உடல்தான் காரணமா?
உடம்பு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும் இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.
‘உடம்பு பெலயீனமாகக் கிடக்கு. களைப்பாக இருக்கு. பெலத்திற்கு என்ன சாப்பிடலாம்? என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம்?’ எனக் கேட்பார்கள்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக் காரணமா?
இத்தகைய களைப்பிற்கு பெரும்பாலும் கடுமையான நோய்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவரது தவறான பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமற்ற உணவுமுறைகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.
தூக்கக் குறைபாடு
முக்கிய பிரச்சனை போதிய தூக்கம் கிடைக்காததாக இருக்கக் கூடும். சிவராத்திரி முழிப்புப் போல இரவிரவாக விழிப்பிருந்தால்தான் மறுநாள் களைப்பு வரும் என்றில்லை. உங்களுக்கு தினமும் தேவைப்படும் தூக்கத்தில் ஒருமணி நேரம் குறைந்தால் கூட மறுநாள் சக்தி இழந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.
உங்கள் தூக்கம் குறைந்ததற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். *உதாரணமாக வேலைப்பழு காரணமாக சரியான நேரத்திற்கு படுக்கைக்க்குப் போக முடியாதிருக்கலாம்.
*படுக்கைக்குப் போனாலும் மனஅழுத்தங்கள் காரணமாக நிம்மதியாகத் தூங்க முடியாது போயிருக்கலாம்.
*வயதாகும்போது பலருக்கு குழப்பமற்ற தூக்கம் வராதிருக்கலாம்.
*அல்லது வேளையோடு எழுந்திருக்க முடியாதிருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கமின்மை மறுநாள் சோர்வைக் கொண்டுவரும்.
சோம்பேறி வாழக்கை முறை
உடலுழைப்பற்ற சோம்போறித்தனமான வாழ்க்கை முறையும் இயலாமையைக் கொண்டு வரும். போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக அவசியமாகும்.
உடற் பயிற்சி செய்வதற்கு நேரமில்லை அல்லது களைப்பாக இருக்கிறது என அதைத் தவிர்ப்பது தவறு. ஏனெனில் பயிற்சி இல்லையேல் உங்கள் உடலாரோக்கியம் கெட்டுவிடும். சிறு வேலை செய்வது கூடக் களைப்பைக் கொண்டுவரும்.
இதைத் தவிர்பதற்கு தினமும் அரை மணிநேரம் ஆயினும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள். வேகமாக நடக்கலாம், நீந்தலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். எதுவானாலும் ஒரேயடியாக 30 நிமிடங்களை ஒதுக்குவது முடியாது எனில் அதனை இரண்டு தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள். உடல் உறுதியானால் களைப்பு வராது.
போஸாக்கான உணவு
போஸாக்கான உணவையும், நீராகாரத்தையும் எடுக்காவிட்டால் உங்கள் நாளாந்த வேலைக்கான எரிபொருளை உங்கள் உடல் கொண்டிருக்காது. காலை உணவு முதற்கொண்டு போஸாக்காக எடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
எண்ணெய், பட்டர், மார்ஜரீன் போன்ற கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். நார்ப்பொருட்கள் விற்றமின், தாதுப்பொருட்கள் அதிகமான உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள். தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா, குரக்கன் போன்றவை நல்லது. பழவகைகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிறிய உணவுகள்
இனிப்புச் செறிந்த பழச்சாறுகள், மென்பானங்கள் போன்றவை நல்லதல்ல. பால், உடன் தயாரித்த பழச்சாறு போன்றவை விரும்பத்தக்கவை.
அதிகமாக வயிறு கொள்ளாமல் உண்பதைத் தவிருங்கள். சிறிய உணவுகளாக, அதுவும் கலோரிச் சத்துக் குறைந்த உணவுகளாக உண்ணுங்கள். வேண்டுமானால் 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை அவ்வாறான உணவை எடுக்கலாம்.
மதுபானம்
மதுபானம் உட்கொள்ளும்போது உற்சாகம் அளிப்பதுபோலத் தோன்றினாலும் உண்மையில் நரம்பு மண்டலத்தைச் சோர்வுறச் செய்கிறது. உட்கொண்டு பல மணிநேரத்திற்கு ஒருவரைச் சோர்வுறச் செய்யலாம். அத்துடன் படுக்கைக்குச் செல்லமுன் மதுபானம் எடுத்தால் தூக்கத்தைக் கெடுத்து அடுத்த நாளையும் சோர்வுறச் செய்துவிடலாம்.
