தமிழ் மண்ணை ஆண்ட தமிழ் பேசிய மன்னரெல்லாம்....



உலகெங்கும் தமிழன் உள்ளான்; ஆனால் அவனுக்கென்று ஒரு சொந்த நாடும்  இல்லை. தமிழன் தனை தானே ஆள நினைப்பதுவும்  தவறு இல்லை.  அதற்குச் சாதகமாக தமிழர் என்றுமே முனைந்ததில்லை என்பதே பழைய வரலாறு.
நாம் எல்லோரும் நமக்கு பழைய பெரும் பெருமைகள் இருப்பதாக அடிக்கடி பேசிக்கொண்டு இருந்து நம்மை நாமே சந்தோசப்படுத்திக்கொண்டு இருக்கலாம். ஆனால், நாம் நீண்ட காலமாகவே, சொந்த மண்ணிலேயே ஆளப்படுபவர்களாகவே வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்ற விடயம் கசப்பானதாக இருந்தாலும் அதுதான் உண்மையாகும். நிகழ்வுகளின் அடிப்படையில்  இனிமேலும் நமக்கு என்று ஒரு நாடு வருமோ என்பது சந்தேகத்திற்குரியதே!

கண்டியின் கடைசி அரசன்  விக்கிரம ராச சிங்கன், இலங்கையின் கண்டி, திருகோணமலை, அம்பாந்தோடடை ஆகியவற்றை உள்ளடக்கிய கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் ஆக்கிரமிக்கும் வரை ஆண்ட 'தமிழ்' பேசத் தெரிந்த   இவர் மதுரை அரச குடும்ப நாயக்க வம்சத்தைச் சேர்ந்த அரசன். அவர் ஆட்சியில்  சிங்களத்தோடு தமிழையும் அரச கரும மொழியாக அமுல் படுத்தினார். இவர் ஒரு தீவிர சைவ சமயத்தவராக இருந்துகொண்டு பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஓயாது உழைத்தார்.  

ஆனால் ஓர் உண்மை தெரியுமோ? எப்படி மலையாள எம். ஜீ. ஆர்., கன்னட ஜெயலலிதா தமிழ் நாட்டை ஆண்டார்களோ, அதேபோல  இந்த நாயக்கர்கள் எல்லாம் தமிழ் மொழி பேசும் இடங்களை ஆண்ட, தமிழ் பேசும் தெலுங்கு நாட்டவர்கள் என்பது மறுக்கப்பட வில்லை. இவரின் இயற்பெயர் கந்தசாமி நாயுடு!  ஆங்கிலேயருக்கு முன்பிருந்தே நாம் பிற இனத்தவர்களால் அடிமைப் படுத்தப் பட்டுள்ளோம். தற்போதும் அது தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

தமிழ் பேசும் இடங்களில், மக்கள் 15000 வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருப்பதாக ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியும்  2500 வருட காலம் பழைமை வாய்ந்தது என்பதும் உண்மை
காலம், காலமாக சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளுடன் அரசாண்டனர். சேர நாடடவர் இரண்டும் கலந்த புதிய மொழியான மலையாளம் பேசத் தொடங்கினர்
மற்றைய திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம் என்பன சமஸ்கிருதம், பிரக்ரிட் மொழிகளில் இருந்து உருவாகியவை. (தமிழில் இருந்து அல்ல; அவர்கள் தமிழரின் வழித்தோன்றல்களும் அல்ல!)

பின்னர், தமிழ் பேசும் இடங்களை, களப்பிரர் என்ற, பௌத்த, சமண சமய (மலை?}சாதியினர் 350 வருடங்கள் ஆண்டனர்.தொடர்ந்து (வட மேற்கு இந்திய, தெலுங்கு அல்லது  கர்நாடக) பல்லவர் 500 வருடங்கள் அரசாண்டனர்
மீண்டும் சோழர் ஆதிக்கம் பெற்று தமிழ் நாடு, ஆந்திரா, இலங்கையின் ஒரு பகுதி, மாலை தீவு வரை அரசாண்டனர். இவர்கள், தமிழும், சமஸ்கிருதமும் கதைத்தார்கள். இவர்களின் வம்ச மூலம் அறியப்படவில்லை. தமிழாய் இருக்க சான்றுகள் உள்ளன
பின்னர் சிறிய காலத்திற்கு கன்னட, தெலுங்கு, சம்ஸ்கிருத மொழி பேசும் வியஜ நகர சாம்ராச்சியம் இங்கு உருவானது.
பின்னர், வட இந்தியாவை ஆக்கிரமித்த முஸ்லீம் அரசர்கள் தென் நாட்டினுள் நுழைய முடியவில்லை. என்றாலும் வியாபார நோக்கத்தில் வந்த பிரித்தானியர்கள் முழு இந்தியாவையும் 100 வருடங்களாக ஆண்டனர்.

