சங்க கால மக்களின் மறுபக்கம்!


            
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்துவகை நிலங்களும் அகம் புறம் என்று இரண்டுவகை ஒழுக்கமும் வகுத்து செம்மையாக வாழ்ந்த இனம் சங்கத்தமிழ் இனம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். யாதும் ஊரே என்ற யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனின் சங்கப் பாடலும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களில் காணப்படும் பல விழுமிய கருத்துக்களும் பலரையும் அவ்வாறு எண்ண வைத்துள்ளன.

இயற்கையோடு ஒட்டி அறவழியில் நிற்க முயன்ற சங்ககால மக்கள் வாழ்வியலை இன்றுபோல அன்றும் சில புலவர்கள் அனுமதிக்கவில்லை! தம் சுய இலாபத்துக்காக மூவேந்தர்களை ஒருவரோடு ஒருவர் பகைகொள்ள வைத்த கல்வி மான்கள் சங்க காலத்திலும் இருந்தார்கள்.

இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை உருகெழு மரபின் நிவந்து சேண் விளங்க என்ற கோவூர் கிழாரின் புறநானூற்று வரிகள் இதற்கு நல்ல உதாரணமாகும்! சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை சேர பாண்டியரின் குடைகளை விட உயர்ந்து நிற்கிறதாம். ஆனால் சேர பாண்டியரும் தமிழர்கள் ! அவர்கள் தாழ்த்தப்படுகிறார்கள்! பரிகாசிக்கப் படுகிறார்கள்!

இந்தப் பாடலால் வயிறும் வாழ்வும் நிறையப் பொருள் கிடைத்திருக்கலாம் புலவருக்கு. ஆனால் அவர்கள் கொழுத்திப் போட்ட ஒற்றுமை இன்மை என்ற நெருப்பு முள்ளிவாய்க்கால் வரை எம்மைச்; சுட்டது என்பதை இலக்கிய வாதிகள் எண்ணிப் பார்ப்பதில்லை!

சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் இடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன.

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையிலே ஒரு காட்சி வருகின்றது. ஒரு பெண் ஆடவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அதைத் தெரிந்து கொண்ட அயல் பெண்கள்; அந்தப் பெண்ணின் தாய் தெருவில் போகும் போது கடைக்கண்ணால் பார்த்து தம் மூக்கின் மேல் சுட்டுவிரலை வைத்து அவளை இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள். அவமானத்தால் குறுகிப் போன தாய் வீடு திரும்பி வந்து காதலித்து தனக்கு வசை தேடித்தந்த தன் மகளைத் தடி எடுத்து நன்றாக அடித்து விடுகின்றாள். இதுவும் சங்க இலக்கியமே தான்!

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அலம்பல் தூற்ற
சிறுகோல் அலைந்தனள் அன்னை!

இன்று எத்தனையோ பெற்றார் காதலித்தவனோடு மகள் ஓடிவிட ஐயோ முதலே தெரிந்திருந்தால் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாமே என்று கவலைப்படுவதைக் காண்கின்றோம். இது போல தாய்க்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காதலனோடு போய்விட்ட மகளை நினைத்து ஏங்கும் தாயை அகநானூற்றில் காண்கிறோம்!

பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணையாக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியாமையில் செறியேன் யானே!

என்னுடைய அறியாமையால் பிள்ளை போய்விட்டதே என்று தன்னைத்தான் நொந்து கொள்ளும் இந்தத் தாயின் அவலத்தை இலக்கிய வாதிகள் எடுத்துப் பேசுவது இல்லை!


சங்க இலக்கியத்தில் எல்லோருமே காதலித்து விடவில்லை. சில ஆடவர்களுக்கும் பெண்களுக்கும் பெற்றார் மணம் பேசி இன்று போல அன்றும் சாதகக் குறிப்பு பார்த்திருக்கிறார்கள். ஒத்த பிறப்பும் ஒன்றுபட்ட ஒழுக்கமும் ஒத்த ஆண்டும் ஒத்த ஆண்மையும் பொருத்தமான அழகும் அறிவும் பொருளாதார நிலையும் காமவாயில் என்ற யோனிப் பொருத்தமும் பார்க்கப்பட்டதற்கு சான்றாக தொல்காப்பிய மரபியல் குறிப்பிடுகின்றது.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளொடு உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே!

