எந்தவொரு மனிதனும் வசதியான வாழ்வுக்காக சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய உபாயங்கள் எங்காவது கிடைக்குமா என்று அலைந்து திரிந்து தேடிக்கொண்டு இருக்கிறான். இந்தத் தேடலின்போது தனக்கு எதிரே எவராவது வந்து இவற்றை அடைவதற்கு இலகுவான குறுக்கு வழி இருக்கின்றது என்று கூறினால், உடனே அவரின் வாக்கை நம்பி அவரின் பின்னால் சென்று செல்வம் வேண்டிப் பணம் செலவு செய்யத் தயங்கமாட்டான். இக்குறுக்குவழிக் கிரிகைகளை அவர்கள் தங்களுக்கே செய்து, தாமே செல்வம் சேர்க்க முடியாமையினால்தானே மற்றையோரின் செல்வத்தைக் குறிபார்த்துக் கண் வைக்கிறார்கள் என்ற ஒரு பெரிய உண்மையை ஏன்தான் மனிதன் உணர மறுக்கிறான் என்று புரியத்தான் மாட்டேன் என்கிறது!
இப்படி ஐஸ்வரியம் தரும் என்று நம்பச் செய்யும் புரியாத சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நிறையவே உள்ளன!
* கிழிந்த, அழுக்குத் துணியுடன் வீதியில் இருந்து அதிஷ்ட மந்திரத் தகடும், நூலும் வழங்கும் சாத்திரம் கூறும் பெண்கள்.
* பணம் தேடி ஊரூராய் அலைந்து திரிந்து, உயர்வதற்கு வழிமுறை கூறி, தோஷ பரிகாரம் செய்து, அதிர்ஷ்டக் கற்கள் விற்கும் சோதிட பண்டிதர்கள்.
* பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டுக் கஷ்டத்தில் வாழும், தன்சாத்திரமும், தன பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சாத்திரமும் பார்க்க மறந்த பிரபல ஜோதிட நிபுணர்கள்.
* வீடின்றி வீதியில் வதியும், மற்றயோருக்குக் குறி சொல்லும் கிளி ஜோசியர்.
* தன் நலம் இன்றி பிறர்பால் அன்புகொண்டு அவர்கள் புகழேணி ஏறப்
பெயர்களை மாற்றச் செய்யும் எண்கணித சாத்திரிகள்.
* பெரும் புதையல் பிறருக்குத் தேடித்தரச் சிறு தொகை கூலியுடன் பெரும் பூசை செய்யும் மாந்திரீகர்கள்.
* சூனியம் செய்து எதிரியை ஒழிக்கும் பகைவர்கள் பலர் கொண்ட சூனியக்காரர்.
* நோய்வாய்ப் பட்டும், ஈனச்செயல்கள், குற்றச் செயல்களில் அகப்பட்டு மீளமுடியாமல் அல்லல்பட்டுக்கொண்டும் இருக்கும், நோய் தீர, நல்வாழ்வு மலர அறிவுரை பகரும் சுவாமிமார்கள், அவதாரங்கள், மத குருமார்கள் மற்றும் புத்திஜீவிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப் படுத்தியவர்கள்.
* வீதியில் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருந்து, பலவித விலைகளில் பூசைகள் செய்தால் உயர்ச்சி அடையலாம் என்று ஆட்களை மூளைச் செலவு செய்யும் அர்ச்சகர்கள்.
* பிள்ளை வரம் பிறருக்குக் கிடைக்க யாகம் செய்யும் வாரிசே இல்லாத புரோகிதர்கள்.
* ஐஸ்வரியம் தரும் யானை வால் முடியைக் களவாய்ப் பிறருக்கு விற்கும் ஏழை யானைப் பாகன்.
* கோடிக்கணக்கான மக்கள் தினசரி குளிக்க, குடிக்க, சமைக்க, துவைக்க, கழுவக் கங்கை நீரைப் பாவித்தும் இன்னும் அங்கு அவர்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்க, அங்கிருந்து சௌபாக்கியம் தரும் என்று கொண்டு வரப்படும் ஒரு சொட்டுக் கங்கை நீர்.
