அறளை பெயர்தல்



வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல்


உடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.
அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

 முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.
புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.
எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.
உடற் பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப் பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த நடைப் பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.

65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்படனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter)   கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது.

எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.
ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.

ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.

வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுப்பாது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.
முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றை வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்தததை நினைவுபடுத்தலாம்.

கம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.

நன்றி-வைத்தியர் முருகானந்தம் 

0 comments:

Post a Comment