நெருக்கீடும் மனப்பதற்றமும்
ஆயினும் இன்றைய காலகட்டத்தில் பலரின் சோர்விற்கும் களைப்பிற்கும் காரணமாக இருப்பது நெருக்கீடு நிறைந்த வாழ்க்கையும், மனப்பதற்றமும்தான். ஓய்விற்கு நேரமின்றி ஒரு பணியிலிருந்து மற்றொரு வேலைக்கு இடைவெளியின்றி ஓடிக்கொண்ருப்பவர்களுக்கு களைப்பு ஏற்படவே செய்யும்.
நேர முகாமைத்துவம்
மனத்தில் நிறைவும் சந்தோசமும் இருந்தால் களைப்பு நெருங்காது.
இதனைத் தவிர்ப்பதற்கு நேர முகாமைத்துவம் முக்கியமானதாகும்.
செய்து முடிப்பதற்கு சிரமமான பணிகளை பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள். *குழப்பங்கள் ஏற்படாமல் பணிகளை ஒழுங்கு முறையில் செய்து முடிக்க திட்டமிட்டுச் செயலாற்றுங்கள்.
பணிகளின் இடைவெளிகளில் சற்று நிதானித்து மூச்சுவிட்டுக் களைப்பாறுங்கள்.
தினசரிக் கடமைகளுக்கு மேலாக உங்களை மகிழ்வுறுத்தும் பொழுதுபோக்கில் அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.
மதிய உணவின் பின் மீதி வேலைகளைத் தொடங்கு முன் முடியுமானால் குட்டித் தூக்கம் செய்யுங்கள். அல்லது சற்றுக் காலாற உலாவுங்கள்.
அவசியமானால் காலையில் 15 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கை விட்டெழுந்து நாளாந்தக் கடமைகளை ஆரம்பியுங்கள்.
வேலைத்தள நெருக்கடி
உங்கள் வேலைத்தளத்திலும் களைப்பு ஏற்படுகிறது எனில் அது உங்கள் தொழில் சார்ந்ததாக இருக்கக் கூடும். நெருக்கடி மிக்க வேலையாக இருக்கலாம் அல்லது தொழிலில் அதிருப்தி அல்லது ஈடுபாடு குறைந்த வேலையாகவும் இருக்கலாம். திறந்த மனத்தோடு சுயமதிப்பீடு செய்து நிவர்த்தி செய்வது அவசியம்.
சகஊழியர்களுடன் நல் உறவை
சகஊழியர்களுடன் நல் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடனான உறவில் ஏதாவது உரசல் அல்லது நெருக்கடி இருந்தால் அதனைத் தீர்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
மேலதிகாரியுடனான உறவு
உங்கள் மேலதிகாரியுடனான உறவைப் பலப்படுத்துங்கள்.
அவர் உங்களிடம் எதனை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து செயற்படுங்கள்.
உங்கள் திறமைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த உங்கள் பலவீனங்களை திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய முயலுங்கள்.
மருந்துகள்
வேறு நோய்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளும் களைப்பிற்குக் காரணமாகலாம். உதாரணமாக தடிமன் தும்மலுக்கு உபயோகிக்கும் பிரிட்டோன், செட்ரிசின் போன்றவை, தூக்க மருந்துகள், பிரஸருக்கு உபயோகிக்கும் பீட்டா புளக்கர் மருந்துகளும் காரணமாகலாம். இருமலுக்கு உபயோகிக்கும் மருந்துகளில் உள்ள கொடேன் போன்ற வேறு பல மருந்துகளையும் சொல்லலாம்.
டொனிக்,
சத்துமா,
விற்றமின்
எனவே களைப்பு என்றவுடன் சத்து மருந்துகள், டொனிக், சத்துமா, விற்றமின் மருந்து ஊசி எனத் தேடி அலையாமல் காரணத்தைக் கண்டு அதனை நீக்க முயலுங்கள்.
உங்களால் முடியாவிட்டால் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப மருத்துவர்.
No comments:
Post a Comment