"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 24


பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விடயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Cycle Rituals), கருவுறுதல் தொடங்கி இறப்பு வரை உள்ள பல சடங்குகள் ஆகும். இவற்றைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of Passage) என்றும் அழைப்பர். இவை அனைத்தும் எமது முன்னோர்கள் பாரம்பரியமாக எமக்கு தந்தவை, சில சில மாற்றங்களுடன் இன்றும் தொடர்பவை.
   
பொதுவாக, மனிதன் தோன்றிய பொழுதே சடங்குகளும் தோன்றியது எனலாம். உதாரணமாக அன்று வேட்டைக்கு போகு முன் ஒரு வேட்டை சடங்கு நிகழ்ந்தன என இன்று நாம் கல்வெட்டுக்கள் மூலமும் பாடல்கள் மூலமும் அறிகிறோம். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட மனிதன் வேட்டையில் விலங்குகள் அகப்பட வேண்டும் என்பதற்காக வேட்டைக்குச் செல்லும் முன்பு விலங்கு நடனம் ஆடினார்கள் என அறிகிறோம். சடங்குகள் சில நோக்கங்களுக்காக, சில நம்பிக்கை அடிப்படையில் அன்று உருவாகின. மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை, ஏன் அவன் இறந்த பின் கூட, அவனை நினைவு கூற, பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் அந்த மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறுகின்றன. உதாரணமாக- பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு இவைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பூப்பு சடங்கு பெண்களுக்கு மாத்திரமே நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்களில் 12 - 18 வயதுகளில் நிகழலாம். அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும், அதை தாம் வாழும் சமூகத்திற்கு உரைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.


பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலை அல்லது ஒருவர் தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல் என்று கூறலாம். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. எனினும் பெண்ணே கர்ப்பம் தரிப்பதால், அதற்கே முக்கியம் கொடுத்து சடங்கு கொண்டாட்டத்தை கையாண்டனர் எனலாம் அல்லது ஆணின் பங்கை அல்லது ஆண் பக்குவமடையும் நிலையை அல்லது பெண்களைப் போல வெளிப்படையாக இல்லாததால் அன்று சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறலாம். மனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. மேலும், புறநானுறு 312 இல் பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர் கூறுவது போலஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே", என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்ததாலும் ,பெண் அந்த கடமைக்கு தயார் என வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக, எனவே பெண்களுக்கு மட்டுமே பூப்பு சடங்கு கொண்டாடப் பட்டு ,அது வாழையடி வாழையாக இன்றும் தொடர்கிறது என நம்புகிறேன்.

இந்த வரிசையில் முதலில் வருவது "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற" என்று குறள் 61 இல் வள்ளுவர் கூறிய மக்கட் செல்வமாகும். கிடைத்தற்கு அரிய இம் மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும் சடங்குகளே பிறப்புச் சடங்குகள் ஆகும். இந்த வரிசையில் முதலில் வருவது கருவுறுதல் ஆகும். எனவே அந்த தமது வாரிசின் வருகையை, கருவுற்ற நல்ல செய்தியை, வலை காப்புடன் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். இது பெரும்பாலும் கருவுற்ற 7 அல்லது 9 ஆம் மாதத்தில், செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய கண்ணாடி வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர். வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு என்றும் சிலர் சொல்லுவர். மேலும் அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத் தானாம். வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும்

அதை தொடர்ந்து பிள்ளை பிறந்ததும் வருவது சேனை தொடுதலும், தொட்டிலிடுதலும், பெயர் இடுதலும் ஆகும். சேய்+நெய்+தொடுதல் என்றால், குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத் தொட்டு வைக்கும் வழக்கம் ஆகும். சேனை என்பதைக்குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ உணவுஎன்கிறது தமிழ் அகராதி.

குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும் என்பதால், பொதுவாக பலராலும் குறிப்பாக நாட்டுப்புற மக்களாலும் இது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழரின் தாலாட்டுப் பாடல்களில் இது குறித்த செய்திகளை நாம் தாராளமாக காணலாம்.

"பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே."