காதல் வாழ்வுக்குப் பெயர் போன சங்கச் சங்கத்தில் எதற்காகப் பொருத்தம் பார்கப்பட்டது என்ற கேள்விக்கு அந்தத் தொல்காப்பியமே அழகாக விடை சொல்கின்றது. காதலிப்பதும் கை விடுவதும் தகுதியற்ற ஓட்டங்களும் பொய்யும் தவறுகளும் என்று சங்கச் சமுதாயம் அளவு கடந்த சுதந்திரத்தால் சீரழிந்த போது பெரியவர்கள் சில நெறிமுறைகளை வகுத்தனர் என்றார் தொல்காப்பியர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யார்த்தனர் கரணம் என்ப.

சங்க காலத்திலே குழந்தைப் பருவம் முதல் பெண்கள் அணிந்திருக்கும் சிலம்பை அவர்களின் திருமணம் நடப்பதற்கு முன்பு அகற்றுவார்கள். அதனைச் சிலம்பு கழிதல்  என்பார்கள். இன்றைய வளைகாப்பு போல அந்த நிகழ்வும் விழாவாக நடைபெற்றுள்ளது போலும்.

ஒரு வசதியான குடும்பத்துப் பெண் தன் ஏழைக் காதலனோடு ஓடிச் சென்று விடுகிறாள். கணவன் வீட்டிலே அவளின் சிலம்பு அகற்றும் விழா நடக்கின்றது எளிமையாக! அதைப் பெண்ணின் தாய் கேள்விப் படுகின்றாள்.
ஐயோ என் பிள்ளைக்கு புல்வேய்ந்த குடிசை வீட்டில் வறுமையுடன் விழா நடக்கிறதே! எங்கள் வீட்டில் என்றால் எப்படிச் சீரும் சிறப்புமாகச் செய்திருப்போம் என்று வருந்துகிறாள் அந்தத் தாய்!
சிறப்பும் சீரும் இன்றி சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓரா யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்லென  நோவல் யானே

இந்தச் செய்தி அகநானூற்றில் காணப்படுகின்றது. இங்கே வறுமைப்பட்ட இடத்திலே வாழ்க்கைப்பட்டு விட்டாளே என்ற எண்ணப்பாடுடைய ஒரு தாயைச் சந்திக்கின்றோம்! மகள் புகுந்த வீட்டை விட தன் வீடே பண வசதியில் சிறந்தது என்ற எண்ண ஏற்றத்தாழ்வை இன்றுபோல அன்றும் பார்க்கின்றோம்.பெரியோரை வியத்தலும் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை என்ற சங்கப் பண்பு நெறி அடிபட்டுப் போவதை இங்கே காண்கிறோம்.!

சங்க மக்கள் உணவுக்காக விலங்குகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றனர். வேட்டை நாய்களை ஏவி கருச்சுமந்து ஓட முடியாமல் தவித்த உடும்புகளைப் பிடித்துக் கொன்று வறையாக்கிச் சாப்பிட்னர்.

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் வறைகால் யாத்தது
வாயில் தொறும் பெறுகுவீர்!

பெரும்பாணாற்றுப்படை என்ற பத்துப்பாட்டு நூலில் இந்தச் செய்தி வருகின்றது. கருவுற்ற விலங்கென்று இரக்கம் காட்டாத தன்மையைத் தமிழ்ச் சமுதாயத்தில் ஒருநாள் காண்கின்றோம்! உடும்பு உண்பது அவர்கள் விருப்பம். ஆனால் அதன் வயிற்று முட்டையோடு சேர்த்து வறுத்த சாதியை என்ன என்பது?

இதைவிடக் கொடுமையானது சங்ககால மக்களின் பன்றிக் கறி. பன்றியின் ஆண் குட்டியை குழந்தைப் பருவத்திலேயே எடுத்து நிலத்திலே கிடங்கு வெட்டி எங்கும் ஓடிவிடாதவாறு அதிலே இறக்கி வளர்த்தனர். பெண் பன்றியுடன் இணையக் கூட அதனை அவர்கள் அனுமதிக்கவில்லை. தினமும் நெல்லை இடித்து மாவாக்கி அதற்கு ஊட்டினர். பின்பு அது கொழுத்து வளர்ந்ததும் அதனைக் கொன்று சமைத்துக் கள்ளுடன் உண்டார்கள். இதுவும் பெரும்பாணாற்றுப்படை சொல்லும் சங்கத்தமிழ்ச் சிறப்புத்தான்!

ஈர் சேறு ஆடிய இருபல் குட்டி
பல்மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி
பலநாள் குழிநிறுதது ஓம்பிய
குறு தாள் ஏற்றை
கொழு நிணம் தடியொடு
கூர் நறா பெறுமின்!

