"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 26



லகம் தோன்றின நாள் முதல் இன்றுவரை உயிர்கள் அனைத்தும் நம் கண் முன்னால் பல்வேறு இனங்களாக இன்றும் இருப்பதற்கு காரணம் அவை அனைத்தும் ஆண் பெண்ணாக பரணமித்ததே. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிர் இனங்கள் பெரும்பாலும் உடலால் மட்டும் இணைகின்றன. ஆனால் ஆறறிவு மனிதன் மட்டுமே உடலாலும் மனதாலும் இணைகின்றன. எனவே தான் மற்ற உயிர்கள் இணைவதற்கு இனப்பெருக்கம் என்றும் மனிதன் இணைவதற்கு திருமணம் என்றும் கூறுகிறோம். இந்த மனதால் இணைதல் என்ற பண்பு மற்றவற்றில் இருந்து மனிதனை வேறுபடுத்துகின்றது. இனப்பெருக்கம் என்ற ஒரு குறிக்கோளை தாண்டி, பல்வேறு ஒழுக்கங்களை அவன் ஏற்படுத்துகிறான். எனவே அந்த ஒழுக்கங்களுடன் அமைவதே முறையான திருமண உறவு என்று கூறலாம்.

திருமணம் என்ற சொல்லில் உள்ள மணம், கூடுதல், கலத்தல் என்று பொருள் படும். அடிப்படையில் இவை இணைத்தல் என்ற விளக்கத்தை பெற்று, இது மங்கள நிகழ்வு என்பதால், ‘திருஎனும் அடையைச் சேர்த்து இருவரும் உடலாலும் மனதாலும் இணைவதை திருமணம் என்றனர் முன்னோர். இதை கரணம், வரைவு கடாதல், கற்புமணம், வதுவைச் சடங்கு, மன்றல், உடன்போக்கு மணம் என்ற சொற்களாலும் அழைத்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றைய சொல் வழக்கில் உள்ளகல்யாணம்எனும் சொல் சங்க காலத்தில் இல்லை. அதற்கு பின் நீதி இலக்கியத்தில் ஒன்றான ஆசாரக் கோவையிலும், நாலடியாரிலும்கல்யாணம்என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கடி மணம் என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. இதை பொதுவாக குடும்பத்தில் நிகழும் பெரிய மங்கல நிகழ்வாக தமிழர்கள் கருதினர். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க ஆண் வீட்டார் பெற்று கொள்ளும் திருமண முறையும் பொருள் கொடுத்தும் திறமையின் அடிப்படையிலும், போர் நிகழ்த்தியும், காதல் நிகழ்விற்கு பின்னரும் என பல வகையில் திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.


உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து எதோ ஒருவகையில் நான் குடும்பத்தன் என்பதை காட்ட தனி முத்திரை இடப்படுவது இயல்பு. அந்த வகையில் இன்று  மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால், சங்க காலத்தில், அப்படி இல்லை; தாலியைப் பற்றிய எந்த குறிப்பையும் அங்கு காண முடியவில்லை. என்றாலும் அப்படி ஒரு பழக்கம் இல்லையென்று உறுதியாக கூறிவிட முடியாது. உதாரணமாக அகநானூறு 7 இல், புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி என்ற ஒரு வரியையும், குறுந்தொகை 67 இல்,புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப், பொலங்கல வொருகா சேய்க்கும் என்ற ஒரு வரியையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். இவையே நாளடைவில் மாற்றம் பெற்று சங்கம் மருவிய சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் வருவதற்கு வழிவகுத்தும் இருக்கலாம், உதாரணமாக, சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில், “முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம், வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்ததுஎன்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருவதை காணலாம். அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்ததுஎன்று உணர்த்துகிறார்.


என்றாலும், அகநானூற்றுப் பாடல்களில் பழைய திருமணச் சடங்குகளை சொல்லும் பாடல்கள் இரண்டு (86,136) இருக்கின்றன. இரண்டு பாடல்களிலும் ஐயரோ, நெருப்போ இல்லை. ஒரு பாடல் மட்டும் கடவுளை கும்பிட்டதாக குறிக்கிறது. ஆனால் கடவுள் பெயர் இல்லை. தாலி இல்லை. ஆனால், திருமணம் நடத்த நல்ல நாள் நாள் பார்ப்பது, புதுத் துணி உடுப்பது, உற்றார், உறவினர் வருவது எல்லாம் இருக்கிறது. இரண்டு பாடல்களுமே உணவின் சிறப்பையும் முதல் இரவின் வர்ணனையையும் கூறுகிறது . பூவும், நெல்லும் சொரிந்த நீரில் மணமகள் நீராடப்பட்ட பின்னர் திருமணம் நடைபெற்றது. இந்நீரை முகந்து கொண்டு வருவதற்கும், அதை வாங்கி மணமகளின் தலையில் ஊற்றுவதற்கும் மங்கல மகளிரும் ஈடுபடுத்தப்பட்டமை காண்கிறோம். திருமண நாளன்று அரிசியும், உளுந்தும் கலந்த பொங்கல் உணவு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. உழுத்தம் பருப்போடு கூட்டி சமைத்த, குழைந்த பொங்கல் எனும் பெருஞ்சோற்றுத் திரளை இடையறாது உணவிட, பந்தலில் வரிசையாக மாலையிட்டு மணல் பரப்பியுள்ளனர் என்றும், திருமண நேரத்தில், முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறையாகத் தந்திட, மகனைப் பெற்ற தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று கற்பிலிருந்து வலுவாறு நன்றாகப் பல பேறுகளைத் தந்து, உன்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையவளாக ஆகுகஎன்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. எனவே திருமணச் சடங்குகளை நிகழ்த்த புரோகிதர்கள் ஈடுபட்டதாகச் எந்த சங்க இலக்கியக் குறிப்புகளும் இல்லை. என்றாலும் சங்க மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டியமைப் பற்றியும், மணமக்கள் தீவலம் வந்தமைப் பற்றியும், தெளிவாகக் கூறுகிறது. உதாரணமாக மங்கல வாழ்த்துப் பாடலில் வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போல் கற்புடையவளான கண்ணகியை, பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட்டக், வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே, கோவலன் கலியாணஞ் செய்து , இருவரும் சேர்ந்து தீயை வலஞ் செய்தனர் என


"வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை"

என்று பாடுகிறது. எது எப்படி ஆயினும்தாலிமங்கல அணிகளுள் மிக முக்கியப் பொருளென தமிழர்கள் இன்று கருதுகின்றனர். எனவே சங்க காலத்திற்கு அருகிய நிலையில் தாலியணியும் வழக்கு இருந்ததோ என கருத இடமுண்டு. தாலி பற்றிக் குறிப்பிடும் முதற் கல்வெட்டு கி.பி. 958-ஆம் ஆண்டுக்குரியது என தெரிய வருகிறது.  (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக். 131-132) இதனடிப்படையில், சிலர் தாலி எனும் மரபு தமிழ்மக்களுக்கு உள்ள மரபாக இருந்திருக்கிறது என்றும், வேறு சிலர் சங்க காலத்தில் தாலி அணியும் வழக்கமில்லை, எனவே அது பிற்சேர்க்கை எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.


எது எவ்வாறாயினும், இன்று தமிழர் திருமணச் சடங்கில் பொதுவாக பரிசம் போடுதல், முகூர்த்தக் கால் நடுதல், தாலி கட்டுதல் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. இவைகளில் திருமணத்திற்கான தொடக்க நிலைச் சடங்காக  மணமகன் வீட்டார் தம் உறவினருடன் பெண் வீட்டிற்குச் சென்று தாம்பூலம் மாற்றி மண ஒப்பந்தம் செய்து கொள்வது பரிசம் போடுதல் [betrothal or engagement ] எனப்படும். இதனை நிச்சயதார்த்தம் அல்லது நிச்சய தாம்பூலம் என்றும் கூறுவதுண்டு. இச்சடங்கு திருமணத்திற்கு முன் ஒரு நல்ல நாளில் பெண் வீட்டில் பொதுவாக நடை பெறும். இன்னார்க்கு இன்னார் என்று மணமக்களை மற்றவர்கள் அறிய உறுதி செய்வதே இச்சடங்கின் நோக்கமாகும்.


இதை அடுத்து,அந்த காலத்தில் மணப் பந்தல் போட்டு திருமணம் செய்ததால், அந்த பந்தல் போடும் தொடக்க விழாவாக , அந்த பந்தலின் ஒரு கால் முதலில் ஒரு நல்ல நாளில் நாட்டப் படுவதே முகூர்த்தக் கால் எனப்படுகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன், மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக இதை நடுவார்கள். மூங்கிலும் பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கையே இந்த சடங்கின் கருத்தாகும். "ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரிட்டு, மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்க" என்று மணமக்களை வாழ்த்தும் வழக்கமும் இதனால் ஏற்பட்டதே ஆகும்.


திருமணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல் (மஞ்சள் கயிறு கட்டுதல்) என்பது ஒரு முக்கிய இறுதி நிகழ்வு ஆகும். இங்கு மங்கல அணியான தாலியை ஒரு தாம்பூலத்தில் வைத்துத் தேங்காய், பூ, மஞ்சளில் புரட்டிய அரிசி இவற்றுடன் பெரியவர்களிடம் ஆசி வாங்குவர். பின்னர் கெட்டி மேளம் முழங்க, மங்கலப் பெண்கள் குலவை விட மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவார். தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போட வேண்டும் என்பது மரபாகும். பெரியோர்களிடம் அங்கீகாரத்தையும் வாழ்த்தையும் பெறுவதே தாலி கட்டுதலின் நோக்கமாகும். நாட்டுப்புற மக்களின் திருமணத்தில் வைதீக மரபுகள் (பிராமணர்கள் மந்திரம் ஓதுவது, வேள்வித்தீ வளர்ப்பது) இடம் பெறுவதில்லை என்பது இங்கு மனத்தில் கொள்ளத் தக்கது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 27 தொடரும்
ஆரம்பத்திலிருந்து அல்லது அடுத்த பகுதியை  வாசிக்க கீழே அழுத்துக....

No comments:

Post a Comment