"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 29



பரதநாட்டியம் தமிழரின் பாரம் பரிய நடனமாக பண்டைய தமிழக ஆலயத்தில் இருந்து வளர்ச்சி அடைந்து, இன்று தமிழரின் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளத்தை சித்தரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. இது முன்னைய காலத்தில் தேவதாசிகளால் அல்லது கோயில் நர்த்தகிகளால், ஆலயத்தில் ஆண்டவனுக்கு நன்றியை செலுத்துமுகமாக, ஆலயத்தின் புனித இடத்தில் நடை பெற்று, நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து, பரத நாட்டியமாக முழுமை அடைந்தது எனலாம். அது மட்டும் அல்ல இந்த ஆண்டவனுக்கு முன்னால் ஆடும் புனித நாட்டியம் தொடர்ந்து எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் தொடரும் பொருட்டு அவர்கள் ஒரு வித துறவி வாழ்க்கையையும் கடைபிடித்தனர். இவர்கள் மற்றும் பல நாட்டிய தாரகைகளுடன் அரச சபையில் பல்வேறு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு, அரசனால் அழைக்கப்பட்டு பெருமை படுத்தப் பட்டார்கள். இந்த  நாட்டியம் ஒரு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காகவும் அதே வேளை அது தமிழரின் பண்பாட்டை உள்வாங்கி தன்னகத்தே கொண்டும் [Dance is embodied culture] இருந்தது. 

புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப் பட்டதாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. என்றாலும், அதேவேளை பரதம் என்ற சொல், - பாவம், - ராகம், - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது ,  "" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகிறது. தமிழர்களின் ஆதியும், இன்று வரை குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும்  சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது, பெருமை படத்தக்கது. நமது கலை கலாச்சாரத்தை எத்துனை விதமாக கூறினாலும், நடனத்தின் மூலாமாக சொல்லும் போது அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனம் தான் பரதநாட்டியம் ஆகும். 

தமிழரின் தொன்மையான நாட்டியமான பாரத நாட்டியத்திற்குள் அவர்களின் வரலாறும் நடை முறை பழக்கங்களும் [history and ethos]  இணைக்கப் பட்டு, அவை ஒரு மேடையில் ஆடுகையில், பார்ப்பவர்களுக்கு அவர்களின் பண்பாட்டு கூறுகள் சென்றடைகின்றன. அவர்கள் வெளிப்படுத்தும் அசைவும் இசையும் உலகிற்கு ஒரு கதையை- தமிழரின் நம்பிக்கைகள், சூழல், பொருளாதாரம், மற்றும் அவர்களின் சமூக மதிப்புகளை வெளிப்படுத்து கின்றன [The movements they use and the music are meant to tell a story to the rest of the world – a story about their beliefs, the environment, their economy, or even their social values]. எனவே பரத  நாட்டியம் எமது இளம் சந்ததியினருக்கு அறிமுகப் படுத்துவதால் அவர்களுக்கு தாம் யார் ? மற்றவர்கள் யார்? என்ற வேறுபாடு தெளிவாக தெரியும் என்று நம்புகிறேன். 