* மதுரா என்று ஒரூருக்குப் பெயர் வைத்துவிட்டு, அங்கு தொன் கண்ணக்கில் மண்ணைச் சொந்தமாகக் கொண்டு, அந்த மண்ணில் ஒலைக்குடில்களில் இருந்து கஷ்டப்படும் மக்கள் வாழும் அந்த இடம்தான் (பல யுகங்களின் முன்) பல பெண்களின் காதல் மன்னன் கிருஷ்ணன் பிறந்த ஊர் என்று சொல்லி, சுகவாழ்வு அமையும் என்று நம்பிக் கொண்டுவரப்படும் ஒரு பிடி மதுரா மண்.
*அயோத்தி என்ற பெயருள்ள சிறு ஊர், மகா கஷ்டங்களோடு தன் பெரும்பகுதிக் காலங்களை வீணாக்கிய ராமன் பிறந்த ஊரின் பெயராய் இருப்பதால், பெருவாழ்வு வரச் செய்யும் என்று எண்ணிக் கொண்டு வரப்படும் அயோத்தியா மண்.
* இறந்தோர், இருப்போர் எல்லாம் (காணாத) சொர்க்கம் செல்வதற்காக, கடவுளுக்கே ஐஸ் வைத்து, லஞ்சம் வழங்கிக் கடவுளின் முடிவையே மாற்றவல்ல பூசைகள் பிரார்த்தனைகள் செய்யும் பூசகர்கள், பக்தர்கள்.
* செய்யும் பாவங்கள் எல்லாம் கடவுள் முன் மன்னிக்கப்படலாம் என்று கூறி,
மேலும் பாவங்களைச் செய்யத்தூண்டும் ஆள் சேர்க்கும் சமய குருமார்கள்.
* அவதார கடவுள்மார், அநாதியான கடவுள்மார்களின் பஞ்சப்பட்ட ஊர்களில் இருந்து கொண்டுவரப்படும் ஐஸ்வரியம் தரும் என்று நம்பப்படும் பிரசாதங்கள், அணிகலன்கள்.
இப்படியாக ஏன்தான் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்? இப்படியெல்லாம் செய்வதால் என்னிலும் பார்க்க அவனுக்குக் நிறையவே கிடைக்கும் என்று நினைக்கிறானோ?
ஒன்றும் புரியவில்லைத் தம்பீ!
ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்
செல்லாச்சி மாமியின் கணவனுக்கு பொல்லாத நோய் என்று வைத்தியசாலை கொண்டுபோனதும்,மாமி கனடா கந்தசாமி க்கடவுளுக்கு பொன் வேலாயுதம் செய்து தருவதாக நேர்த்திவைத்தார்.ஆனால் கணவன் ஒருகிழமையில் மேலை போய்விட்டார்.இருந்தாலும் மாமி களைக்கவில்லை.சொன்னதை செய்யாட்டில் ஏதாவது பொல்லாப்பு பண்ணிடுவன் முருகன் என்று அந்த நேர்த்தியை தான் கோவிலுக்கு போகாவிட்டாலும் அவசரமாய் செய்துமுடித்தார்.
ReplyDelete(சம்பவம் உண்மை.பெயர்கள் கற்பனை.)இப்படித் தாங்கவேமுடியாத சங்கதிகள் பல உண்டு.நீங்க வேற!!!
கணவனின் மறைவை விட ஒரு பொல்லாப்பா?
Deleteதமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.
ReplyDeleteநான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.
“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“
ஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்.
நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம் அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும்.சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம்- இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல்களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது?
இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும்.சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே.
இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது.அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும் . சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான்.
ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.
மேலும் இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு.இவர் "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.
பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்.
மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.
"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி"
- பட்டினப்பாலை.
ஆம் ,இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.?
இப்படியெல்லாம் செய்வதால் என்னிலும் பார்க்க அவனுக்குக் நிறையவேகிடைக்கும் என்று நினைக்கிறானோ? ஆம் அப்படி நினைப்பதால் தான் இப்படி செய்கிறான் ??