நீங்கள் விடுமுறை என்ற சொல்லை கேட்கும் பொழுது, உங்களுக்கு பொதுவாக தோன்றுவது கடையில் பொருட்கள் வாங்குதல், விருந்துகள், மலிவு விற்பனைகள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் சிறப்பு இடங்களுக்கு போதல் ஆகும். ஆனால் உண்மையில் பெரும்பாலான விடுமுறைகள் எமது பெருமைக்குரிய பாரம்பரியத்தை கொண்டவை, ஆனால் இன்று அவை வணிகமயமாக்கப்பட்டு (commercialized), எம் முன்னோர் எமக்கு தந்த மரபு, மிக அற்பமாக மாற்றப் பட்டு விட்டது (trivialized). இதனால் அந்தந்த விடுமுறையின் உண்மை அர்த்தம் மறந்து போகிறது. பாரம்பரியம் என்பது எமது வாழ்வில் பலவற்றை உள்ளடக்கியது. ஏனென்றால் நாம் எல்லோரும் எமது எமது குடும்பங்களில் பிறந்தோம். அங்கு தான் பாரம்பரியம் உருவாகிறது. தலை முறை தலை முறையாக குடும்பத்தில் கடத்தப்படும் சடங்கு அல்லது மரபு தான் (ritual or custom )
பாரம்பரியம் ஆகிறது.
நாம், எமது குடும்பத்தின் பாரம்பரியத்தை தெரிந்தும் அதில் பங்கு பற்றியும் குழந்தை பருவத்தில் இருந்து வளர்கிறோம். எமது நோக்கமும் நம்பிக்கையும் நாம் அறிந்ததை பங்கு பற்றியதை எமது பிள்ளைகளுக்கு ஒரு நாள் கொடுப்போம் என்பதேயாகும். இந்த பாரம்பரியத்தையே நாம் கவனத்தில் எடுக்க வேண்டும், ஏனென்றால், அவை எமக்கு இடையில் ஒற்றுமை உணர்வு ஒன்றை (feeling of togetherness) ஊட்டுகிறது. அதிகமாக ஆண்டு முழுவதும் எதோ ஒரு பாரம்பரியத்தை குடும்பங்கள் பெரும்பாலும் கொண்டிருந்தாலும், விடுமுறையில் கொண்டாடும் சடங்கே நினைவில் கூடுதலாக நிற்கிறது. அது மட்டும் அல்ல, ஆய்வுகள் இதை மெய்ப்பிப்பதுடன், இவையே தலை முறைகளுக்கு இடையில் மிக நெருங்கிய ஆரோக்கியமான உறவு பாலங்களை இணைக்கின்றன எனவும் கூறுகிறது (Research shows that holiday traditions are important in building
strong healthy family relationships between generations).
எனவே சிறுவர்கள் பொம்மைகள் மற்றும் பரிசுகளை விட, இந்த அவர்களின் சிறப்பு அனுபவங்களையே, கூடுதலாக நினைவில் கொள்வார்கள் எனவும் சுட்டிக் காட்டுகிறார்கள். உங்கள் குடும்ப பாரம்பரியம் மிகவும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் நேரம் ஒதுக்கி அதைப்பற்றி உங்கள் பிள்ளைகளுடனும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனும் கதையுங்கள், அப்படியான நடவடிக்கைகளிலும் அதை திட்டமிட்டு ஒழுங்கு படுத்தலிலும் குழந்தைகளை இணைத்து செயல் படுங்கள் (Include the
children in planning and carrying out the special activities). இது அவர்களுக்கு பெருமையையும் மற்றும் தாம் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்ற உணர்வையும் கொடுக்கும். அது மட்டும் அல்ல தங்கள் குடும்பம் ஏன் இந்த சிறப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என்பதன் விளக்கத்தை அறியவும் உதவுகிறது. மேலும் இந்த பாரம்பரியம் மத அல்லது பண்பாட்டு மரபுரிமையின் (religious or
cultural heritage) ஒரு பகுதியாகின், இது இளம் சந்ததியினருக்கு, அவர்களின் குடும்ப வரலாற்றின் மேல் ஒரு உணர்வை கொடுக்கும்.