அடுத்து, குழந்தைகள் தொடர்பான சடங்குகளில், சிறப்பிடம் பெறுவது சோறு தீத்துதல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மற்றும் ஏடு தொடக்குதல் ஆகும். பிள்ளைக்குச் சோறு தீத்துவதிலே பல்வேறு நடைமுறைகள் இடத்துக்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் காணப்படுகின்றன. தாய்ப்பாலுடன் மட்டும் வளர்ந்த பிள்ளைக்கு மற்றைய உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கு முன்னர் முதல் தடவையாக பிள்ளைக்கு சோறு தீற்றுதல் நிகழ்ச்சி பொதுவாக ஏழு மாதமாகையில் நடை பெறுகிறது. சிலர் ஆலயத்திற்கு போயும் சிலர் தமது வீட்டிலேயும் இதை நடத்துவர். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் மாமனோ, தகப்பனோ,பேரனோ சிறிதளவு அமுதினை மசித்து குழந்தைக்குத் தீத்தி விடுவர். சில குடும்பங்களிலே உணவை ஒரு பெரிய தட்டிலே போட்டு பிள்ளையே தனது கையால் எடுத்துச் சாப்பிட விடுவர். இதனை 'அள்ளித் தின்ன விடுதல்' என்று அழைப்பர். சில பிள்ளைகள் சாப்பாட்டை எடுத்து வாயிலே வைக்கும். சாப்பாட்டைப் (சோறு) பிள்ளை வாயிலே வைக்காது விட்டால் தாயார் சிறிதளவு எடுத்துத் 'தீத்தி' விடுவார்.'தீத்துதல்' என்ற சொல் சில இடங்களிலே 'ஊட்டுதல்' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் நாட்டிலே 'ஊட்டுதல்'  என்ற சொல் வழக்காற்றில் உண்டு. யாழ்ப்பாணத்து பழக்க முறையில், சோறு 'தீத்தும்' சடங்கிற்குப் பின்னர் பல்லுக் கொழுக் கட்டை சடங்கு நடைபெறும். இது குழந்தைக்குப் பல்லுத் தோன்றியதும் நடைபெறும் சடங்காகும். குழந்தையை பாயில் அல்லது ஏதாவது விரிப்பு ஒன்றில் இருத்தி, குழந்தையின் தலையின் மேல் வெள்ளைத் துணியொன்றை போர்த்து,  அவித்த பல்லு கொழுக்கட்டைகளைச் சுளகில் அல்லது வெள்ளித்தட்டு அல்லது 'தாம்பாளம்' போன்ற ஒன்றில் எடுத்து வந்து, பொதுவாக தாய்மாமன் குழந்தையின் தலையிலே கொட்டுவார். தமிழர் பண்பாட்டில் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் ஏடு தொடக்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. யாழ்ப்பாணச் சமூகம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது, கொடுக்கிறது என்பதை இந்த நிகழ்வு இன்று வரை சிறப்பாக தொடர்வதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஏடுதொடக்கல் நிகழ்வு பெரும்பாலும் ஆலயங்களில், பாடசாலையில், பொது இடங்களில் அல்லது வீட்டில் நடைபெறும். இங்கு குழந்தைகளின் விரலைப்பிடித்து ஆனா ஆவன்னா என அரிசியில் எழுதப்பழக்குவர்.

அடுத்து வருவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு நடத்துவார்கள். பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது. உதாரணமாக,சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக் காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார் என அறிகிறேன். இப்படி தமிழர் காது குத்தி காதணிகள் அணிவதை உறுதி படுத்துவது போல, தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது என "காதொளிரும் குண்டலமும் கைக்குவளை -யாபதியும்,கருணை மார்பின் " என்று  கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் கூறுகிறது. வழிவழி வந்த இந்த பழக்கம் பின்னாளில் ஒரு சடங்காகவே மாறிவிட்டது. அதில் தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. உறவுகளில் அழிக்க முடியாத உறவு "தாய்மாமன்" உறவு என்பர். இங்கு இந்த உறவு தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். அப்படியான காது குத்தும் நாட்டுப் பாடல் ஒன்று உதாரணமாக கீழே தரப்பட்டு உள்ளது: 

"கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா
காதுகுத்தப் போறாகன்னு
கிண்ணியில் சந்தனமும்
கிளிமூக்கு வெத்தலையும்
தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு
கொண்டு வந்தார் தாய்மாமன்"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 25 தொடரும்..
அடுத்தப்பகுதி அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக 
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 25

0 comments:

Post a Comment