தமிழும் தாவரமும்..............தமிழனும்



இயற்கையாகிய பயிரினமும் விலங்கியல் உயிரினமும் தாம் மொழிப்பொருளையும் சொற்பெருக்கத்தையும் வழங்கியிருக்கிறது என்ற உண்மை பலருக்கு வியப்பூட்டலாம். நாம் படிப்பதற்கு பயன்படுத்தும் இதழ், ஏடு, சுவடி, மலர் போன்றவைகளும் எழுதப்பயன்படுத்தும் பொருள்களும் தாவரம் தமிழுக்கு அளித்தவை.

 தாவர இலைகளுக்கு அடுத்துத்தோன்றுவதைக் கொழுந்து என்று கூறுவர். மனைவிக்கு அடுத்துப் பிறந்தவளைக் கொழுந்தி என்றும் கணவனுக்கு அடுத்து பிறந்தவனைக் கொழுந்தன் என்றும் தமிழுலகு குறிப்பிடுகிறது.

     திருமண நிகழ்வில் மருவுக்கழைத்தல், மருவுசாப்பாடு என்பனவைகளுக்கு இடமுண்டு. மரு என்பதற்கு இயற்கை மணம் என்பதோடு இரண்டு உள்ளங்கள் கலத்தல் என்பதையும் உணர்த்துகிறது. இந்த இன்பக்கலப்பினடியிலே பிறந்த சொற்கள் தாம் மருமகன், மருமகள், மருகி ஆகியவை.
    இறைவனுக்குப் பூக்கொண்டு மலர் தூவி வழிப்பட்ட வழிபாட்டு முறைக்கே பூ செய்தல், பூசுதல் என்று குறிப்பிடுவர். பூ செய்தலே மருவி பூசையயிற்று. பூசை என்ற தமிழ்ச்சொல்லே வட மொழியில் பூஜை என்றுத் திரிந்தது.

                ஆலமரமே ஆதிகால மக்கள் கூடிய மன்றமாயிற்று. ஊர்ப் பொதுக்கூட்டங்களும் நிகழ்ந்தன. பின்பு அதுவே வழிபடும் இடமுமாயிற்று. அடர்ந்து படர்ந்து கிளைத்துத் தழைத்து விழுதுகள் பல தாங்கி நெடுநாள் நிலைப்பெற்றுயர்ந்த ஆலமரமே பிற்காலத்தில் ஆலயம் ஆயிற்று. ஆண்டு தோறும் ஆனி முழு மாத நிலவன்று ஆலமரத்திற்கு பூசை நடைபெறும். ஆலமரத்திற்கு  Banyan என்ற பெயரை ஆங்கிலத்திற்கு அளித்தவர்கள் தமிழர்களே. பாரசீக வளைகுடாவில் பந்தர் அப்பாசு எனும் துறைமுகத்தில் தமிழ் வியாபாரிகள் வணிகத்தின் பொருட்டு அங்கு குழுமியிருந்தனர். அங்குள்ள ஆலமரத்தின் கீழ் சமய ஆசாரப்படி தொழுகை மேற்கொண்டனர். அவர்கள் மொழியில் வணிகர் என்பதற்குப் பனியன் என்பது பெயர். ஆலமரத்தின் கீழ் வணிகர்கள் இருந்து தொழுததால் BANYA TREEஎன்றே  நாளடைவில் பெயர் பெறலாயிற்று.
  
     பல ஊர்ப் பெயர்களுக்குத் தாவரங்களின் வழியாகவே பெயர் பெற்றிருப்பது இயற்கையே. உதாரணமாக அரசூர், ஆலங்குளம், இலுப்பையூர், கடம்பவனம், நுங்கம்பாக்கம், நெல்லூர், நெற்குன்றம், மாங்குடி, மூங்கில் வனம், தாமரைக்குளம் போன்றன.
    
இந்த பாரத கண்டத்தின் பழம் பெயரே நாவலந்தீவு என்பதாகும். அது மட்டுமின்றி நாம் நிலத்தினையும் பூவாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைக்கின்றோம். வெட்சி, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் புறத்திணை ஏழிற்கும் மலர்ப்பெயரையே மகிழ்ந்தளித்துள்ளனர். அகவொழுக்கத்திற்கும் பூ, புறவொழுக்கத்திற்கும் பூ என்றான பின் தமிழர் வாழ்விலே மலர் பெற்றுள்ள நிலையை நன்குணர முடியும். மலரில்லாத வழிபாடா? மாலையில்லாத விழாவா? மலர்கள் இல்லாத சமூக விழாவா? மலரணியா மகளிரா? பிறப்பு இறப்பு எல்லாமே பூவோடுதான் நடைபெறும்.

     பெண்கள் முகம் தாமரை, கண் குவளை, வாய் செவ்வாம்பல், பல் முல்லை, மூக்கு எட்பூ, கரம் செங்காந்தள் எனப் பூவாலே வருணிப்பர் புலவர். முற்காலத்தே மகளிர் மிகுந்த மணத்தையும், அழகிய நிறத்தையும், மென்மைக் குணத்தையும் பெரிதும் விரும்பியதால் தம் மக்கட்குப் பெரும்பாலும் பூவாலே பெயரிட்டனர். அல்லி, கமலம், செந்தாமரை, தாமரைக்கண்ணி, துளசி, பூங்கொடி, பூங்கோதை, மலர்க்கொடி, மலர்விழி, முல்லை போன்ற பெயர்களை விரும்பி வைத்த்தனர்.

ஆண்களுக்கும் தாவரப்பெயர்களையே சூட்டியுள்ளனர். அரசப்பன், கடம்பன், சோலையப்பன், மருதன், மருதமுத்து, வேலப்பன் முதலானவை அப்பெயர்களில் சில. இப்பொழுது என்ன பெயர் வைக்கின்றோம் என்றே தெரியாமலே ஒரு மயக்கம் நிலவி வருகிறது. அதில் தமிழ்க் கோலமும் இல்லை, தமிழ்ச் சாயலும் இல்லை. பொருளை வெளிப்படையாக உணர்த்துவதே தமிழர் பண்பாடு. இன்றைய தமிழர் பொருளற்ற வாழ்வில் மூழ்கியிருப்பது முற்றிலும் வருந்தத்தக்க செயலாகும்..............................

நன்றி தமிழ் மனம் samy................................

No comments:

Post a Comment