கலை எமது வாழ்வின் ஆரம்பத்திலேயே எம்முடன் கலந்தது. நாம் நாடோடியாக திரிந்த பொழுது பாடினோம் ஆடினோம், வேடுவராக இருந்த பொழுது குகையின் சுவரில் ஓவியம் வரைந்தோம், உதாரணமாக, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வீரர்களின் கதையில் இருந்து அவர்களை மகிழ்விக்க நடித்து காட்டியது முதல் கலை எம் வாழ்வில் ஆழமாக பதிந்து விட்டது எனலாம். ஒரு மனிதனுக்கு கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், அதை நாம் கூர்ந்து பார்த்தால், எமக்கு பல பல வர்ணங்கள் அங்கு பளபளக்கும். உதாரணமாக வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, வாழ்வை, கலை பிரதி பலிப்பதை நாம் உணர்வோம். இன்றைய இயந்திர வாழ்வு எம்மை சூழும் பொழுது, எமக்கு 'இயல் இசை நடனம்', ஒரு புது தெம்பு கொடுக்கிறது. அது மட்டும் அல்ல சூதும் வஞ்சகமும் எம் வாழ்வை கவ்வி, நாம் யார் என்பதை மறக்கும் பொழுது, இந்த கலை எமக்கு துணை நின்று, எம்மை யார் என அடையாளம் காட்டுகிறது. இது தான் பாரம் பாரிய கலையின் பெருமை எனலாம். இப்படியான எல்லா கலைகளிலும் நாட்டியம் முறையான அசைவுகளை கொண்டு நாடகம் மாதிரி மற்றவர்களின் கண் முன் அரங்கேறுவதால் அவர்களின் மனதில் இலகுவாக பதியக்  கூடியது. எனவே பண்பாட்டு நடனம் [Cultural Dance] ஒரு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இது எங்கள் வழி முறை மூலம் மற்றவர்களுக்கு எங்கள் பண்பாட்டில் எவை எவையை நீங்கள் அறிய வேண்டும் என்பதை எடுத்து உரைப்பதாகும். அது மட்டும் அல்ல, இதனால் மற்றவர்கள் எங்கள் மரபுகள், பாரம்பரியங்கள்  மற்றும்  சமூக நீதிகளை [our customs, traditions and norms] அறிந்து மதித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வழி சமைக்கிறது

அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப்பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார். பரத  முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார். இவ்வாறு மிகத் தொன்மை வாய்ந்ததும் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன்னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். பண்டைய இலக்கிய நூல்களில், மரபு நாட்டிய கலையின் பூரண நூலாக கருதப்படும் சிலப்பதிகாரம், இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் எனலாம். என்றாலும் பரத நாட்டிய சாஸ் திரத்திற்கான அடித்தளமாக சாத்தனார் என்பவர்  எழுதிய கூத்த நூல் அதிகமாக இருந்து இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். கூத்திற்கு தரும் விளக்கமாக, ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து, என கூத்த நூலில் வரும் பகுதி மிக அழகாக அமைந்துள்ளது. இது ஒரு மிக ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த  மறைபுதிரான அடிகளாகும். இந்த  2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அடிகள் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல அடிகலாகவே இருக்கின்றன. மேலும் சங்க இலக்­கி­­மான, பத்­துப்­பாட்டு, எட்­டுத் ­தொ­கையில், நாட்­டிய குறிப்­புகள் இருப்­பதையம்  காணலாம். உதாரணமாக, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பதிற்றுப்பத்தில் ஆட்டக்கலை குறித்த விளக்கம் வெகுச்சிறப்பாக அமைந்திருப்பதை பதிற்றுப்பத்து.51; 17-27, பதிற்றுப்பத்து.47, 5-8 போன்ற அடிகளால் அறிய முடிகிறது. நெய்தல் நிலமான கடற்கரையினூடே பனஞ்சோலைதனில் மணல் திட்டுகள் சூழ்ந்த-பள்ளத்தாக்குகள் நிறைந்த-ஒரு மணல் பரப்பில்-ஞாழல் மரப்பூக்களின் வாசத்தோடு ஆடுமகள் விறலி பீடுநடை போட்டு-வட்ட வடிவ வலை யாட்டத் தினை நிகழ்த்திய விதம் இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களை உடைய விறலி-புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், வீழ்ந்தும், எழுந்தும், உருண்டும், சுழன்றும் ஆடிய ஆடல் பாம்பிற்கு இணையாகவும் கூறப்பட்டுள்ளது. 

வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாகுடன் கமழச்
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை இலங்கு எயிற்று
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள் வேல் அண்ணல் ” [பதிற்றுப்பத்து 51; 17-23]                             

சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
*நன் நுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின் 
அவன் உரை ஆனாவே.[பதிற்றுப்பத்து 47, 5-8]