ஆனால், மொழிவாரி, இனவாரியாக இருந்த பல இராச்சியங்களையும், நாடுகளையும் தம் வசதிக்காக, ஆயுத பலத்தால் ஒன்றிணைத்த ஆங்கிலயர், தாம் செல்லும்போது பழையபடி பிரித்து விட்டுச் செல்லாது, அதிகாரத்தை பெரும்பான்மைச் சமூகத்திடம் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்தியாவில் 41% ஹிந்தி பேசுவோர்களால் மிகுதி 59% வீதமானவர்கள் ஆளப்படுகிறார்கள். இலங்கையில் 75% சிங்கள மொழி பேசுபவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு (தமிழ் தலைவர்களின் முயற்சியினாலும்) கொடுக்கப்பட்டது. இதனால், மேற்கு இலங்கை தமிழர் இப்போது தமிழ் பேசுவதில்லை. கிழக்கிலோ மற்றைய இனத்தவர்களால் நிரப்பப்பட்டு  கால் வாசி  ஆகிவிட்டோம். தமிழ் பேசிய இப்போது முஸ்லிம்கள் சிங்களம் பேசுகின்றார்கள்.

தென் ஆப்பிக்காவிலோ, பிஜி தீவுகளிலோ தமிழை ஹிந்தி மொழி ஆக்கிரமித்துக் கொண்டு தமிழை அழித்து விட்டது. மொரிசியஸ், சீசெல்ஸ் தீவுகளில் வயோதிபர்கள் சிலர் தமிழ் பேசிக்கொள்வார்கள்.
புலம் பெயர் நாடுகளில் இன்னும் 30 வருடங்களில் நம் 'தமிழர்கள்' அந்தந்த நாட்டு மொழியை மட்டுமே பேசுவார்கள். தமிழ் நாட்டிலே 100 வருடத்தில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருக்கும்.

இக்காலத்தில் தமிழன் வாழும் இடம் எல்லாம் வெறும் கழிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட  வறண்ட இடங்களாகவே இருக்கின்றன. மலை வளமும், நதி வளமும் நிறைந்த பசுமை கொண்ட நிலங்களை எல்லாம் மற்றையோர்கள் எடுத்துக்கொண்டு, நம்மவர்கள் பாலை வனம் போன்ற பகுதிகளுக்கு விரட்டப்பட்டு இருக்கின்றார்கள்  என்றுதான் நம்பக்கூடியதாக இருக்கிறது.

முடிவில், ஒரு நாளும், எந்த இடத்திலும், தமிழன் ஆளும் தமிழ் பிரதேசம் என்று ஒன்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஒன்றுமே இல்லை என்றுதான்  சொல்லவேண்டும்.

தமிழன் அடிமையாகவே வாழ்வான். வேற்று மொழி அரசுகளை விரும்பி ஏற்றுக்கொள்வான்; பேசும் மொழியையும் அவாவுடன் மாற்றுவான். அது இரத்தத்தில் ஊறி விட்டதோ,என்னவோ?

நாம் தமிழின் பழைய சரித்திரத்தைப் பேசிக்கொண்டிருந்து, ஒரு காலத்தில் தமிழையே சரித்திரமாகப் படிக்கும் காலம் வெகு விரைவில் வரும்.

அச்சரித்திரத்தில், தமிழர்களுக்குத் தமிழ் தேசம் உருவாக்க முனைந்த தமிழ் பேசும் தமிழர்களின் வரலாறும் இடம்பெறக் கூடும்.

சந்திரகாசன் செல்வதுரை

No comments:

Post a Comment