புற்றிலே இருக்கும் ஈசல் பூச்சிகளைப் பிடித்து புளித்த கள்ளிலே ஊறப்போட்டு புளிக்கறி காச்சி உண்ட செய்தியை புறநானூற்றிலே பார்க்கிறோம்! ஒரு எறும்பு இருந்தாலே உணவைக் கொட்டிவிட்டு எழும் எமது சமுதாயத்தின் முன்னோடிகள் உணவுக்காக பூச்சிகள் தேடி அலைந்திருக்கிறாhகள்!

கார்ப்பெயல் தலைஇய கான்பு இன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மெந்தினை யாணத்து நந்துங் கொல்லோ

இது மட்டுமல்ல. பகற் பொழுதிலே வேட்டை நாய்களோடு புதர்களுக்குச் சென்று வேலிகளில் வலை கட்டி முயல்களைத் துரத்திப் பிடித்து அவற்றின் இறைச்சியை சங்க மக்கள் மகிழ்ந்து உண்டிருக்கிறார்கள்.

பகுவாய் ஞமலியொட பைம்புதர் வெருகி
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரை புல்லழதழ் புரைய
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇ

என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் உணவுக்காகச் செய்த கொடூரங்களைப் பறை சாற்றும்! உயிரினங்களிலே அருளற்ற சமூக அமைப்பும் சங்க காலத்தில் ஒருபுறம் இருந்துள்ளது.

எல்லாவற்றையும் விட சங்கத் தமிழகத்தின் சில பகுதிகளில் பெண்கள் இடுப்பில் மட்டும் உடை உடுத்து மார்பில் எந்த உடையும் அணியாமல் இருந்துள்ளனர். மார்பகங்களைச் சந்தனம் +சி மறைத்த வரலாற்றுச் செய்தியும் கலித்தொகையில் உண்டு. தேமல் படர்ந்த பெண்ணின் மார்பகங்களைப் பார்த்து அதிலே படம் எழுதி அலங்கரிக்கட்டுமா என்று கேட்ட காலாச்சார ஆடவன் முல்லைக் கலியில் வருகின்றான்!

ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலை மேல்
தோய்யில் எழுதுகோ?

ஒளவையார் படித்தவர். பெண்கல்விக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். நீதி நெறி உணர்ந்தவர். அவர் நன்றாகக் கள் உண்பார் என்று எண்ண முடிகின்றது. அதியமான் என்ற அரசனின் நெருங்கிய நண்பியாக இருந்து அரண்மனையில் நன்றாக கள் உண்ட ஒளவையைப் புறநானூற்றில் காணலாம்!

மன்னர்கள் தங்கள் உயிருக்குக் கேடயமாக இளைஞர்களை வைத்திருந்தனர். மன்னனை நோக்கி எறியப்படும் வேலாயுதத்தை தன் மார்பிலே தாங்கி உயிர் விடுவதற்காக இளைஞர்கள் தயார்ப்படுத்தப் பட்டார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களை ஏமாற்றுவதற்காக அரசனே தன் கையால் கள் கொடுத்து உபசரித்த கதைகள் புறநானூற்றில் உண்டு.
இதுவும் குற்றம்.

இது போல அரசர்கள் இளம் பெண்கள் கைகளிலே மதுக் கிண்ணத்தை ஏந்திவர அதை வாங்கி உண்டு கேளிக்கைகளில் திளைத்திருக்கின்றனர் அதைப் அந்தணப் புலவர்களே பாராட்டியுள்ளனர்.

ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து

என்ற மதுரைக் காஞ்சிச் செய்யுள் இதனை மெய்ப்பிக்கும்.

இவ்வாறாக தவறுகளுக்கும் உடைவிடமாக சங்கத் தமிழ் இனம் இருந்திருக்கின்றது. எனவே சங்க காலம் என்பது முழுமையான செவ்விய நெறியில் தமிழர்கள் வாழ்ந்த காலம் என்று முழுவதுமாகக் கொள்ள முடியவில்லை. ஆங்காங்கே நீதிக்கு ஒவ்வாத நெறி முறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் போலும் அடுத்து வந்த சங்கம் மருவிய காலத்திலே திருக்குறளின் தேவை ஏற்பட்டிருக்கின்றது.

உயிர்க் கொலையையும் கள் உண்ணுதலையும் பெண் தொடர்புகளையும் திருக்குறள் வன்மையாகக் கண்டித்ததற்கு சங்க காலச் சமுதாயத்தின் குறைபாடுகளின் மறுபக்கத்தை அது தெரிந்து வைத்திருந்ததே காரணம் எனலாம்.

.........................Written by இரா.சம்பந்தன்..........................

No comments:

Post a Comment