என்றாலும் இந்த தேவதாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட  கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்பான் பண்பாட்டிற்கு போகவேண்டி இருக்கிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்கள் வெவ்வேறு நாட்டியத்தின் முத்திரைகளை காட்டுகின்றன. இவைகளில் மிகவும்  பிரபலமானது நிர்வாணமான ஒரு நடன மாது. அவளின் இடுப்பு கவர்ச்சி யூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன்பிதுங்கி] இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் நடனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதற்கான ஒரு சான்றாகும். இந்த புகழ் பெற்ற சிந்து சம வெளி கைவினை பொருள், கிட்டத்தட்ட 4 அங்குல உயரத்தை கொண்ட செம்பு உருவம் ஆகும். இந்த ஒய்யார வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது, அவள் உடையில்லாது தனது நீண்ட  தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. எம் நாட்டில் இன்று உள்ள பல நாட்டிய கலைகளில் இந்த சிலையின் கம்பீரமான நிலையை காணலாம். வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும் தமிழரின் சம்பிரதாயமான நாட்டிய அபிநயத்தில் ஒன்றாகும். இந்த பண்டைய உலோக சிற்பம் சிறிதாக இருந்தாலும் பல தகவல்களை எமக்கு தெரிவிக்கிறது. பல சிறந்த கற்றறி வாளர்கள் இந்த உலோக வார்ப்பு ஒரு தேவதாசியை அல்லது ஒரு புனித பரத்தையை பிரதிநிதி படுத்துவதாக கருது கிறார்கள். அந்த பெண் சிலை அம்மணமாக இருப்பதாலும் மருட்டுகின்ற ஒரு நாட்டிய தோரணையில் இடுப்பில் கையையும்  தளராத் தன்னம்பிக்கையை முகபாவத்தில் காட்டுவதாலும் ஒருவேளை அவர்கள் அப்படி கருதியிருக்கலாம் என கருதுகிறேன். பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள், முகபாவங்கள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்டும், கை முத்திரைகள் வழி கண் செல்லும், கண்கள் செல்லும் வழி மனம் செல்லும், மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர், மிக அழகாக, மிதிலைக் காட்சிப் படலம், எண்:572 இல்,"கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர".எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, நாட்டியத்தில் கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் வேலை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு நர்த்தகிக்கு அசைவு உடலில் மட்டும் முக்கியமன்று மன உணர்ச்சியிலும் தான் என்பது தெரிகிறது. இது இந்த குறிப்பிட்ட சிந்து வெளி நடன மாதில் வெளிப்படுவதை நீங்கள் இலகுவாக காணலாம். மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங் கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்:157-159 இல் "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் "என்கிறார் அதாவது, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி என்கிறார். 

எனவே ஒவ்வொரு தமிழனும் அவர்களின் மரபு பண்பாட்டு நடனமான பரத  நாட்டியத்தை, மத காரணங்களுக்காக அல்லாமல், தங்களை, தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக கடைபிடிக்க வேண்டும் என்று நம்புகிறேன் [I believe every Tamils should know their traditional dance form, not for religious reasons but as a way of expressing themselves]. நீங்கள் ஏதாவது காரணத்திற்காக கொண்டாட வேண்டுமாயின், அந்த கொண்டாட்டத்தை மேலும் வலுவூட்ட , சிறப்பு படுத்த நடனம் கட்டாயம் ஒரு வழியாகும். முன்பு பலரும் பரதநாட்டியம் பயின்றனர், ஆனால் இன்று அப்படியல்ல, சினிமாவில் மிகவும் பிரபலமான பாலிவுட் நடனம் [Bollywood dancing] அந்த இடத்தை எடுத்து- எமது பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக கடத்தப் பட்டு, படிப்படியாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து தனது புனிதத் தன்மையை [sacredness] நிலை நிறுத்தி, எமது தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாகி, தமிழ் இனக் குழுவின் அல்லது தமிழகத்தின் பரம்பரை அடையாளத்தை [traditional identity] பிரதிநிதித்துவம் படுத்திய - அந்த பரதநாட்டியத்தை மறக்க தொடங்குகின்றனர். எனவே நாம் எமது அடுத்த தலை முறைக்கு இதை கொண்டு போக தீவீரமாக செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
ஆரம்பத்திலிருந்து வாசிக்க க் கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும் 
பகுதி: 30 வாசிக்க கீழே அழுத்தவும் 
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 30

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]

No comments:

Post a Comment