விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01



ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக ,என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது  சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா
அதேவேளை வேறு ஒரு நாட்டுக்காரன் ஆகிய   தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு கூடிய வேளையில் அவர்களின் உரையாடல்  அறிவு பூர்வமான இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள்? இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை

அவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன். 

முதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம். அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று  சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக  ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது  ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர். விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதை சொல்லலாம்.

திருக்குறளில், அதிகாரம்:கல்வி குறள் எண்:391 இல்  "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்றுதான், வள்ளுவர் கூறியிருக்கிறார்.எனவே எவருக்கும் எதைக்கற்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். உண்மைதான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளுவரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று ! இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் பொதுவாக எம்மவர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. உதாரணமாக, பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச்புணர்கூட்டு [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப்பாலை 169-171, "பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.] என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் "சைவவாதி"[சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக்குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம். என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம்.பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth,
he that reapeth].எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish].

ஒருவரின் பேச்சை  பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு,   வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும். வாதங்களும் அப்படியே .அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும்.

 "வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ" என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்கு தோன்றுகிறது

பகுதி 02 தொடரும் 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comment:

  1. சில வருடங்களுக்குமுன் ஒரு தமிழ் மாணவி கனடாவில் காணாமல் போயிருந்தாள் . பல்லினமும் தொழில் புரியும் அலுவலக இடைவேளைகளில் பேசும்போது அவள பற்றிய பலவிதமான ,சகிக்கமுடியாத, காது கொடுத்து கேட்கமுடியாது பல விதமான செய்திகளைஎம் தமிழர் அவர்களுக்கு விதைத்திருந்தனர்.கடைசியில் அவை எதுவும் உண்மையில்லை.
    பின்னர் ஒருசமயம் சீன மாணவி ஒருவர் காணாமல் போயிருந்தாள்.அங்கு வேலை செய்யும் சீன நாட் டவர் எவரிடமும் கேட் டால் ''I don't know '' தான் பதிலாக இருந்தது எவ்வளவு வித்தியாசம் பாருங்களேன்.
    கூடும் இடங்களில் அடுத்தவர்களை பழிப்பதும்,குறைவாகப் பேசுவதையுமே நம்மவர் வளர்த்து வருகின்றனர்.ஆனால் அவர்கள் பேச்சு general knowledge க்குள் அடங்கியிருக்கும்

    ReplyDelete