"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 27





இறுதிக் கிரியை அன்றும் இன்றும்
மரணம் ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைக்கும் ஒரு இயற்கை நியதி ஆகும். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம்  30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது

இது, இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுக்கிறது.


திருமூலர் தமது திருமந்திரத்தில், மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்து விடுகிறார்களாம் என்று தமிழரின் மரபை அன்று கூறுகிறார். இன்றும் கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை.


"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!"
[திருமந்திரம்]

பண்டைய தமிழக தமிழர்கள், இறந்தவர்களை கையாளும் மரபு ஒரு கவர்ச்சிகரமாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் வயது முதிர்ந்து, அசைவதை நிறுத்தி, கண் பார்வை, காது கேட்டல் போன்றவற்றை இழக்கும் போது,
இவர்களை கிராமத்திற்கு வெளிய ஒரு ஒதுக்கு புறத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மதமதக்கத் தாழி [முதுமக்கட்டாழி] என அழைக்கப்படும் ஒரு சின்ன கல் வீட்டில் அவர்களை விட்டு, அவர்களின் குடுபத்தில் இருந்து ஒரு பெண் தினம் அங்கு சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து கவனிக்கிறார். இப்படி அவர் சாகும் மட்டும் தொடர்கிறது. அவர் இறுதியாக சாவை தழுவும் போது, அவரின் குடும்பம் முதுமக்கள் தாழி என்ற பெரிய மட்பாண்டம் ஒன்றில் அவரை உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரின் முக்கிய உடமைகளையும் சேர்த்து உள் வைத்து அடக்கம் செய்கிறார்கள். இந்த தாழி [urn/pot] பிரத்தியேகமாக தோண்டிய குழியில் புதைக்கப்பட்டது. பெரிய கற்பலகை [பாறை] அதன் மேல் மூடி வைத்து, மண்ணால் மூடப்பட்டது. இது குப்பை கிளரும் விலங்குகள் அந்த இறந்த மனிதனின் உடலை வெளியே எடுப்பதை தடுப்பதற்கு ஆகும். அத்துடன் ஒரு சின்ன நடுகல் அங்கு நாட்டுகிறார்கள். இது அந்த அடக்கம் செய்யப்பட்ட இடைத்தை அடையாளம் காணவும், வருடாந்த நினைவு சடங்குகளை அங்கு நிறைவேற்றுவதற்கும் ஆகும். மற்றொரு முறையில் அந்த தனிப்பட்ட நபர் இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் [குடத்தில்] இட்டுப் புதைத்துள்ளார்கள். அத்துடன் சிலவேளை தனிப்பட்ட நபர் இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைத்தும் உள்ளனர். பீமண்டபள்ளி கிராமத்தில் 8 அடி நீள ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய சவப்பெட்டியை நினைவூட்டுகிறது. இங்கு எலும்புக்கூடு காணப்பட்டது. அந்த இறந்த மனிதர் மல்லார்ந்த படுக்கை நிலையில் உள்ளார்.


இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையரை அல்லது தமது குடும்பத்தில் வாழும் முதியோரை, எப்படி அன்று சின்ன கல் வீட்டில் விடார்களோ, அப்படியே இன்றும் முதியோர் இல்லத்தில் விடுவதை காண்கிறோம். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அன்று அவர் குடும்பத்தின் ஒரு பெண் தினம் அங்கு சென்று அவரை கவனித்தார். எனவே தனிமை அவரை வாட்டி இருக்காது. ஆனால் அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை இன்று அதிகமாக மறந்து விடுகிறார்கள்.
 "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்...  ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... "
இப்படி அந்த ஜீவன் தவிக்கிறது, ஏங்குகிறது இன்று !. மேலும் பண்டைய தமிழகத்தில் எப்படி இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை விரிவாக தெளிவாக ஒரு வரிசை கிரமத்தில் மணிமேகலையும் (6-11-66-69) சொல்கிறது,

"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்"


பிணங்களைச் சுடுவோரும் [cremators] வாளா இட்டுப்போவோரும் [leave dead body to decay] தோண்டப்பட்ட குழியி லிடுவோரும் [placed into a hole dug specifically for the burial], தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் [entomb the dead body in small low lying chambers] தாழியினாலே கவிப்போருமாய்ப் [embalm the dead body in burial urn and cover mouth] பல்வேறு வகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் என்று  ஐந்துவகையில் இறந்த உடல் அடக்கம் செய்வதை இந்த பாடல் எடுத்து கூறுகிறது.


மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கும் சடங்குகள் அவன் இறந்த பின்பும் இங்கு தொடர்வதை காண்கிறோம். இறந்தோருக்காகச் செய்யப்படும் சடங்குகளே இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என வழங்கப்படுகின்றன. நாட்டுப் புறங்களில் ஒருவர் இறந்தவுடன் நிறை மரக்காலில் நெல்லை நிரப்பி அதன்மேல் விளக்கேற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. இறந்தவரின் உயிர் ஒளியாக - சோதியாக மாறியுள்ளது என்பதைக் குறியீடாய் இச்செயல் உணர்த்துகிறது.


இறப்புச் சடங்கில் கொள்ளி வைத்தல் என்பது மிக முக்கியமான சடங்காகும். சுடுகாட்டில் உடலுக்கு எரியூட்டும் முன் இறந்தவரின் மகன் நீர் நிறைந்த கலயத்தைத் தோளில் வைத்து மூன்று முறை உடலை வலம் வந்து குடம் உடைத்துக் கொள்ளி (தீ) வைக்கும் நிகழ்வே கொள்ளி வைத்தல் என்பதாகும். தாய் இறந்தால் தலைமகனும் தந்தை இறந்தால் இளைய மகனும் கொள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. ஆதி மனிதர்களிடம் முதன்முதலில் தோன்றிய சடங்குகள் ஈமச் சடங்குகளே என்று கூறுவதுண்டு. இறந்தோரைப் புனிதப் படுத்துவதற்காகவும் இறந்தோரால் எவருக்கும் எத்தகைய தீங்கும் விளையக் கூடாது என்பதற்காகவும் இறப்புச் சடங்குகள் பொதுவாக கடைப்பிடிக்கப் படுகின்றன எனலாம்.


ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை பெரும்பாலும் தொன்மையான பழங்குடிவாழ்க்கையிலிருந்து எழுந்தவை. சில நடைமுறைவசதிக்காக உருவாக்கப்பட்டவை, சில குறியீட்டு ரீதியானவை. அவை நம்மை நம்முடைய தொன்மையான இறந்த காலத்துடன் இணைக்கின்றன. இந்த வகையில் நீத்தார்சடங்குகள் ஒரு குறியீட்டு நிகழ்வுகளாகும். அவற்றின் குறியீட்டுச் செயல்பாடுகளை உணர்ந்து செய்வது நம் உள்ளத்தை மலரச்செய்கிறது. வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கின்றது. அவை இல்லையேல் வாழ்க்கை வெறும் அன்றாட நிகழ்வுகளால் ஆனதாக மட்டும் எஞ்சிவிடும். எனவே சடங்குகளின் தேவையை அவை அளிக்கும் பயன்களைக் கொண்டு மட்டும் மதிப்பிட்டால் போதும்.ஆனால் சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றில் ஒரு கவனம் தேவை. பல ஆசாரங்களும் சடங்குகளும் சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டம் சார்ந்தவை. ஆகவே அவற்றில் இன்று மானுட சமத்துவம் மனித உரிமை போன்றவற்றுக்குச் எதிரான பல இருக்கலாம். அத்தகையவற்றை முழுமையாக நிராகரிப்பது அவசியம். என்றாலும் நடைமுறைச் சடங்குகளும் மங்கலச் சடங்குகளும் அழகியல் சடங்குகளும் குறியீட்டுச் சடங்குகளும் இல்லாமல் இன்று மனிதன் வாழ்வது கடினம். நாம்  பழைய சடங்குகளை தவிர்த்தாலும் கூட புதியவை வந்து சேருகின்றன. உதாரணமாக, மலர்ச்செண்டுகளை அளிப்பது, நாடா வெட்டி திறந்துவைப்பது, படத்திறப்பு செய்வது போன்ற எத்தனை நவீனச் சடங்குகளை நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை  ஆகும்

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 28 வாசிக்க 


ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக..

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]

No comments:

Post a Comment