவார்கள்.
* போதைப் பொருள் விற்பனையிலும் ஈடு படுவார்கள்.
* பண வருவாய் இல்லையேல் உதவிய சொந்தங்களையே காரணம் இன்றி
உதறித் தள்ளுவார்கள்.
* வருமானம் நாடி,
மோசடிக் குற்றவாளிகளாய் இருந்தாலும் அவர்களுடன் கூட்டுச்
சேருவார்கள்.
* தங்களை கேவலப்படுத்திப் பேசித்திரிந்த விரோதிகளால் ஒரு வேலை
கிடைக்கும் என்றால் அவர்களுடன் கூடிக் குலாவுவார்கள்.
* வருமானம் இல்லாது ஒரு நிமிடம் வீணாக்குவது பெரும் இழப்பாகக்
கருதுவார்கள்.
* நண்பர்கள், உறவுகளை விலத்திக் கொள்வார்கள்.
* குடும்பத்தை விட்டுத் தொலை தூரத்தில் தனியே இருந்து பணம்
சேர்ப்பார்கள்.
*பணம் ஒன்றே குறி என்பதால், பணம் செலவாகும்
விடுமுறைப் பயணங்கள் எதையும் மேற்கொள்ள மாடடார்கள்.
* விரும்பிய உணவுகளை வாங்கிப் பண விரயம் செய்ய மாடடார்கள்.
இப்படி 100 மடங்கு
ஆக்கியபின், இவர்களுக்கு கிடைக்க இருக்கும் சௌகரியங்கள் இவைகளாக
இருக்குமோ? பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.
அவையாவன:
* காலையில் 300 - 400 இட்டலி / தோசை சாப்பிடலாம். 25 லீட்டர்
பால் குடிக்கலாம்.
* 1 கி.மீ நீள அறையில், 200 மீ. நீள
கட்டிலில், 20 மீ. உயர தலை அணையில் ஆனந்தமாய் தூங்கலாம்.
* சமையல் அறையோ 300 மீ. நீளம்;
மளிகைப் பொருட்கள் 300 மீ. தூரத்தில் வசதியாக இருக்கும்.
* ஒரு கி.மீ. நீள காரில் சொகுசாகப் பிரயாணம் செய்யலாம்.
* ஒரு 100 வாழ்க்கைத் துணைவரை மணம் முடிக்கலாம்.
* ஒரு 50 கிலோவில் தாலிக்கொடி/சங்கிலி அணியலாம்.
* இறந்ததும் ஒரு விளையாட்டு மைதானம் அளவுக்கு குழி தோண்டி
உடலைப் புதைக்கலாம்.
இப்படியாக, வாழ்க்கை
முழுக்க ஓடி, ஓடி மாடாய் அலைந்து திரிந்தால், இவர்களுக்கு
இப்போது - அதாவது அவர்களின் அந்த திட்டமிட்ட "பிற்காலம்" பகுதியில்,
இருக்கும் அந்த பழைய ஒரு இலட்சத்தின் ஒரு பகுதியைத் தன்னும்
அனுபவிக்க நேரம் கிடைக்காது.
அப்படித்தான் அந்த
ஒரு கோடியினை சேர்த்து விட்டார்களேயானால்,
முடிந்த அந்த வயதில் அவர்களுக்கு,
* கால், கை முடங்கி விடும்.
* தேகம் சுருங்கி விடும்.
* கண்கள் இருண்டு விடும்.
* செவிகள் மழுங்கி
விடும்
* சுவைகள் மரத்து விடும்.
* மோப்பம் அழிந்து விடும்.
* பேச்சு தழம்பி விடும்.
* நினைவு குன்றி விடும்.
* உறவு மறந்து விடும்.
அத்தோடு,
* இரத்தக் கொதிப்பு உச்சத்திற்குப் போகும்.
* சலரோகம் கடுப்பு மிஞ்சி விகும்.
* கொழுப்புப் படிவு எங்கெங்கும் இருக்கும்.
* வாத நோயால் உடல் எங்கும் கொதிக்கும்
* தடிமனும், காய்ச்சலும் அடிக்கடி வரும்..
* சிறு நீர்ப் போக்கு அப்பப்போ நிற்கும்.
* மலமும் போவது கஸ்டமாய்
இருக்கும்.
* செய்ததும், விட்டதும் மறந்தே
போகும்.
* சொந்த உடம்பே தொந்தரவாய் இருக்கும்.
ஆதலால், இவர்களின்
பிற்காலத்தில், இவர்களால்,
* விரும்பியதை சாப்பிட இயலாது; அல்லது நல்ல எதையுமே
சாப்பிட விருப்பம் இருக்காது..
* விரும்பிய பயணம் போக இயலாது; அல்லது பயணம்
ஒன்றிலுமே விருப்பம் இருக்காது.
* உறவுகளுடன் பழக உடம்பு இடம் கொடுக்காது; அல்லது
உறவுகள் பழக விருப்பம் இருக்காது.
* விரும்பியதை பார்க்க இயலாது; அல்லது பார்ப்பதற்கு
விருப்பமே இருக்காது.
* சேர்த்த பணத்தை பார்க்க இயலாது; அல்லது
அந்தப் பணத்தில் விருப்பமும் இருக்காது.
கடைசியில்,
இவர்கள் தம் கடந்த
வாழ்வையும் இழந்து, பிற்கால வாழ்வும் இல்லாது வெறும் சடங்களாகவே கிடந்தது, மடிந்து
ஒழிகின்றார்கள். இவர்களின் சேமிப்புகளை இவரின் சந்ததியினர் தங்கள் ஆடம்பர
வாழ்க்கைக்குப் பயன் படுத்துவார்கள்.
வயோதிப காலத்தில்
"அய்யய்யோ, இளமையில் ஒன்றும் அனுபவிக்காமல் விட்டு விட்டோமே "
என்று மனவருத்தப் படுவார்கள்.
மன்னிக்கவும்; இனி அந்தக் காலம் திரும்பி வரவே மாட்டாது!
ஆகவே,நேற்று என்றது
முடிந்து விட்டது அதை பற்றி ஒன்றும் செய்ய
இயலாது.
நாளை என்பது என்ன
என்று ஒருவருக்கும் தெரியாது.
இன்று நம்மிடம் உள்ள
ஒன்றைப் பணம்தான் உண்மையானது. நாம் நல்லாய் இருக்கும்போதே, இக்கணமே, இப்பொழுதே
அதை அனுபவிக்க வேண்டும்.
நாளை, நாளை
என்று வைத்துக்கொண்டு இருப்போமேயானால் அந்த நாளை என்பது நமது கையில் இல்லை.
இன்று என்பதுதான்
உண்மை.
அந்த இலட்சமே போதும்! கோடி ஒன்றும் தேவையே இல்லை!!
✍✍✍✍செல்வதுரை,சந்திரகாசன்✍✍✍✍
No comments:
Post a Comment