சிலவேளை எமது குடும்பம் மாறும் பொழுது, எமது பாரம்பரியமும் எம்முடன் மாறுகிறது. அதில் தவறில்லை, ஏனென்றால், நீங்கள் இன்னும் அந்த குடும்ப ஒன்று கூடலை ஏற்படுத்தி, அந்த சிறப்பு விருந்தையும் நடத்தலாம், ஆனால், இடம் அல்லது உணவுப் பட்டியல் (menu) காலப்போக்கில் மாறுபடலாம், அல்லது பெரும்பாலும் களைந்துவிடும் பாத்திரங்கள் (disposable dishes), முன்னைய பீங்கான் பாத்திரங்களுக்கு (chinaware) பதிலாக பாவிக்கலாம். எது எப்படியாயினும், இங்கு முக்கியமானது, நீங்கள் குடும்பமாக ஒன்று கூடி, உங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்தலும் குடும்ப மரபுகள் மற்றும் மதிப்புகளை இளம் சந்ததியினருக்கு கொடுப்பதும் ஆகும்.(The important thing is that you get together as a family to share
memories and pass on the family traditions and values).
பாரம்பரிய நம்பிக்கைகள் சிலவேளை அல்லது பலவேளை உண்மைகளோடு, அறிவியலோடு முரண்படுகின்றன. அவை சிலவேளை தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களையும் கூட மக்களை செய்யும் படி ஊக்குவிக்க முடியும். பாரம்பரியம் என்பதற்கு வாய்மொழியாக அல்லது எழுத்து மூலமாக கடத்தப்பட்டவை அல்லது பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் அல்லது நிலைநாட்டப்பட்ட முறைகள் அல்லது செயல்கள் என கூறலாம். எனவே பாரம்பரியம் உண்மையானதாக இருக்கலாம் அல்லது பொய்யானதாக இருக்கலாம், நன்மையானதாக இருக்கலாம் அல்லது தீமையானதாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது. உதாரணமாக, பிரிட்டிஷ் தத்துவஞானி பர்ட்ரன்ட் ரஸல் (Bertrand Russell),
16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோப்பர்னிக்கஸ் (Nicolaus
Copernicus) போன்ற அறிவியலாளர்களை பாராட்டுகிறார், ஏனென்றால் அவர்கள் குருட்டுத்தனமான பாரம்பரிய நம்பிக்கைகளை தைரியமாக உடைத்து, பண்டைய காலங்களிலிருந்து நம்பப்பட்டு வந்தவை எல்லாம் உண்மை இல்லை என்றும், பொய்யானவையாகவும் இருக்கக்கூடும் என்ற நிரூபித்ததால் ஆகும். எனவே மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும். சரியானவையை, தீங்கற்றவையை நாம் தெரிந்து எடுத்து, அந்த பெருமை தரும் பாரம்பரியங்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும், மற்றவையை எறிந்து விட வேண்டும்.
நான் சில மரபையும் பாரம்பரியத்தையும், எனக்கு தெரிந்த காரணங்களையும் தொகுத்து இந்த நீண்ட கட்டுரையில் தந்துள்ளேன், எவரையுமோ அல்லது எந்த மத நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இது எனது உணர்வும் கருத்தும் ஆகும் (These are my personal feelings and views only). எனவே நாம் ஒரு பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரியங்களின் பின்னணியை, ஒரு நேர்மையான வழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நம்புகிறேன். (understanding the
rationale behind them in a positive way). மற்றது நான் எல்லா பாரம்பரியங்களையும் இங்கு உள்ளடக்கவில்லை, எனவே விடுபட்டவையை, அல்லது நீங்கள் சுட்டிக்காட்டுபவையை இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் தொடருவேன், எனவே இது இந்த கட்டுரையின் முடிவல்ல.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk
]
தற்காலிகமாக முடிவுற்றது
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்
.
No comments:
Post a Comment