தொடர்மாடி முன்னாலே
தொடரும் பனி மழையுனுள்ளே
இடர் கொண்டு பின்னாலே
குதறும் குளிர் காற்றுனுள்ளே
மலர் என்றே கனடாவில்
மங்காப் பெயர் உடையாள்
தளர்கொண்ட கால்களினால்
தள்ளாடி நடந்து வந்தாள்,
பாக்கு வெற்றிலை வேணுமென்றே
பாவி மகனைக் கேட்டபோது
சாக்குப்போக்கு சொல்வதிலேயே
சாதனைகள் படைத்துவிட்டான்.
நாக்குக் கேட்கவில்லை என்றே
நடையினிலே இறங்கிவிட்டாள்.
தாக்கும் கடும் குளிருனுள்ளும்
தனிமையிலே துணிந்துவிட்டாள்.
அடித்து வளர்த்த பிள்ளையுடன்
ஆசையுடன் பேச முடியவில்லை
கடித்து உண்ணும் உணவு கூட
கச்சிதமாய் சுவைக்க வில்லை
நடித்துப்பேசும் பேரருடன்
நம் மொழி பேச முடிய வில்லை
துடித்துத் துவண்டே கண்ணீர்
வடித்தே அவள் வாழுகிறாள்.
ஊரில் உவள் இருந்திருந்தால்
பேரர் வரை பணிந்திருப்பர்.
காரில் கிறங்கும் பிள்ளையையும்
காலுக்குள் கிடத்தியிருப்பாள்.
சீரிலெங்கள் பழக்கவழக்கங்களை
சிறப்பாக ஊட்டி இருப்பாள்.
ஏரில் பூட்டிய மாடுகள் போல்
அடக்கத்துடன் வளர்த்திருப்பாள்.
பற்பனைகள் படர்ந்த நிலம்.
பரம்பரையாய் வாழ்ந்தநிலம்.
கற்பனைகள் கணத்தே அவள்
கனடா வர விட்ட காணி.
வற்றாத அன்பு மகனின நம்பி
வந்தநாளே இப்பனிமண்ணில்
முற்றாக முழுவினையும்
தழுவியே தடுமாறுகிறாள்.
சொந்த நாடு பிரிந்து வந்த
உணர்வுகள் உதைத்த போதும்
பந்தங்களை பிரிந்த
வேதனைகள் வதைத்த போதும்
குந்தகங்கள் தொலைந்திடவே
குதூகலமாகக் கூடவந்தாள்.
விந்தையான வாழ்விதிலும்
விருப்பமற்றே வாழுகிறாள்.
கட்டை இதுவும் பட்டாலோ
முட்டைக் கண் நீராய் வடித்திடுவர்.
சட்டை செய்யாத சனங்களெல்லாம்
சரளமாய் வந்து கூடிடுவர்.
கட்டம்கட்டமாகவே படையல்பண்ணி
பங்காளிகளுடன் வந்து பங்கிடுவர்.
மட்டைமட்டை யாகவே மற்றோர்
கல்வெட்டினைப் பிரதி பண்ணிடுவர்.
ஊருக்கு உபதேசம் உனக்கில்லையென
உண்மையை உணர மறுக்கிறார்.
பேருக்கு சடங்குகள் பெருக்கியே
மாயப்புகழில் மாழுகிறார்.
பாருக்குள் பாவங்கள் படைத்தே
தம் பிள்ளைக்குப் பாடமாகிறார்.
இவருக்கும் இளமை இறந்திட
திரும்பிடும் காலம் ஒன்றே.
ஆக்கம்:-செ.மனுவேந்தன்
"காவோலை விழ குருத்தோலை சிரிக்க
ReplyDeleteகாதில் மெல்ல காவோலை கூறிற்று
'காலம் மாறும் கோலம் போகும்
காயாத நீயும் கருகி வாடுவாய்'
குருத்தோலை சிரித்தது குலுங்கி ஆடியது
குறும்பு பார்வையில் கும்மாளம் அடித்தது
குருட்டு நம்பிக்கை வெயிலில் காய
குருத்தோலை விழுகுது பாவம் காவோலையாக !!"